* அரச மட்டும் பொறுப்பேற்க முடியாது ; அமைச்சர் நிமால்
சபை நிருபர்கள்
விடுதலைப் புலிகளின் குற்றங்களை மறைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாமென ஜே.வி.பி.யிடம் கோரிக்கை விடுத்த சபை முதல்வரும் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இடம்பெறும் குண்டுவெடிப்புகளுக்கு அரசு மட்டும் பொறுப்பேற்க முடியாதெனவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சபாநாயகரின் அனுமதியுடன் விஷேட கூற்றொன்றை வெளியிட்ட போதே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது;
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை உரையாற்றிய ஜே.வி.பி.எம்.பி. விஜிதஹேரத் , அரசதரப்பு பிரதமகொரடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் படுகொலைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டுமெனத் தெரிவித்தார்.
ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே படுகொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தி விடுதலைப் புலிகள் ஆதரவு இணையத்தளங்கள் செய்திகளை வெளியிட்டு மறைமுகமாக அந்தக் கொலைக்கு உரிமை கோரியிருந்தன. இவ்வாறான நிலையில் அமைச்சர் ஜெயராஜின் படுகொலைக்கு அரசாங்கமே பொறுப்பெனக்கூறி புலிகளின் குற்றங்களை மறைப்பதற்கு ஜே.வி.பி.யினர் முற்படக்கூடாது.
ஜெயராஜின் படுகொலை தொடர்பில் ஜே.வி.பி.க்கு ஏதாவது சந்தேகங்கள் இருக்குமாகவிருந்தால் அவற்றை ஜெயராஜ் படுகொலை தொடர்பில் விசாரணை நடத்தும் விசாரணைக்குழுவிடம் தெரிவிக்க வேண்டுமென வேண்டுகிறேன்.
இதேவேளை, கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் இடம்பெறும் குண்டுவெடிப்புகள் தொடர்பில் அரசே மட்டும் பொறுப்புக்கூற முடியாது. நாம் நடைமுறைப்படுத்தியுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகளை கடைப்பிடிக்க சில பயணிகள் மறுப்பதும் இவ்வாறான சம்பவங்களுக்கு காரணமாகிவிடுகின்றன.
நான் சுவிற்சர்லாந்தில் நின்றபோது லண்டன் நகரில் குண்டொன்று வெடித்தது. எனவே, இவ்வாறான செயலைக் கட்டுப்படுத்த நாம் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.
விடுதலைப் புலிகளால் கொழும்பில் பாரிய தாக்குதல்கள் எதனையும் நடத்த முடியாது. அந்தளவுக்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன . தற்போது நடைபெற்றுவரும் குண்டுவெடிப்புகளை தடுப்பது தொடர்பில் சகல கட்சிகளுடனும் கலந்துரையாடுவதற்கு அரசு தயாராகவுள்ளது. அத்துடன் , பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள், அரசதரப்பு, எதிர்க்கட்சியினரிடையேயான கலந்துரையாடலொன்றை ஏற்படுத்தித் தரவும் நாம் தயாராகவுள்ளோம்.
இக்குண்டு வெடிப்புகள் தொடர்பில் மகிழ்ச்சியடைபவர்களும் இங்குள்ளனர். அவர்களை நினைத்து நாம் மிகவும் கவலையடைகின்றோம்.