ஒளிப்பதிவு இணைப்பு மூலம் சாட்சியத்தைப் பெற்றுக்கொள்வதை இடைநிறுத்தும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு சட்டத்தரணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு வெளியே வசிக்கும் நேரடி சாட்சிகளிடமிருந்து சாட்சியங்களைப் பெற்றுக் கொள்ள ஒளிப்பதிவு இணைப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளை அவதானிக்க நியமிக்கப்பட்டிருந்த சர்வதேச மாண்புமிக்கோர் குழுவினர் தமது பணிகளை முடிவுக்கு கொண்டு வந்ததையடுத்து ஒளிப்பதிவு இணைப்பு வசதியும் கைவிடப்பட்டது.
விசாரணை ஆணைக்குழுவின் இந்தத் தீர்மானமானது விசாரணை தொடர்பான நம்பகத் தன்மையை பாரதூரமான வகையில் பாதிக்கும் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், முன்னாள் எம்.பி.ஜோசப் பரராஜசிங்கம், மூதூரில் தன்னார்வ தொண்டர் நிறுவனப் பணிப்பாளர்கள் 17 பேர், 5 திருமலை மாணவர்கள் ஆகியோரின் படுகொலைச் சம்பவங்கள் உட்பட 15 பாரதூரமான உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து விசாரணை செய்யும் பொறுப்பு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
சாட்சியத்தை பெற்றுக் கொள்வது தொடர்பான முன்னொருபோதுமில்லாத இந்த நடைமுறையை தொடர்ந்து மேற்கொள்வதற்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறவேண்டியிருப்பதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் நிசங்க உடலகம பிரிட்டிஷ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் சிங்கள சேவையான சந்தேசியாவுக்கு கூறியுள்ளார்.
வழக்குக்கான ஆதாரமாக ஒளிப்பதிவு இணைப்பு மூலமான சாட்சியத்தை பயன் படுத்த முடியுமா என்பது தொடர்பான கேள்வி குறித்து பாராளுமன்றத்திற்கு சட்ட மூலப் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
சபாநாயகர் இதனை ஆராய்ந்து இது சாத்தியப்படுமா என்பது குறித்து தீர்மானிப்பாரென உடலகம கூறியுள்ளார்.
இந்தச் சட்ட மூலத்திற்கு அங்கீகாரம் கிடைக்கும் வரை பொறுத்திருக்குமாறு ஜனாதிபதி செயலகம் கூறுகின்றது. அங்கீகாரம் கிடைத்தால் இந்த நடவடிக்கையை நாம் முன்னெடுத்துச் செல்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுவதைப் போன்று விசாரணையின் நம்பகத் தன்மை தொடர்பாக பிரச்சினை எதுவும் இல்லை. இந்த விசாரணைகளுக்கு நாம் ஒருபோதும் ஒளிப்பதிவு இணைப்பு சாட்சியத்தை பயன் படுத்தவில்லை என்று அவர்கள் எமக்கு கூறினால் விசாரணை பாதிப்படையுமென நாம் கூறுவோம். ஆனால் அது தொடர்பாக அங்கீகாரம் கிடைக்கும்வரை இதனை நாம் முன்னெடுக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.