கட்டுப்பெத்தவில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலை கடுமையாக கண்டித்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இனவெறுப்பையும் வன்முறையையும் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டு வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் ஆத்திரத்தை மூட்டும் நடவடிக்கைகளுக்கு இடமளிக்காமல் அமைதி பேணுமாறு நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக ஜனாதிபதி ராஜபக்ஷ மேலும் தெரிவித்திருப்பதாவது;
கட்டுப்பெத்தவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பானது விடுதலைப் புலிகளின் குரூரத்தனத்தையும் மனித உயிரை மதிப்பதிலுள்ள குறைபாட்டையும் மீண்டுமொரு முறை வெளிப்படுத்தியிருக்கிறது. இச்சம்பவத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு எனது அனுதாபங்களை தெரிவிப்பதுடன், காயமடைந்தவர்கள் யாவரும் துரிதமாக குணமடைய மும்மணிகள், தெய்வங்களின் ஆசிகிட்டப் பிரார்த்திக்கின்றேன்.
புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட கொடூரத்தனமான இந்த நடவடிக்கையை கண்டிப்பதுடன், பொதுமக்களை இலக்கு வைத்த இந்தக் கோழைத்தனமான நடவடிக்கையானது வடக்கில் இராணுவ ரீதியில் புலிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவால் தோன்றிய குழப்பமான நிலைமை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த வாரங்களில் பொதுமக்கள் பாராட்டத் தக்க விதத்தில் விழிப்புடனும் பொறுப்புணர்வுடனும் செயற்பட்டதால் வாகனங்கள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்ட குண்டுகள் மற்றும் மறைவிடங்களில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், புலிகளுடன் தொடர்புடையவர்களெனக் கருதப்படுபவர்களும் கைதுசெய்யப்பட்டனர்.
நாகரிகமுள்ள சகல சமூகங்களும் வன்முறைகள், பயங்கரவாதத்தில் புலிகள் கொண்டுள்ள ஈடுபாட்டின் யதார்த்தத்தை தற்போது பார்க்க முடியும்.
அத்துடன் இலங்கையானது பயங்கரவாத சக்திகளுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து எதிர்கொண்டுள்ளதையும் ஜனநாயகத்தையும் நாகரிகத்தையும் பாதுகாக்க வேண்டிய எமது முயற்சிகளையும் மீண்டும் இச்சம்பவம் முன்னிலைப்படுத்தியிருக்கிறது.
மேலும், இக்குரூரத்தன்மையானது தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டி விடும் புலிகளின் முயற்சியை வெளிக்காட்டுகின்றது. தமிழ் மக்கள் விடுதலையாளர் என்று அழைக்கப்படும் பயங்கரவாதத்தினால் அடிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், அதன்மூலம் ஆதாயம் பெற புலிகள் எதிர்பார்த்திருக்கின்றனர். ஆகவே, இனவெறுப்பு, வன்முறைகளைத் தூண்டும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு இடமளிக்காமல் மக்கள் அமைதி பேண வேண்டும்.
நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை அழித்தொழிக்கும் பொலிஸார் பாதுகாப்புப் படையினருக்கு தொடர்ந்தும் உதவியளிக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருக்கிறார்.