* 20 பேர் கடும் காயம்
கண்டி, செங்கடகல நிருபர்கள்
கண்டி கட்டுகஸ்தோட்டை பொல்கொல்லை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை தனியார் பயணிகள் பஸ்ஸினுள் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டதுடன் 20 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
பொல்கொல்லை திறந்த பல்கலைக்கழகத்துக்கு அருகிலேயே நேற்று மாலை 3.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வத்துகாமம் பகுதியிலிருந்து கண்டி நோக்கி சுமார் 25 பயணிகளுடன் வந்த தனியார் பஸ்ஸினுள்ளேயே சக்திமிக்க குண்டொன்று வெடித்துள்ளது.
பஸ்ஸின் பின்புறத்தில் இந்தக் குண்டுவெடித்ததால் பஸ்ஸின் பின்புறம் முற்றாகச் சேதமுற்று சின்னாபின்னமாகியுள்ளது. முன்புறமும் பலத்த சேதமடைந்துள்ளது.
இக்குண்டுவெடிப்பில் ஒருவர் பஸ்ஸினுள்ளேயே உயிரிழந்ததுடன், பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 21 பேரில் ஒருவர் உயிரிழந்ததாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
பஸ்ஸினுள் ஏற்பட்ட குண்டுவெடிப்பால் பஸ் நடத்துநரும் சாரதியும் காயமடைந்துள்ளனர். எனினும், சாரதி பஸ்ஸை வீதியின் கரையோரமாக நிறுத்தியதால் விபத்து எதுவும் ஏற்படவில்லை.
குண்டுவெடிப்பையடுத்து, படுகாயமடைந்தவர்கள் உடனடியாக அப்பகுதிக்கு வந்த வாகனங்கள் மூலமும் அம்புலன்ஸ்கள் மூலமும் கண்டி ஆஸ்பத்திரிக்கு அவசர அவசரமாக அனுப்பப்பட்டனர்.
அத்துடன், அப்பகுதியில் மேலதிக படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டதுடன் அவ்வீதியும் மூடப்பட்டு போக்குவரத்துக்கள் திசை திருப்பப்பட்டன.
குண்டுவெடிப்பையடுத்து அவ்விடத்திற்கு கண்டி மாநகர சபையின் தீயணைப்புப் படைப் பிரிவும் வந்துள்ளது.
இதேநேரம், குண்டுவெடிப்பையடுத்து அப்பகுதியில் பெருமளவு மக்கள் குவிந்திருந்தனர். இவர்களில் ஒருவரது நடவடிக்கை சந்தேகத்திற்கிடமாயிருந்ததாகக் கூறி அங்கு நின்ற சிலர் அவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவரிடமிருந்து நஞ்சுப் போத்தலொன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் குண்டுவெடிப்பு தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள அதேநேரம் அந்தப் பகுதியில் தேடுதல்களும் நடத்தப்பட்டுள்ளன.