* 21 பேர் பலி; 84 பேர் காயம்
மொறட்டுவ கட்டுப்பெத்த பல்கலைக்கழகத்திற்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை காலை தனியார் பயணிகள் பஸ் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டதுடன் 84 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கட்டுப்பெத்தவில் பிலியந்தலை கட்டுப்பெத்த வீதியில் சைலம்பிம்பராமய விகாரைக்கும் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலேயே நேற்றுக் காலை 7.40 மணியளவில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
அலுவலகங்களுக்குச் செல்வோர், பல்கலைக்கழக மாணவர்களென நூற்றுக்கும் மேற்பட்டோர் பயணம் செய்த தனியார் பயணிகள் (வழி இலக்கம் 255) பஸ்ஸே இந்தத் தாக்குதலுக்கிலக்கானது.
வீதியோரத்தில் சிறிய பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கிளைமோரே , தூர இருந்து இயக்கும் கருவிமூலம் இயக்கி வெடிக்க வைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பஸ்ஸின் இடப்புறத்தில் முன்வாசல் பகுதியே இந்தத் தாக்குதலில் பலத்த சேதமடைந்துள்ளது.
பெருமளவு பயணிகள் இந்த பஸ்ஸில் பயணம் செய்ததால் பஸ்ஸின் இரு வாசல்களதும் மிதிபலகையில் பலர் நெருக்கியடித்துக் கொண்டு பயணம் செய்துள்ளனர்.
இந்தத் தாக்குதலின்போது இரு வாசற்படிகளிலும் நின்று பயணம் செய்தவர்களில் பலர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதுடன், வாசற் பக்கமாக இருக்கைகளில் இருந்தும் பஸ்ஸினுள் நின்றும் பயணம் செய்தவர்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பஸ் மீதான தாக்குதலால் அந்தப் பிரதேசம் பெரிதும் அதிர்ந்ததுடன் அதைத் தொடர்ந்து பஸ் பயணிகள் மரண ஓலத்தை எழுப்பியதாக அந்தப் பகுதியில் சென்ற பலரும் தெரிவித்தனர்.
தாக்குதலையடுத்து பஸ் உடனடியாக நிறுத்தப்படவே மிதிபலகைகளில் பயணம் செய்து தாக்குதலில் சிக்கிய பலரும் அவ்விடத்திலேயே இறந்து வீழ்ந்தனர்.
பஸ்ஸின் முன்புறக் கண்ணாடிகளும் பக்கவாட்டுக் கண்ணாடிகளும் நொருங்கிச் சிதறின. பின்பக்கக் கண்ணாடியும் உடைந்து போனதுடன் பஸ்ஸின் இடப்பக்கத்தில் முன்புற வாசற்படி பகுதியெங்கும் கிளைமோர் தாக்குதலால் ஏற்பட்ட சிறு துளைகள் காணப்பட்டன.
இந்தத் தாக்குதலையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த பொதுமக்களும் பொலிஸாரும் பஸ்ஸிற்குள்ளிருந்தவர்களை அவசர அவசரமாக வெளியேற்றியதுடன் படுகாயமடைந்தவர்களை உடனடியாக அங்கு வந்த வாகனங்கள் மூலம் களுபோவில ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து , களுபோவில ஆஸ்பத்திரியிலிருந்து வந்த அம்புலன்ஸ்களிலும் படு காயமடைந்தோர் ஏற்றப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டனர்.
தாக்குதலையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பெருமளவு படையினரும் பொலிஸாரும் பிலியந்தலை கட்டுப்பெத்த வீதியை உடனடியாக மூடி வாகனப் போக்குவரத்துகளை வேறு பாதைகளூடாக திசை திருப்பவே அப்பகுதியெங்கும் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
வீதியோரத்திலிருந்து சுமார் ஐந்தடி தூரத்தில் சிறிய புதர்களுக்கிடையே மறைத்து வைக்கப்பட்டே கிளைமோர் வெடிக்க வைக்கப்பட்டதால் அவ்விடத்தில் பெரும் குழியொன்று காணப்பட்டது.
பஸ்ஸினுள்ளிருந்தே குண்டு வெடித்துள்ளதாக முதலில் கருதப்பட்டபோதும் பின்னர் அது கிளைமோர் தாக்குதலெனத் தெரியவந்தது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோரில் எண்மர் பெண்கள், 13 பேர் ஆண்கள். பல் கலைக்கழக மாணவனொருவரும் கொல்லப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்தவர்களில் 80 பேர் களுபோவில ஆஸ்பத்திரியிலும் 13 பேர் லுணாவ ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டனர். களுபோவில ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டோரில் மிக ஆபத்தான நிலையிலிருந்த நால்வர் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான பஸ்ஸினுள்ளே சகல பகுதிகளிலும் பெருமளவு இரத்தம் தேங்கி நின்றது . பஸ்ஸிற்கு வெளியேயும் வீதியில் பெருமளவு இரத்தம் வழிந்தோடி உறைந்து காணப்பட்டது.
ஊரடங்கு உத்தரவு பாரிய தேடுதல்
இந்தச் சம்பவத்தையடுத்து மொறட்டுவ, கட்டுப்பெத்த , தந்தெனியவத்தை பகுதியில் காலை 9 மணி முதல் பொலிஸாரால் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டு மாலை 6 மணி வரை அமுலிலிருக்குமென ஒலி பெருக்கிகள் மூலம் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பெருமளவு படையினரும் பொலிஸாரும் அந்தப் பகுதிகளில் குவிக்கப்பட்டு வீடு வீடாகப் பாரிய தேடுதல்கள் நடைபெற்றன.
இந்தத் தேடுதலின்போது மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உட்பட பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்தத் தாக்குதலை நடத்தியவர் அங்கிருந்து வேறு பகுதிகளுக்குச் செல்வதைத் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மொறட்டுவ மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.