முக்கோணத் தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு கடும் சவால் கொடுக்கும். ஆசியக் கிண்ணத்தில் வெற்றிபெற இத்தொடர் சிறந்த பயிற்சியாக இருக்குமென பயிற்சியாளர் ஜென்லோசன் தெரிவித்துள்ளார்.
ஆசிய கிண்ணப் போட்டிகள் கராச்சி மற்றும் லாகூரில் ஜூன் 24 ஆம் திகதி தொடங்குகிறது. அதற்கு முன்பாக நாளை 8 ஆம் திகதி பங்களாதேஷில் நடக்கும் முக்கோணத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் , பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.
இத்தொடர் பற்றி பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் லோசன் கூறியதாவது;
முக்கோணத் தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு கடும் சவாலாக இருக்கும். ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றுவதே எங்கள் அணியின் முழுநோக்கம். இதற்கு முக்கோணத் தொடர் சிறந்த பயிற்சியாக இருக்கும். இந்தத் தொடரில் இந்திய அணியின் பலம், பலவீனம் ஆகியவற்றைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப வியூகங்களை வகுத்து வெற்றிபெறுவோம்.
தற்போது நடந்து முடிந்த ஐ.பி.எல்.தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக விளையாடியது எங்கள் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. ஒருநாள் மற்றும் "ருவென்ரி 20' போட்டிகள் முற்றிலும் மாறுபட்டது. இதனை எங்கள் அணிவீரர்கள் தெளிவாகப் புரிந்துகொண்டு சிறப்பாக செயற்படுவார்களென்றார்.