டிரன்பிரிட்ஜ் டெஸ்டில் பீற்றர்சன் சதம் அடித்து கைகொடுக்க இங்கிலாந்து அணி சரிவிலிருந்து மீண்டது.
இங்கிலாந்து சென்றுள்ள நியூஸிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் "டிரா' வில் முடிந்தது. இரண்டாவது டெஸ்டில் வென்ற இங்கிலாந்து தொடரில் 10 என்ற முன்னிலையில் இருக்கிறது.
இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் நேற்று முன்தினம் டிரன்பிரிட்ஜ் நகரில் தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து கப்டன் வெட்டோரி முதலில் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார்.
இங்கிலாந்து அணிக்கு தொடக்க வீரர்களாக வந்த ஸ்டிராஸ் குக் ஜோடி ஏமாற்றமளித்தது. மோசமாக விளையாடிய குக் (6) , மில்ஸ் பந்தில் "கிளீன்' போல்டானார். அடுத்து வந்த கப்டன் வோகன் பொறுப்பில்லாமல் ஆடினார். இவர் 16 ஓட்டங்களுடன் திருப்தியடைந்து பெவிலியன் திரும்பினார். இவர்களைத் தொடர்ந்து ஓரளவு ஓட்டங்கள் எடுத்த ஸ்டிராஸும் ஆட்ட மிழந்தார். மந்தமாக விளையாடிய இவர் 5 பவுண்டரிகள் உட்பட 97 பந்தில் 37 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து வந்த பெல், கொலிங்வூட் இருவரும் "டக்' அவுட்டாக இங்கிலாந்து திணறத் தொடங்கியது.
இந்நிலையில், களமிறங்கிய அம்புரோஸ் , பீற்றர்சனுடன் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய பீற்றர்சன் அரைச்சதமடித்தார். தொடர்ந்து அபாரமாக ஆடிய பீற்றர்சன் சதமடித்தார்.
தேநீர் இடைவேளைக்குப் பின்னர் இங்கிலாந்து முதல் இனிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பீற்றர்சன் 112, அம்புரோஸ் 56 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலிருந்தனர். நியூஸிலாந்து சார்பில் மில்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.