பிரெஞ்ச் ஓப்பன் டெனிஸ் தொடரின் இறுதியாட்டத்தில் செர்பியாவின் இவானோவிச், ரஷ்யாவின் டினரா சபினா மோதுகின்றனர். முதல் கிண்ணத்தை வெல்ல இருவரும் தயாராக இருப்பதால் இன்று நடக்கும் இறுதியாட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும்.
ஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் டெனிஸ் தொடரான பிரெஞ்ச் ஓப்பன் பாரிஸில் நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த விறுவிறுப்பான அரையிறுதியில் ரஷ்யாவின் டினரா சபினா (தரவரிசையில் 13), தரவரிசையில் 4 ஆவது இடத்திலிருக்கும் சகநாட்டு வீராங்கனை ஸ்வெட்லானா கஸ்னெட்சோவாவை எதிர் கொண்டார்.
ஷரபோவா (நான்காவது சுற்று), டெமன்டிவா (காலிறுதி) என முன்னணி வீராங்கனைகளை வென்று நல்ல போர்மில் இருந்த சபினா கலக்கினார். முதல் செட்டில் அசத்தலாக 63 என தன்வசப்படுத்தினார். இரண்டாவது செட்டையும் 62 என வென்றார். இறுதியில் 63, 62 என்ற நேர் செட்களில் வென்றார்.
நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தரவரிசையில் இரண்டாவது இடத்திலிருக்கும் செர்பியாவின் இவானோவிச், சகநாட்டு வீராங்கனை ஜான்கோவிச்சை எதிர் கொண்டார். இதில், கடந்த முறை இறுதியாட்டம் வரை முன்னேறிய அனுபவம் கொண்ட இவானோவிச் சிறப்பாக விளையாடினார்.
முதல் செட்டை 64 என வென்றார். இதையடுத்து சுதாகரித்துக் கொண்ட ஜான்கோவிச் இரண்டாவது செட்டை 63 என தன்வசப்படுத்தினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை இவானோவிச் 64 என கைப்பற்றினார். இறுதியில் 64, 34, 64 என்ற செட்களில் வென்றார். இவர் இறுதியாட்டத்தில் சபினாவுடன் மோதுகிறார்.