கவீரன்
மகிந்த எதிர்க்கட்சித் தலைவர் ஆன காலத்தில் இருந்தே பிரதமராக யாரைப் போடுவது என்பது சம்பந்தமாகப் பலத்த போட்டி எழுந்தது. வெளிநாட்டு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் அறிவு, ஆற்றல், அனுபவம், வயது முதிர்ச்சி ஆகியவற்றால் முன்னணியில் இருந்தார். ஆனால், அவருக்குத் தேர்தல் தொகுதி என்று ஒன்று இருக்கவில்லை. அத்துடன் அவருக்குத் தமிழ்ப் பெயர் ஒன்று இருந்தது! வைகாசி விசாக தினத்தை உலகளாவிய ரீதியில் பொது விடுமுறையாக்க அவர் நடவடிக்கை எடுத்திருப்பினும் அவரை பௌத்தர் என்று எவரும் ஏற்பதாகவும் இல்லை. அடுத்து அநுர பண்டாரநாயக்க பிரதமர் பதவி தமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். மூன்றாவதாக மகிந்த ராஜபக்ஷவும் போட்டியில் இருந்தார். பதவிக்குரிய தகைமைகள் முன்னைய இருவருக்துங் கூட இருந்தங் கீழ் மட்ட கட்சி அங்கத்தவரிடையே கூடிய ஆதரவைப் பெற்றிருந்த மகிந்த ராஜபக்ஷவே, 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் ஆறாந் திகதியன்று இலங்கையின் 13 ஆவது பிரதமராகச் சந்திரிகாவால் நியமிக்கப்பட்டார். அறிவு ஆற்றலிலும் பார்க்க இன்றைய சுயநலச் சூழலில் அரவணைப்பு அரசியலே அரியணை ஏற உதவுகின்றது. "என்ன வேண்டும்? கேட்டுக்கொள். தருகின்றேன். ஆனால் என்னுடன் சேர்ந்து விடு. சேர்ந்த பின் என்ன வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அனுபவி. ஆனால் என்னைச் சுதந்திரமாக வேண்டியவாறு வேட்டையாட விட்டு விடு.' இதுவே அரவணைப்பு அரசியலின் சித்தாந்தம்.
மகிந்த ராஜபக்ஷவின் பிரதமர் கால கட்டத்திலேயே கடல்கோள் அனர்த்தம் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏற்பட்டது. பல நாடுகளில் இருந்தும் பல விதமான உதவிகளை நாம் பெற்றோம். இது சம்பந்தமான பிறநாட்டு உதவிப் பணம் எட்டு இலட்சத்தி முப்பதாயிரம் அமெரிக்க டொலர்கள் மகிந்தவினால் பிரத்தியேக வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டிருந்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டிருப்பினும் அதில் ஒரு சதமேனும் அவர் எடுக்கவில்லை என்று மகிந்தவின் செயலாளர் தெரிவித்ததை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
பிரதமராக மகிந்த தேர்ந்தெடுக்கப்பட்ட காலந்தொடக்கம் அவருக்குச் சுக்கிர திசை என்றே கூறவேண்டும். இங்கு சுக்கிர திசை என்ற சொல் சோதிட ரீதியாகக் கூறப்படவில்லை. அதிர்ஷ்டயோகம் என்ற அடிப்படையிலேயே பாவிக்கப்படுகின்றது. சாதாரண மக்களுக்குக் கிடைக்காத சட்ட ஏற்பு சுனாமி விடயத்தில் மகிந்தவுக்குக் கிடைத்தது. என் எஜமானனின் பணத்தை நான் எடுத்துக் கொண்டு வங்கியில் வைப்பில் வைக்கச் செல்கின்றேன். அவரின் வங்கிக் கணக்கில் அப்பணத்தைச் சேர்க்காமல் இன்னுமொரு வங்கிக் கணக்கை நான் திறந்து அதில் அப்பணத்தைப் போடுகின்றேன். இதுபற்றி என் எஜமானனுக்கு எதுவுங் கூறாது விட்டு விட்டு அவர் அதைக்கண்டு பிடித்துக் கேட்கும் போது "அது உங்கள் பணந்தான். இந்தாருங்கள் உங்கள் பணம். நான் ஒரு சதமும் அதில் எடுக்கவில்லை' என்று கூறினால் எஜமானன் அக்கூற்றை ஏற்றாலுஞ் சட்டம் ஏற்காது. ஆனால், சுக்கிர திசை சட்டத்தைக் கூட ஏற்க வைத்தது. அதே சுக்கிர திசையோ அல்லது பூர்வீகப் புண்ணியமோ மிக விரைவில் ஜனாதிபதித் தேர்தலைக் கொண்டு வந்தது. இதற்குக் காரணம் சந்திரிக்காவின் சுக்கிர திசையில் அந்திம காலம் நெருங்கியிருந்தமையே!
சந்திரிகாவின் கட்சியில் இருந்து மகிந்த ராஜபக்ஷவை தேர்தலில் களம் இறக்க வைத்தது மகிந்தவின் அதே சுக்கிர திசை! எதிர்த்துப் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க நிட்சயமாகத் தேர்தலில் வெல்லுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருக்க வட கிழக்குத் தமிழ்ப்பேசும் மக்களைத் தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு விடுதலைப் புலிகள் நிர்ப்பந்தத்தால் மிகச் சொற்ப வித்தியாசத்தால் மகிந்த இராஜபக்ச தேர்தலில் 17112005 அன்று வென்றார்.
வாக்களித்தவர்களின் தொகையில் ஐம்பது சதவிகிதத்திற்கு மிகச்சில வாக்குகளை அதிகமாகப் பெற்றே தேர்தலில் வென்றார். வடமாகாண மக்களின் வாக்குகள் இருவருக்குமே கிடைக்காத பட்சத்தில் பெரும்பான்மை சிங்கள மக்கள் மகிந்தவையே தேர்ந்தெடுத்தனர். மூன்று மாதங்களுக்குள் சமாதானத்தை ஏற்படுத்துவேன் என்று கூறியே மகிந்த பதவிக்கு வந்தார். ஆனால் நடந்து என்ன?
2005 ஆம் ஆண்டு டிசெம்பர் 25 ஆம் திகதியன்று மட்டக்களப்பு கிறிஸ்தவ தேவாலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பாராளுமன்ற அங்கத்தவர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களைத் தேவாலயத்தினுள் உள்நுழைந்த ஆயுததாரிகள் சுட்டுக் கொன்று விட்டுத் தப்பிச் சென்றனர். இதுவரை யார் இந்தச் செயலில் ஈடுபட்டனர் என்று பொலிஸார் கண்டுபிடிக்கவில்லை. தொடர்ந்து ரவிராஜ் என்ற பாராளுமன்ற அங்கத்தவரும் அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள் சுட்டுக் கொல்லப்பட்டார். குற்றவாளிகள் இன்னுந் திரைமறைவில். 2005 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை (2008 மே மாதம் வரையில்) பல கொலைகள், கொள்ளைகள், கடத்தல்கள், கற்பழிப்புகள், வன்முறைச் செயல்கள் தமிழ்ப்பேசும் மக்களைப் பாதித்து வருகின்றன. போர்நிறுத்த உடன்பாட்டில் இருந்து விலகி மகிந்தவின் கீழான அரசாங்கம் வடகிழக்குப் போரை உக்கிரமாக நடத்தி வருகின்றது. கிழக்கை மீட்டு விட்டோம் என்று கூறித் தேர்தலை நடத்தி தமிழ்ப்பேசுந் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் பாரிய பிளவை ஏற்படுத்தி வருகின்றது. உண்மையினை வெளிப்படுத்தும் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுகின்றார்கள். நிமலராஜன், சிவராம் போன்ற பலர் கொலை செய்யப்பட்டும் உள்ளார்கள். இதுவரையில் இந்தக் கொலைகளுக்கும் கொள்ளைகளுக்கும் கடத்தல்களுக்குங் காரண கர்த்தாக்கள் யார் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. எமது காவல்துறையினர் அத்தகைய கையாலாகாதவர்கள் என்று நாங்கள் கணிப்பீடு செய்ய முடியாது. ஆனால் கைகள் கட்டப்பட்ட நிலையிலேயே அவர்கள் கடமையாற்றுகிறார்கள் என்று கொள்ள இடமிருக்கின்றது. உண்மைகளை வெளிப்படுத்தினால் வீட்டுக்கு வெளியில் வெள்ளை வான்கள் வந்து நிற்கும் என்று பத்திரிகையாளர்கள் நடுங்கும் அளவுக்கு நாட்டரசாங்கம் நலிவுற்றிருக்கின்றது.
பயங்கரவாதம் என்ற பேயைக்காட்டி சர்வாதிகார வல்லாட்சிக்குப் பலமான அத்திவாரம் அமைக்கப்படுகின்றதோ என்று எண்ண வேண்டியுள்ளது. என்றாலும் இரண்டு விடயங்கள் பற்றிக் குறிப்பிட வேண்டும். ஒன்று, வெளிநாட்டரசாங்கங்கள் நாட்டில் நடப்பதை அறிந்து கொண்டுள்ளதால் தமது எதிர்ப்பைத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளன. அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் அங்கம் வகிக்கும் வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது. இந் நாட்டின் மனித உரிமை மீறல் பற்றிய ஒவ்வாத பெரும் புகழே இதற்குக் காரணம் என்று கூறலாம்.
இரண்டு, நாட்டில் நடக்கும் நடப்புக்கள் எந்த அளவுக்கு இலங்கையின் தமிழ்ப் பேசும் மக்களின் விமோசனத்தை, விடுதலையைத் துரிதமாக்க உதவப் போகின்றன என்பது கணவன் தொடர்ந்து மனைவியை மிகக் கேவலமாக அடித்துத் துன்புறுத்தினால் சுற்று வட்டாரத்தில் இருப்பவர்கள் அவர்களின் திருமண நீக்கத்தை வரவேற்பார்கள் என்பது உலக நடத்தை.
மகிந்தவின் ஆட்சி பற்றி அதிகம் எழுத வேண்டிய அவசியம் இல்லை. அத்தியாவசியப் பொருட்களின் ஆகாயத்தை முட்டும் இன்றைய விலையேற்றமே ஆட்சி பற்றிய விமர்சனமாக அமைந்துள்ளது. ஆனாலுந் தமிழர்களின் விடிவு காலத்தை விரைவாக்குங் கைங்கரியத்தில் அவர் ஈடுபட்டுள்ளார் என்றே கொள்ள வேண்டியுள்ளது. அது எப்படி என்பது பற்றி இனிவரும் கட்டுரையில் ஆராய்வோம்.