யாழ். குடா நாட்டில் அண்மைய நாட்களாக இடம்பெற்று வரும் பயங்கரக் கொள்ளைச் சம்பவங்களின் பின்னணியிலிருந்து செயற்படும் மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி "ஏ9' நெடுஞ்சாலைக்கு மூடுவிழா நடந்ததன் பின், யாழ். குடாநாட்டில் பயங்கர கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வந்தன. எனினும், 2007 ஆம் ஆண்டுகளின் பின் ஆறு மாதங்களில் அவை படிப்படியாக வீழ்ச்சி கண்டு 2008 முற்பகுதிகளில் முற்றாக இல்லாதிருந்ததென்றே கூறலாம்.
எனினும், 2008 ஆம் ஆண்டில் முதல் அரை ஆண்டு உருண்டோடி விட்ட நிலையில் தற்போது மீண்டும் கொள்ளைச் சம்பவங்கள் தலை தூக்கி வருகின்றமை வேதனை தரும் விடயமாகவே அமைந்திருக்கின்றது.
ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நள்ளிரவு வேளைகளில் வீடு வீடாகச் சென்று கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் இந்த மர்ம நபர்கள் யார்? என்பதே இன்று யாழ். குடாநாட்டு மக்கள் மனங்களில் எழும் கேள்வியாக அமைந்திருக்கின்றது.
இரவு 9 மணி ஆனதும் ஊரடங்குச் சட்டம் எனும் கடிவாளம் குடாநாடு முழுவதையும் ஆக்கிரமிக்கும் வகையில் பூட்டப்பட்டு விடும். இந்நேரம் தலையிடி, காய்ச்சல் என்றால் கூட அருகிலிருக்கும் கடை ஒன்றுக்குப் போக அச்சங் கொள்ளும் மக்கள் மத்தியில் அதிசய ரூபம் எடுத்து வரும் இந்தக் கள்வர் எனும் மர்ம நபர்கள் யார்? இது குடாநாட்டிலுள்ள பொருள் வளம் படைத்த கல்வி அறிவுமிக்க உயர் உத்தியோகம் பார்ப்பவர்களின் கேள்வியாகும்.
அண்மையில் கொக்குவில் மற்றும் கோண்டாவில் பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களை அச்சங் கொள்ள வைத்திருக்கின்றது. பலர் பீதியிலிருந்து இன்னமும் சுய நினைவுக்குத் திரும்பவில்லை.
சம்பவதினம் மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த சுமார் ஆறுக்கும் மேற்பட்டோரே நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை கொள்ளை வேட்டை அட்டகாசங்களில் ஈடுபட்டனர்.
கொக்குவில் பொற்பதி வீதியில் பிள்ளையார் கோவிலுக்கு எதிரே உள்ள குருக்களின் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் வீட்டு ஜன்னல்களை அடித்து நொருக்கியதோடு தங்களை இராணுவமெனக் கூறி கதவைத் திறக்குமாறு மிரட்டி பெருமளவான பொருட்களைக் கொள்ளை அடித்துள்ளனர்.
அத்தோடு கோயில் குருக்களான ச.ஜெகநாத சர்மாவின் (வயது 47) தலையில் கத்தியால் வெட்டி காயப்படுத்தியதோடு கொட்டன்கள் மற்றும் இருப்புக் கம்பிகளால் தலையிலும் மார்பிலும் பலமாக அடித்துக் காயப்படுத்தியுமுள்ளனர்.
குருக்களின் மனைவியின் தாலிக் கொடியை கத்திக் கொண்டு அறுத்தெடுக்க போது அவரும் படுகாயமடைய நேரிட்டது. அவரிடமிருந்த சுமார் 20 பவுண் நகைகள் அவரது தாயாரிடமிருந்து 70 ஆயிரம் ரூபா வரையிலான ரொக்கப் பணம் உட்பட பெருந்தொகைப் பெறுமதியான பொருட்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து அகன்று சென்றனர்.
இதே தினம் குறித்த வீட்டிலிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்திலுள்ள வீடொன்றிற்குள் மதிலால் ஏறிக் குதித்துச் சென்ற கொள்ளையர்கள் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை அடித்து நொருக்கியதோடு மின் உபகரணங்களையும் அடித்து நொருக்கி அட்டகாசம் புரிந்திருந்தனர். எனினும், வீட்டின் பிரதான கதவைத் திறக்காது தள்ளிப் பிடித்துக் கொண்டு வீட்டுக்காரர் கடும் எதிர்ப்பை வெளியிட்ட போது அங்கிருந்த பெண்களையும் ஆண்களையும் நீதினமற்ற முறையில் பேசிக் கொட்டித் தீர்த்து விட்டு மேலும் ஜன்னல் மற்றும் கதவுகளை அடித்துச் சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து மறைந்து சென்றனர்.
அன்று அதிகாலை 1.30 மணியளவில் கோண்டாவில் ஸ்ரேசனடி நவரத்தினராஜா வீதியிலுள்ள ம.கிருஷ்ணமூர்த்திக் குருக்களின் (வயது 60) வீட்டுக்குச் சென்ற கொள்ளையர்கள் வீட்டின் ஜன்னல்கள், கண்ணாடிகளை அடித்து நொருக்கியதோடு கதவுகளையும் அடித்துச் சேதப்படுத்தி கதவைத் திறக்குமாறு நீண்ட நேரம் மிரட்டினர். எனினும், முயற்சி பலிக்காது போகவே வீட்டின் "விராந்தை'யில் நின்ற மோட்டார் சைக்கிளின் பெற்றோல் தாங்கி மூடியைக் கழற்றி எறிந்து விட்டு அதற்குள் தீயை மூட்டினர். இதனால், மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்து சாம்பலாகியது. இதன் போது அருகிலிருந்த கதவு மற்றும் ஜன்னல்களும் எரிந்து சேதமுற்றன.
இதற்கு அடுத்த படியாக கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கொக்குவில் சம்பியன் லேனிலுள்ள இரு வீடுகளிலும், வட்டுக்கோட்டை சங்கரத்தைப் பகுதி டாக்டர் செல்லத்துரை வீதியிலுள்ள இரு வீடுகளிலும் இதே பாணியிலான திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
கொக்குவில் சம்பியன் லேனிலுள்ள தனியார் கல்வி நிறுவன உரிமையாளராகிய தவராசா என்பவரது வீட்டிலும் அயலிலுள்ள புகையிலை வியாபாரி ஒருவரது வீட்டிலும் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதுடன், வீடுகளும் அடித்துச் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
புகையிலை வியாபாரியின் சிறிய மகளைப் பணயமாகப் பிடித்த கொள்ளையர்கள் அக்குழந்தையைக் கொல்லப் போவதாகக் கத்தி முனையில் மிரட்டி பணம் மற்றும் நகைகளைச் சூறையாடியுள்ளனர். வீட்டின் மின் உபகரணங்கள் பயன்மிக்க பல பொருட்களையும் அடித்து நொருக்கி அட்டகாசத்தை அரங்கேற்றிச் சென்றிருந்தனர்.
அதேநாள் வட்டுக் கோட்டை சங்கரத்தை டாக்டர் செல்லத்துரை வீதியிலுள்ள ஓய்வு பெற்ற ஆசரியர் குமாரவேலு இராஜலிங்கம், இராசா வரதராஜா ஆகிய இருவரது வீடுகளிலும் பெருந்தொகையான நகைகள், பணம் மற்றும் இதரப் பொருட்களைச் சூறையாடிச் சென்றுள்ளனர்.
சுமார் 4 அல்லது 5 மோட்டார் சைக்கிள்களில் சென்ற 10க்கும் மேற்பட்ட ஆயுதக் குழுவினரே இந்தப் பொருட்களைச் சூறையாடிச் சென்றிருந்ததாக வீட்டுக்காரர் தெரிவித்தனர்.
ஓய்வு பெற்ற ஆசிரியரின் வீட்டில் 300 பவுண் நகைகள், இரு கையடக்கத் தொலைபேசிகள், 20 ஆயிரம் ரூபா பணம், ரேடியோ, சார்ச்சர் லைட் உள்ளிட்ட பல பொருட்களும், வரதாஜாவின் வீட்டில் தோடுகள், சங்கிலி உள்ளிட்ட சுமார் ஐந்து பவுண் நகைகளும் திருடப்பட்டிருந்தன.
இதுதவிர அவ்வீடுகளிலிருந்த அலுமாரிகள், சோக்கேசுகள் அடித்து உடைக்கப்பட்டும், அங்கிருந்த பீங்கான் பாத்திரங்கள், மின் உபகரணங்கள் எல்லாம் உடைத்தெறியப்பட்டு பெரியதொரு காட்டு தர்பாரே நிறைவேற்றப்பட்டிருந்ததெனலாம்.
இவ்விரு வீடுகளிலும் நள்ளிரவு சுமார் 11.35 மணிக்கு நுழைந்த திருடர்கள் அதிகாலை 1.30 மணிவரை நின்று துணிகரத் திருட்டுக்களை அரங்கேற்றி பொருட்களைச் சூறையாடிச் சென்றிருந்தனர்.
இதேவேளை, கடந்தவாரம் சுழிபுரம் மத்தியிலுள்ள சில மாதங்களுக்கு முன்னரே திருமணமான புதுமணத்தம்பதியர் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர் குழு, அங்கும் பலத்த அட்டகாசங்களைச் செய்துவிட்டு வீட்டுப்பெண் அணிந்திருந்த தாலிக்கொடி உள்ளிட்ட அனைத்து நகைகளையும் உருவி எடுத்துக்கொண்டு மறைந்திருக்கின்றனர்.
குறித்த திருமணத் தம்பதியர் வட்டிக்குப் பணம் கொடுத்து வருபவர்கள் என்றும் இதனால் அவர்களிடம் பல பவுண் நகை மற்றும் பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேற்படி அனைத்துத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாகவும் பொலிஸ் மற்றும் அருகிலுள்ள இராணுவ முகாம்களில் வீட்டுக்காரர்களால் முறைப்பாடுகள் செய்யப்பட்டபோதும் இதுவரை எந்தத் திருடரும் பிடிபடவில்லை என்பதுதான் விசித்திரம்.
பொருட்களின் விலைவாசிகள் வெகுவாக அதிகரித்து வேலையில்லாத் திண்டாட்டங்கள் நிறைந்தும் கொடிய உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மறைந்து வாழ்ந்துகொண்டு; ஒருநாள் பொழுதை கழிப்பது எப்படி என்றே விழித்துக் கொண்டிருக்கும் குடாநாட்டு மக்களின் உடைமைகளைச் சூறையாடும் மர்ம நபர்கள் தான் யாரோ?
இவற்றைத் தடுப்பதற்கு சட்டம், நீதித்துறைகள் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் தான் என்ன? இதுவரை இல்லாது போயினும் இனியாவது விழிப்படையுமா சட்டம் மற்றும் நீதித்துறைகள் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புவதை உய்ந்துணர முடிகிறது.
யாழ்ப்பாணத்திலிருந்து எஸ்.விசித்திர வீரியன்