Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, June 08, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
பல்கலைக்கழக அனுமதியில் சிறுபான்மை சமூகங்களுக்கு அநீதி?
[08 - June - 2008] [Font Size - A - A - A]
அன்ஸிர்

இலங்கையில் 1978 இன் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின்படி 14 தேசிய பல்கலைக்கழகங்களும், 4 உயர் கல்வி நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.

இவை ஒவ்வொன்றுக்கும் தனியான வரலாறும் உண்டு. மாவட்டங்கள் அல்லது பிரதேசங்களின் வரலாற்றை எடுத்தியம்புவதிலும், மக்களின் கலாசாரத்தை பிரதிபலித்து அவர்களின் சமய, சமூக, அரசியல் விடயங்களிலும் செல்வாக்குச் செலுத்தும் பிரதான தளங்களுள் ஒன்றாக இப்பல்கலைக்கழகங்கள் விளங்குகின்றனவென்றால் அது மிகையாகாது.

பல்கலைக்கழகங்களில் பட்டப் பயில் கற்கை நெறிகளுக்கு அனுமதிப்பதற்கான மாணவர்களின் தெரிவு மேற்சொல்லப்பட்ட சட்டத்தின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு குறித்தொகுக்கப்பட்ட பணியாகும்.

இலங்கைப் பல்கலைக்கழகங்கள்

1 கொழும்பு பல்கலைக்கழகம் (ஸ்ரீபாளி வளாகம் உட்பட)

2 பேராதனை பல்கலைக்கழகம்

3 ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம்

4 களனி பல்கலைக்கழகம்

5 மொறட்டுவ பல்கலைக்கழகம்

6 யாழ்ப்பாண பல்கலைக்கழகம் (வவுனியா வளாகம், இராமநாதன் நுண்கலைக்கழகம் உட்பட)

7 றுகுணு பல்கலைக்கழகம்

8 கிழக்குப் பல்கலைக்கழகம் (திருமலை வளாகம் உட்பட)

9 இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்

10 இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகம்

11 இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகம்

12 இலங்கை வயம்ப பல்கலைக்கழகம்

13 இலங்கை ஊவா வெல்லச பல்கலைக்கழகம்

14 கட்புல, அரங்கேற்றக்கலைகள் பல்கலைக்கழகம்

உயர்கல்வி நிறுவனங்கள்

1 சுதேச மருத்துவ நிறுவகம்

2 கம்பஹா, விக்கிரமாராச்சி ஆயுர்வேத நிறுவகம்

3 கொழும்பு பல்கலைக்கழகக் கணினிக் கல்லூரி

4. சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகம்

இப்பல்கலைக்கழக மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுடன் பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் தொலைக் கற்கை முறைகளைப் பாவித்து, கற்கை நெறிகளை வழங்கி வருகின்றது.

இதேவேளை 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சை முடிவுகளுக்கமைய தயாரிக்கப்பட்ட "இஸற்' வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கடந்த புதன்கிழமை வெளியிட்டது.

கடந்த க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியவர்களில் 36 ஆயிரத்து 465 பேர் தமக்கு பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுள்ளதென குறிப்பிட்டு மானியங்கள் ஆணைக்குழுவிற்கு விண்ணப்பங்களை அனுப்பி வைத்துள்ளனர். எனினும் இவர்களில் 20 ஆயிரத்து 203 பேருக்கே பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடர வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடும்போது இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவானவர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 565 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்திற்கு இவ்வாறு உயர்கல்விபெற அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதானது இலங்கையின் கல்வித்துறை முன்னேற்றத்தை ஓரளவு பிரதிபலித்தாலும் எத்தனை மாணவர்கள் தமது கல்வியை இடைநடுவில் கைவிட்டு பல்கலைக்கழகத்திற்கு "டாட்டா' காட்டுகிறார்கள் என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும்.

2007/ 2008 பல்கலைக்கழகக் கல்வியாண்டு ஒருபார்வை

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவானது இம்முறை வடக்கு, கிழக்கு பல்கலைக்கழகங்களுக்கு அதிக மாணவரை அனுமதிக்க தீர்மானித்துள்ளது. இதில் சிங்கள மாணவரும் உள்ளடங்குவர்.

2007/2008 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்காக உத்தேசிக்கப்பட்ட மொத்த இடங்களின் பகிர்வு (பிரதான பல்கலைக்கழகங்கள்)

குறிப்பு: பல்கலைக்கழகங்களுக்கு குறித்தொதுக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம்.

கடந்த 2 வருடங்களாக வடக்கு செல்ல முஸ்லிம், சிங்கள மாணவர்கள் மறுப்புத் தெரிவித்த நிலையில் இம்முறை அங்கு முஸ்லிம், சிங்கள மாணவர்களை அனுமதிப்பதென்ற தீர்மானமானது எந்தளவு வெற்றியை பெற்றுத்தருமென்பதில் சந்தேகம் நிலவுகிறது.

எனினும் வடக்கு கிழக்குப் பிரச்சினை தீர்ந்தால் அங்குள்ள பல்கலைக்கழகங்களுக்கு அதிக மாணவர்களை அனுமதிக்க முடியுமென நம்பிக்கை வெளியிடும் ஆணைக்குழு நாட்டில் அமைதிச்சூழல் நிலவினால் நாடுபூராகவுமுள்ள பல்கலைக்கழகங்களுக்கு வருடமொன்றுக்கு குறைந்தது 25 ஆயிரத்திற்கும் மேல் மாணவர்களை அனுமதிப்பதுடன் பல புதிய பாடநெறிகளை அறிமுகப்படுத்த முடியுமெனவும் சுட்டிக்காட்டுகிறது.

2007/ 2008 பல்கலைக்கழக கல்வியாண்டிற்கான கற்கை நெறிகள்

1 மருத்துவம்

2 பல் அறுவைச் சிகிச்சை

3 விலங்கு மருத்துவ விஞ்ஞானம்

4 விவசாய தொழில்நுட்பமும் முகாமைத்துவமும்

5 விவசாயம்

6 உணவு விஞ்ஞானமும் போஷாக்கும்

7 உணவு விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

8 உயிரியல் விஞ்ஞானம்

9 ஆயுர்வேதம்

10 யுனானி

11 சித்த மருத்துவம்

12 பிரயோக விஞ்ஞானங்கள் (உயிரியல் விஞ்ஞானம்)

13 சுகாதார விருத்தி

14 இயந்திரவியல் (MPR)

15 இயந்திரவியல் (EM)

16 இயந்திரவியல் (TM)

17 கட்டடச் சூழல்/ கட்டடக்கலை

18 வடிவமைப்பு (கட்டடக்கலை)

19 நவநாகரிக வடிவமைப்பும் உற்பத்தி அபிவிருத்தியும்

20 கணினி விஞ்ஞானம்

21 தகவல் தொழில்நுட்பம்

22 முகாமைத்துவமும் தகவல் தொழில்நுட்பமும்

23 தகவலும் தொடர்பாடல் தொழில்நுட்பமும்

24 பட்டினமும் நாடும் திட்டமிடல்

25 பௌதிக விஞ்ஞானம்

26 கணிய அளவையியல் (கட்டடப் பொருளியல்)

27 அளவையியல் விஞ்ஞானம்

28 பிரயோக விஞ்ஞானங்கள் (பௌதிக விஞ்ஞானம்)

29 முகாமைத்துவம்

30 பொது முகாமைத்துவம் (சிறப்பு)

31 தொடர்பாடல் கற்கைகள்

32 சொத்து முகாமைத்துவமும் மதிப்பீடும்

33 முகாமைத்துவக் கற்கைகள் (TV)

34 வணிகவியல்

35 கலை (மேலதிக அனுமதி உட்பட)

36 கலை (SP)

37 கலை (SAB)

38 சட்டம்

39 சமாதானமும் முரண்பாடு தீர்த்தலும்

40 தாதியியல்

41 மருந்தகவியல்

42 மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானங்கள்

43 ஊடுகதிர்ப்படமெடுப்பு

44 இயன் மருத்துவம்

45 சூழல் பேணலும் முகாமைத்துவமும்

46 வசதிகள் முகாமைத்துவம்

47 போக்குவரத்தும் தேவைகள் விநி. ஒழுங்கமைப்பு முகாமை

48 மூலக்கூற்று உயிரியலும் உயிரிரசாயனவியலும்

49 கைத்தொழில் புள்ளிவிபரவியலும் கணிதவியல் நிதியும்

50 புள்ளிவிபரவியலும் செயற்பாட்டு ஆராய்ச்சியும்

51 கணக்கிடலும் முகாமைத்துவமும்

52 மீன்பிடித்தலும் கடல்சார் விஞ்ஞானங்களும்

53 இஸ்லாமியக் கற்கைகள்

54 அரபு மொழி

55 விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

56 கணினி விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

57 தொழில் முயற்சியும் முகாமைத்துவமும்

58 விலங்கு விஞ்ஞானம்

59 ஏற்றுமதி விவசாயம்

60 சங்கீதம்

61 நடனம்

62 சித்திரமும் வடிவமைப்பும்

63 நாடகமும் அரங்கமும்

64 கட்புலமும் தொழில்நுட்பவியல் கலையும்

இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள

புதிய பாடநெறிகள்

65 தேயிலை தொழில்நுட்பமும் பெறுமதி சேர்ப்பும்

66 கைத்தொழில் தகவல் தொழில்நுட்பம்

67 கனிப்பொருள் வளங்களும் தொழில்நுட்பமும்

68 செயற்பாடுகளும் தொழில்நுட்ப முகாமைத்துவமும் (சிறப்பு)

69 வியாபாரத் தகவல் முறைமைகள் (சிறப்பு)

70 முகாமைத்துவக் கற்கைகளுக்கான தகவல் தொழில்நுட்பம்

71 கணக்கிடலும் தகவல் முறைமைகளும்

72 உடற்றொழில் கல்வி

73 விளையாட்டு விஞ்ஞானமும் முகாமைத்துவமும்

74 பேச்சும் மொழிச் சிகிச்சையும்

இலங்கைப் பல்கலைக்கழகங்களிலும், உயர்கல்வி நிறுவனங்களிலும் இவ்வாறு 74 பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமையானது உண்மையில் வரவேற்கத்தக்கது. ஏனெனில் இப்பாடநெறிகளின் தேவை உலகளாவிய ரீதியில் உணரப்பட்டுள்ளது. இந்நிலையில், பட்டம்பெற்று வெளியேறும் ஒவ்வொரு மாணவனும் சமூகத்திற்கும், நாட்டுக்கும் பயன்மிக்க சேவகனாய் அமைய வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

இதேவேளை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவானது மேலும் சில பாடநெறிகளை அறிமுகப்படுத்தவேண்டிய தேவையுள்ளது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

குறிப்பாக பெற்றோலிய வள ஆராய்ச்சி, நவீன சவால்கள், உணவு பற்றாக்குறை நவீன கண்டுபிடிப்புகள், சினிமாத்துறை உள்ளிட்டவைகளுடன் தொடர்புடைய பாடநெறிகளை அடுத்த வருடங்களிலாவது அறிமுகப்படுத்துவது பற்றி ஆராயலாம். இதுபற்றி புத்திஜீவிகளும் தமது கருத்துக்களைப் பகிர முன்வரவேண்டும்.

மேலதிக நோக்குகளும் சில குறிப்புகளும்

புதிய கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிகள் மிகவிரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் சில விடயங்களின் பால் கவனத்தை ஈர்ப்பது இங்கு பிரதானமானது.

பகிடிவதை

சகல பல்கலைக்கழகங்களிலுமே இந்த வதைக்கு பஞ்சமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. அதேசமயம் வதைக்கு ஆதரவாகவும், எதிராகவும் இரு வேறுபட்ட கருத்துகள் நிலவுவதையும் எம்மால் நிராகரிக்க முடியாது. இதில் சரி, பிழை என்ற இருவகை வாதங்களும் நிறைந்தேயுள்ளன.

எனினும் வதையென்ற பெயரில் உயிரை உறிஞ்சுவதையோ, உடல், உள தாக்கங்களுக்கு உட்படுத்துவதையோ எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது. அது தண்டனைக்குரிய குற்றமாகவும் அமைய வேண்டும். கடந்த காலங்களில் வதைக்குப் பயந்து பாதியிலேயே பல்கலைக்கழக கல்விக்கு முற்றுப்புள்ளியிட்ட நூற்றுக் கணக்கானவர்கள் எம் சமூகத்திலுள்ளனர். வதையினால் மரணம் தழுவிய சோக சம்பவங்களையும் நாம் மறந்துவிடமுடியாது.

இந்நிலையில் ஒரு மாணவனுடைய மனதை பயமுறுத்தும் அத்தனை வதைகளையும் நிறுத்தியாகவேண்டும். குறித்த மாணவனின் சம்மதமின்றி அவனைப் பாதிக்கும் விதத்திலான சகல செயற்பாடுகளையும் சிரேஷ்ட மாணவர்கள் தாமாக முன்வந்து நிறுத்துவது சிறப்பானது. இதன்மூலமே வதையை பட்டியலிடமுடியும். சிரேஷ்ட மாணவர்கள் தமது தங்கையும், தம்பியும் வதைக்குட்படுவதை எவ்வாறு சகிக்க மாட்டார்களோ அவ்வாறே ஒரு புது மாணவன் வதைக்குட்படுவதையும் சகிக்காத சூழ்நிலையை உருவாக்க முன்வரவேண்டும்.

"இஸற்' வெட்டுப்புள்ளி

பல்கலைக்கழகங்களுக்கு எவ்வாறு மாணவர்கள் குறித்தொதுக்கப்படுகிறார், மாவட்ட கோட்டா, இஸற் வெட்டுப்புள்ளி எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது, எவ்வாறு அனுமதி வழங்கப்படுகிறது என்ற பலவினாக்கள் இன்று எம் மாணவ சகோதரர்கள் மற்றும் பெற்றோரிடையே உலாவருவதை காணலாம்.

இவை தொடர்பில் குறிப்பாக சிறுபான்மை சமூகம் பாதிக்கப்படுவதாகவும், பல்கலைக்கழக அனுமதியில் சிறுபான்மை சமூகம் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. எனினும் இதுபற்றிய குற்றச்சாட்டை மானிய ஆணைக்குழு மறுத்தே வருகிறது. தாம் வெளிப்படையாகவே செயற்படுவதாகவும் அவர்கள் வாதாடுகிறார்கள்.

கடந்த 4 ஆம் திகதி (ஜூன்) உயர் கல்வியமைச்சில் நடைபெற்ற வெட்டுப்புள்ளி வெளியீட்டில் பிரதி உயர் கல்வியமைச்சரான மயோன் முஸ்தபா சிறுபான்மை முஸ்லிம், தமிழ், மலையக சமூகங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மீது கொண்டிருக்கும், சந்தேகம், வெறுப்பு, ஆத்திரம் என்பவற்றை பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

ஆம், அவரின் கூற்றுக்களில் எமக்கு உடன்பாடுண்டு, ஆனால் அவரினால் மாத்திரம் அவர் குறிப்பிடும் அநீதிகளையும், சிறுபான்மை சமூகங்கள் பல்கலைக்கழக அனுமதியில் எதிர்கொள்ளும் பாரபட்சங்களையும் களைந்துவிட முடியாது.

பிரதி உயர்கல்வியமைச்சரான அவர் இதுவரை எத்தனை பல்கலைக்கழக அனுமதி தொடர்பிலான விடயங்களில் சிறுபான்மை சமூகத்தினருக்காக சாதித்தார் என்பதற்குரிய வினாவிற்கான விடை அநேகமாக பூஜ்ஜியமாகவேயிருக்கும்.

இந்நிலையில் சகல சிறுபான்மை சமூக, அரசியல் பிரதிநிதிகளும் இணைந்து பல்கலைக்கழக அனுமதி, மாவட்ட கோட்ட உள்ளிட்ட பலவிடயங்களில் தமிழ், முஸ்லிம், மலையக மாணவர் எதிர்கொள்ளும் அநீதிகளைத் துடைத்தெறிய காலம்தாமதிக்காது உடனடியாக முன்வரவேண்டும்.

இச்சமயத்தில் எந்தவொரு சமூகத்திற்கும் பல்கலைக்கழக அனுமதியில் அநீதி இழைக்கப்படுவதில்லை. அவ்வாறு ஏதேனும் சம்பவங்கள் நடைபெற்றிருந்தால் அவர்கள் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ள முடியுமென்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்காவின் கூற்றினையும் இங்கு ஞாபகமூட்ட விரும்புகிறோம்.

Email this page Your Opinion Print this page
ஏன் இந்தத் தாக்குதல்கள்?
வேட்டையாடப்படும் தமிழக மீனவர் மௌனமாக இருக்கும் இந்திய அரசு
எதிரணியினரின் போராட்டமும் அசைந்து கொடுக்காத அரசும்!
சிங்கள மக்களின் பிரச்சினை என்ன?
ஊடகங்களுக்கு எதிரான போர்ப் பிரகடனம்!
கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள கிழக்கு முஸ்லிம்களின் எதிர்காலம்
பெற்றோலிய விலை உயர்வு: காரணங்களும் தாக்கங்களும்
பல்கலைக்கழக அனுமதியில் சிறுபான்மை சமூகங்களுக்கு அநீதி?
குடாநாட்டை கலக்கும் கொள்ளையர்கள்!
ஹிலாரியின் பிரசாரப் பின்னடைவில் மலர்ந்துள்ள ஒபாமாவின் வெற்றி
மகிந்தவின் சுக்கிர திசை தொடர்கிறது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com