Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, June 08, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
பெற்றோலிய விலை உயர்வு: காரணங்களும் தாக்கங்களும்
[08 - June - 2008] [Font Size - A - A - A]
கோ.அமிர்தலிங்கம்

உலகிலும் இலங்கையிலும் பெற்றோலியத்தின் விலை அதிகரித்தல் என்பது முன்னெப்போதும் நடந்திராத ஒரு புதிய விடயமல்ல. 1973 ஆண்டு பெற்றோலியத்தினைப் பிரதானமாக ஏற்றுமதி செய்யும் நாடுகள் ஒன்றிணைந்து முக்கியமாக இஸ்ரேலுக்கு ஆதரவான மேற்குலக நாடுகளைப் பழிவாங்கும் நோக்குடனும் பெற்றோலிய அகழ்வினை ஒரு ஒழுங்கு முறைக்குள் கொண்டுவருவதற்காகவும் ஒபெக் எனப்படும் பெற்றோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமையத்தினை உருவாக்கி பெற்றோலிய உற்பத்தியைக் கட்டுப்படுத்தி விலைகளை அதிகரித்த போது கைத்தொழில்மய மேற்குலக நாடுகள் மட்டுமன்றி பெற்றோலிய இறக்குமதியில் தங்கியிருந்த அபிவிருத்தியடைந்துவரும் அனைத்து நாடுகளுமே பாதிக்கப்பட்டன. ஆனால் தற்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பெற்றோலிய விலை அதிகரிப்பு என்பது கடந்த கால நடைமுறைகளிலிருந்து சற்று வேறுபட்டதாகக் காணப்படுகின்றது. ஏனெனில் இவ்வதிகரிப்பானது தொடர்ந்து தேர்ச்சியானதாகவும், உறுதியானதாகவும், மிக வேகமானதாகவும் இருக்கின்றது. இவ்வதிகரிப்பிற்கு பல காரணங்கள் கூறப்படலாம். அவற்றில் சில முக்கிய காரணங்களை இங்கு அடையாளம் காண்போம். உலகத்தின் தற்போதைய பெற்றோலிய ஒதுக்கு ஏறக்குறைய 1000 பில்லியன் பீப்ாய்கள் என மதிப்பிடப்படுகின்றது. இதில் ஒபெக் நாடுகளான சவுதி அரேபியா 260 பில்லியன் பீப்பாய்களையும், ஈராக் 110 பில்லியன் பீப்பாய்களையும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 95 பில்லியன் பீப்பாய்களையும், குவைத் 95 பில்லியன் பீப்பாய்களையும், ஈரான் 92 பில்லியன் பீப்பாய்களையும், வெனிசுவெலா 66 பில்லியன் பீப்பாய்களையும் ஒதுக்குகளாகக் கொண்டுள்ளதுடன் ஒபெக் அல்லாத நாடுகளான ரஷ்யா 49 பில்லியன் பீப்பாய்களையும், மெக்சிக்கோ 27 பில்லியன் பீப்பாய்களையும், சீனா 24 பில்லியன் பீப்பாய்களையும், அமெரிக்கா 23 பில்லியன் பீப்பாய்களையும், கஜகிஸ்தான் 14 பில்லியன் பீப்பாய்களையும், நோர்வே 10 பில்லியன் பீப்பாய்களையும், ஒதுக்குகளாகக் கொண்டுள்ளன. அத்துடன் லிபியா, நைஜீரியா, அல்ஜீரியா போன்ற சில ஆபிரிக்க நாடுகளும் குறைந்தளவு பெற்றோலிய ஒதுக்குகளைக் கொண்டுள்ளன. உலகத்தின் தற்போதைய பெற்றோலிய நாளாந்த நுகர்வானது 70 மில்லியன் பீப்பாய்களாகக் காணப்படுகின்றது. இதே போக்கில் பெற்றோலிய நுகர்வு தொடருமானால் ஓபெக் நாடுகளின் ஒதுக்குகள் எதிர்வரும் 80 ஆண்டுகளில் முடிந்து விடும் என அஞ்சப்படுகின்றது. உலகத்தில் மொத்தமாக இடம் பெறும் அனைத்து வகையான பொருட்கள் சேவைகளின் உற்பத்தியில் அமெரிக்கா தனித்து ஏறக்குறைய 25 வீதமான உற்பத்தியினைச் செய்கின்றது. அத்துடன் அதன் பெற்றோலிய நுகர்வும் கிட்டத்தட்ட உலக நுகர்வில் 25 வீதமாகக் காணப்படுகின்றது. அமெரிக்கா எதிர்காலத்தில் ஏற்படப்போகும் எரிபொருள் நெருக்கடியை முன்கூட்டியே உணர்ந்து தனது பெற்றோலிய வளத்தினை உபயோகிப்பதைவிட இறக்குமதியிலேயே அதிக நாட்டம் செலுத்துகின்றது. அத்துடன் தற்போது பொருளாதார ரீதியில் மிக வேகமாக முன்னேறும் நாடுகளான இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பெற்றோலிய நுகர்வானது உலக நுகர்வில் முறையே 3 வீதம் மற்றும் 8 வீதம் எனக்காணப்பட்ட போதும் இந்நாடுகளின் நுகர்வு மட்டும் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் ஒபேக் நாடுகள் தமது உற்பத்தியினை அதிகரிக்க முடியாது எனத் திட்டவட்டமாக அறிவித்து விட்டன. பெற்றோலிய சுத்திகரிப்பினை நோக்கும் போது சவுதி அரேபியாவினைத் தவிர ஏனைய நாடுகளுக்கு உரிய உற்பத்தியினைச் செய்யக்கூடிய இயலளவு பெருமளவிற்குக் காணப்படவில்லை. அத்துடன் ஈராக்கில் அதிக வளம் காணப்பட்ட போதும் தொடரும் உள்நாட்டு யுத்த நிலையின் காரணமாக பெற்றோலிய சுத்திகரிப்பில் புதிய முதலீடுகளைச் செய்ய முடியாத நிலை அங்கு காணப்படுகின்றது.

ஆகவே உலகத்தின் பெற்றோலியத்திற்கான கேள்வியானது உறுதியாகவும் தொடர்ச்சியாகவும் அதிகரித்துக் கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையில் உற்பத்தியினை அதிகரிக்கமுடியாத நிலை காணப்படுகின்றமையினால் பெற்றோலியத்திற்கான விலை அதிகரிப்பு என்பது தவிர்க்க முடியாததாகும். இந்நிலையில் ஒரு சிறிய, திறந்த பொருளாதார முறைமையினைக் கொண்ட, பெற்றோலியத்திற்காக முழுமையாக இறக்குமதியில் தங்கியிருக்கும் ஒரு நாடான இலங்கையின் பொருளாதாரம் மீதான பெற்றோலிய விலை அதிகரிப்பின் தாக்கம் பலமானதாகக் காணப்படுவது யதார்த்தமானதாகும். ஏனெனில் இலங்கைப் பொருளாதாரத்தில் தற்போது விவசாயத்துறை உற்பத்திகள் 12 வீதமாகவும் கைத்தொழில்துறை உற்பத்திகள் 28 வீதமாகவும் சேவைகள் துறை உற்பத்திகள் 60 வீதமாகவும் காணப்படுகின்றன. சேவைகள் மற்றும் கைத்தொழில்துறை உற்பத்திகள் முழுமையாகவும் விவசாயத்துறை உற்பத்திகள் பகுதியளவிலும் ஒன்றில் பெற்றோலியத்தில் அல்லது மின்சாரத்தில் தங்கியிருக்கின்றன. இலங்கையில் நீர் மூலம் பெறப்படும் மின்சாரம் குறைவாகக் காணப்படும் அதேவேளை மின்பிறப்பாக்கிகள் மூலமே அதிகளவில் மின்சாரம் பெறப்படுகின்றது. ஆகவே பெற்றோலிய விலை அதிகரிப்பானது இலங்கைப் பொருளாதாரம் மீது மிகப்பெரும் பாதகமான தாக்கத்தினை ஏற்படுத்துவது தவிர்க்கமுடியாததாகும். இலங்கையில் தற்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் விலையுயர்விற்கு உலகளாவிய ரீதியில் பல காரணிகள் பெருமளவிற்குப் பங்களிப்புச் செய்த போதும் இலங்கையின் பெற்றோலியத் துறையில் தனியார் கம்பனிகளின் ஆதிக்கம் அதிகரித்தமையினாலேயே இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டத்தில் இயங்குவதுடன் மானிய விலையில் எரிபொருட்களை வழங்கமுடியாத நிலையிலும் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். முன்னைய ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் 100 எரிபொருள் விற்பனை நிலையங்கள் இந்தியன் ஒயில் கம்பனிக்கும் 107 எரிபொருள் விற்பனை நிலையங்கள் விற்கப்படுவதற்காக திறைசேரிக்கும் 148 எரிபொருள் விற்பனை நிலையங்கள் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும் வழங்கப்பட்டன. இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களின் எதிர்ப்பால் விற்கப்படுவதற்காக திறைசேரிக்கு வழங்கப்பட்ட 148 எரிபொருள் விற்பனை நிலையங்கள் இன்னும் தனியார்மயப்படுத்தப்படவில்லை என அறியமுடிகின்றது. தற்போதைய நிலையில் இலங்கையில் டீசல் விற்பனை செய்யும் போது நட்டம் ஏற்படும் அதேவேளை, பெற்றோல் விற்பனை செய்யப்படும் போது இலாபம் கிடைக்கின்றது. ஆனால் டீசலினை இந்தியன் ஒயில் கம்பனி 130 ரூபாவிற்கு விற்கும் அதே வேளை இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 110 ரூபாவிற்கு விற்பனை செய்கின்றது. இதனால் பாவனையாளர்கள் இலாபம் கருதி இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபன விற்பனை நிலையங்களில் கூடுதலாக டீசலினை கொள்வனவு செய்ய முனைகின்றனர். வாகனங்களின் நெரிசல் காரணமாக பெற்றோல் கொள்வனவு செய்வோர் இந்தியன் ஒயில் கம்பனிக்கு சொந்தமான எரிபொருள் விற்பனை நிலையங்களில் கொள்வனவு செய்ய முனைகின்றனர். இதனால் கூடுலான இலாபத்தினை இந்தியன் ஒயில் கம்பனி உழைக்கும் அதேவேளை கூடுதலான நட்டத்தினை இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எதிர்நோக்குவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. ஆரம்பத்தில் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உள்நாட்டு எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட அதேவேளை வெளிநாட்டுக் கப்பல்களுக்கும் விமானங்களுக்கும் எரிபொருட்களை வழங்கியதன் மூலம் அதிகளவு இலாபத்தினை உழைத்தது. ஆனால் தற்போது இந்நடைமுறை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுவிட்டமையினால் சுமார் 50 கப்பலுக்கு எரிபொருள் வழங்கி நாளொன்றுக்கு 500 மில்லியன் ரூபா உழைக்கும் வாய்ப்பினை இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இழந்துவிட்டது. இதனைவிட சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் சுத்திகரிப்பில் ஈடுபடும் போது பக்கவிளைவுப் பொருளாக வெளியேறும் நப்தாவிலிருந்து யூரியா உரத்தினை உற்பத்தி செய்ததன் மூலமும் இலாபம் உழைத்தது. இப்போது நப்தா எனப்படும் பக்கவிளைவுப் பொருளிலிருந்து யூரியா தயாரிக்கப்படுவதில்லை.

ஆனால் இலங்கை வருடாந்தம் 13,000 மில்லியன் ரூபாவினை உர இறக்குமதிக்காகச் செலவிடுகின்றது. அத்துடன் இலங்கையில் வாகன நெரிசல்களின் காரணமாக ஏற்படும் தாமதங்களினால் வருடாந்தம் 30,000 மில்லியன் ரூபா வீணடிக்கப்படுவதாக அறியமுடிகின்றது. இத்தொகையானது மூன் வருடங்களுக்கு சமுர்த்திக் கொடுப்பனவுகளை வழங்குவதற்குப் போதுமானதாகும். வீதி உட்கட்டமைப்புக்கள் உரிய முறையில் காணப்படாமையினாலேயே இவ் எரிபொருள் விரயம் ஏற்படுகின்றது. இதனால் புதிய வீதி உட்கட்டமைப்புக்குள் நிர்மாணிக்கப்படுவதுடன் பழையவை நவீனப்படுத்தப்படவேண்டியதும் அவசியமாகும். அத்துடன் அரச துறை வாகனங்கள் மூலமான எரிபொருள் வீண்விரயமும் கட்டுப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். இதன் மூலமே எரிபொருள் இறக்குமதிக்குச் செலவிடப்படும் தொகையினைக் குறைக்க முடியும்.

ஒரு பீப்பாய் மசகு எண்ணை உலக சந்தையில் 2003 இல் 29 டொலர்களாகக் காணப்பட்ட போதும் தற்போது அதன் விலை 136 டொலர்களாகக் காணப்படுகின்றது. எரிபொருள் இறக்குமதிக்காக இலங்கை 2003 இல் 838 மில்லியன் டொலர்களைச் செலவிட்ட போதும் தற்போது 2497 மில்லியன் டொலர்களைச் செலவிட வேண்டியுள்ளது. இத்தொகையானது மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்குச் செலவிடப்பட்ட தொகையைக் காட்டிலும் மும் மடங்கு அதிகமானதாகும். இந்நிலையில் உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துக் கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையில் இலாபம் உழைத்து மக்களுக்கு மானிய விலையில் எரிபொருளை வழங்கமுடியாத நிலையில் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இருப்பதால் பொதுமக்களே கூடுதலாக எரிபொருள் சுமையினைத் தாங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். எரிபொருள் மானியம் வழங்கும் போது அது உரியவர்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்துவது கடினம் என்பதால் பொருளியல் கோட்பாட்டில் அது வரவேற்கப்படுவதில்லை. ஆகவே பொருளியல் கோட்பாடு வலியுறுத்துவது போல் இருக்கும் ஒரே வழி மக்களின் வருமான அதிகரிப்பினை உறுதிப்படுத்துவதாகும்.

Email this page Your Opinion Print this page
ஏன் இந்தத் தாக்குதல்கள்?
வேட்டையாடப்படும் தமிழக மீனவர் மௌனமாக இருக்கும் இந்திய அரசு
எதிரணியினரின் போராட்டமும் அசைந்து கொடுக்காத அரசும்!
சிங்கள மக்களின் பிரச்சினை என்ன?
ஊடகங்களுக்கு எதிரான போர்ப் பிரகடனம்!
கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள கிழக்கு முஸ்லிம்களின் எதிர்காலம்
பெற்றோலிய விலை உயர்வு: காரணங்களும் தாக்கங்களும்
பல்கலைக்கழக அனுமதியில் சிறுபான்மை சமூகங்களுக்கு அநீதி?
குடாநாட்டை கலக்கும் கொள்ளையர்கள்!
ஹிலாரியின் பிரசாரப் பின்னடைவில் மலர்ந்துள்ள ஒபாமாவின் வெற்றி
மகிந்தவின் சுக்கிர திசை தொடர்கிறது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com