Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, June 08, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள கிழக்கு முஸ்லிம்களின் எதிர்காலம்
[08 - June - 2008] [Font Size - A - A - A]
எம்.ஏ.எம்.நிலாம்

கிழக்கு மாகாண முஸ்லிம்களின் எதிர்காலம் இன்று கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது. கிழக்கின் அரசியல் இருப்பிலேயே முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் தங்கியிருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பு படிப்படியாக கை நழுவிப்போவதையே காணக்கூடியதாகவுள்ளது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலைப் பொறுத்தமட்டில் அங்கு முஸ்லிம் சமூகம் வஞ்சிக்கப்பட்டதை மனச்சாட்சியுள்ள எவரும் மறுக்கமுடியாது. தெற்கின் பேரினவாத அரசியல் சக்திகளின் கைப்பொம்மைகளாக ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்களும் இந்தத் துரோகத்தனத்துக்குத் தாராளமாக துணை போய்விட்டமையானது தான் சகிக்க முடியாத வேதனையை உருவாக்கிவிட்டுள்ளது.

தேர்தல் முடிந்த பின்னர் ஆரம்பித்த முஸ்லிம்களுக்கெதிரான இனவன்முறைகள் இன்று மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கோர விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையே இன முறுகலை ஏற்படுத்தி அதனூடாக கிழக்கை பேரினவாதத்தின் ஆளுகைக்குள் கொண்டுவரும் மறைமுகமான சதித் திட்டத்துக்கு தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் தெரிந்தோ தெரியாமலோ தாராளமாகவே துணை போய்க் கொண்டிருக்கின்றன.

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தை எவ்வாறாயினும் சிங்கள பெரும்பான்மை மாவட்டமாக மாற்றியமைக்கும் நீண்டகாலத் திட்டம் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்று படிப்படியாக அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஆனால், அந்த மாவட்டத்தின் முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்தேர்ச்சியாக உருப்படியில்லாத கூற்றுக்களைத்தான் வெளியிட்டு வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. இந்த மாவட்டத்தின் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் ஒரே நிலைப்பாடு தம்மையும் தமது அரசியல் எதிர் காலத்தையும் உத்தரவாதப்படுத்திக் கொள்வது மட்டுமே ஆகும் என்பது அவர்களது உரைகள் மூலமே தெளிவாகி வருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் எதிர்காலம் குறித்து சிந்திப்பதாகத் தெரியவில்லை. அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் வியப்பையே தருகின்றன. கிழக்கின் இன்றைய நிலை தனக்கு மகிழ்ச்சி தருவதாக அவர் குறிப்பிட்டிருக்கின்றார். ஜனநாயகத்தின் கண்களை கறுப்புத் துணியால் இறுகக்கட்டிவிட்டு கிழக்கின் அதிகாரத்தை, மக்களின் உரிமையை வலுக்கட்டாயமாக சூறையாடிவிட்டு என்னவோ அந்த மக்கள் அதிகாரத்தை மலர்த்தட்டில்வைத்து தங்களிடம் ஒப்படைத்துவிட்டதுபோல் அவரது கருத்துக்கள் காணப்படுகின்றன. அமைச்சர் அதாவுல்லாவின் பிரதேசமான தீகவாபியில் இன்று என்ன நடந்துகொண்டிருக்கின்றது. தீகவாபியை பாதுகாத்ததே முஸ்லிம்கள் தான் என்ற உண்மையைத் தெரிவித்திருக்கும் அவர் இன்று அங்கிருந்து முஸ்லிம்களை விரட்டியடிக்கும் திட்டம் அல்லது அங்கு முஸ்லிம்களை பலவீனப்படுத்தும் முயற்சியை முறியடிப்பதற்கான எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையே முஸ்லிம் சமூகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.

பேரினவாதத்தின் கால்களில் விழுந்து பிச்சை கேட்டாலும் எம்மால் அம்பாறை மாவட்டமும் கிழக்கு மாகாணமும் பேரினவாதத்தின் பிடிக்குள் போய்விடும் மிகப்பெரிய தவறை தடுத்துநிறுத்த முடியாது போகலாம். முஸ்லிம் சமூகத்தை கட்சி அரசியலால் பிளவுபடுத்துவதால் அந்தச் சமூகம் முற்றுமுழுதாக பலவீனப்படும் ஒரு மோசமான நிலைக்கே தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

கிழக்கில் கிராமத்துக்கொரு அரசியலமைப்பு என்ற விபரீதமானதொரு நிலை உருவாகிக் கொண்டிருக்கின்றது. பேரினவாதத்தின் மிகப்பெரிய சூழ்ச்சிக்குள் கிழக்கு முஸ்லிம்கள் சிக்குண்டு போயுள்ளனர். ஏனையவர்களை விட அமைச்சர் அதாவுல்லாவிடம் மிகவும் வினயமானதொரு வேண்டுகோளை இத்தருணத்தில் முன்வைக்க விரும்புகின்றேன். கிழக்கு மாகாணத்தையும் அந்த மண்ணின் மைந்தர்களான முஸ்லிம் சமூகத்தையும் பாதுகாத்து கிழக்கில் முஸ்லிம்களின் அரசியல் இருப்பை உறுதி செய்ய வேண்டிய மிகப்பெரிய கடப்பாடு உங்கள் கைகளில்தான் காணப்படுகின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் அதன் தலைவர் ரவூப் ஹக்கீமையும் விமர்சித்துக் கொண்டு அக்கட்சியை அழித்தொழிக்கும் முயற்சியானது இந்த மண்ணில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையே வேரோடு அழிக்கும் ஒரு அபாயகரமான எண்ணப் பாடாகவே காணக்கூடியதாகவுள்ளது.

தெற்கு முஸ்லிம்கள் அன்று முஸ்லிம்களுக்கென தனியான அரசியல் அமைப்பு உருவாவதை விரும்பியிருக்கவில்லை. தேசியக் கட்சிகளினூடாக முஸ்லிம் சமூகத்தின் அரசியல் இருப்பை உறுதி செய்து கொள்வதிலேயே உறுதியாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தனர்.

ஆனால், மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் முஸ்லிம்களின் தனித்துவத்தைப் பாதுகாக்கவென கிழக்கு மண்ணில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை தோற்றுவித்தார். விரும்பியோ விரும்பாமலோ அக்கட்சி இன்று முஸ்லிம் சமூகத்தின் ஆலவிருட்சமாக மாறிவிட்டது. மர்ஹூம் அஷ்ரபின் மறைவுக்குப் பின்னர் இன்று கிழக்கில் மட்டும் முஸ்லிம்களுக்கென எத்தனை கட்சிகள் உருவாகிவிட்டன. வீதிக்கு வீதி முஸ்லிம் அரசியல் அமைப்புகள், கட்சிகள் உருவாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனூடாக முஸ்லிம் சமூகம் சிதறிச் சின்னாபின்னமாகிப் போவதை நாம் உணரக் கூடாதா?

ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கான அரசியல் தோப்பானது இன்று பல வேலிகள் போடப்பட்டு துண்டுதுண்டாக எல்லை போடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த துண்டாடும் பணி கூட கிழக்கு மண்ணில் தான் உருவாகியுள்ளது. போகிற போக்கைப் பார்த்தால் கிழக்கு முஸ்லிம்களின் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாகவே அமையும் அபாயமே காணக்கூடியதாகவுள்ளது. எங்கள் கழுத்துக்களை நாங்களே வெட்டிக் கொள்ளும் அல்லது நாம் செய்து கொள்ளும் ஒரு தற்கொலை முயற்சியாகவே இவற்றை நோக்க வேண்டியுள்ளது.

இன்று காத்தான்குடியில் என்ன நடக்கின்றது. தமிழ் முஸ்லிம் உறவை சின்னாபின்னப்படுத்தும் சதி நாடகமல்லவா அங்கு அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கிழக்கு மாகாண சபைத் தேர்தல் ஆரம்பித்த நாள் முதல் உலமாக்களின் பெயரை வைத்து பிழைப்பு நடத்தி வந்த அந்த மாகாண சபையின் அமைச்சரான ஹிஸ்புல்லா இன்று அதே உலமாக்களைத் தூக்கியெறிந்து விட்டு தன் மனப்போக்கில் செயற்படத் துணிந்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேறி அரசு தரப்புடன் இணைவது முதல், முதலமைச்சர் பதவி, அமைச்சுப் பதவி போராட்டங்களின் போது கூட காத்தான்குடி மக்களையும் அங்குள்ள உலமாக்களையும் கறிவேப்பிலையாகப் பயன்படுத்திய சகோதரர் ஹிஸ்புல்லா, காத்தான்குடி முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையில் மாகாண சபையின் ஆரம்ப அமர்வை பகிஷ்கரிக்குமாறு அதே உலமாக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையை உதாசீனம் செய்து விட்டு ஆளும் தரப்புடன் சேர்ந்து அமர்வில் கலந்து கொண்டதன் மூலம் கிழக்கு முஸ்லிம்களுக்கு மாபெரும் துரோகத்தைச் செய்துவிட்டதாகக் காத்தான்குடி மக்கள் பெரும் விசனத்தை வெளிக்காட்டியிருக்கின்றனர்.

முஸ்லிம் சமூகமும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் அடுத்து என்ன செய்யப் போகின்றனர்? கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்வதால் பயன் கிட்டுமா? கிழக்கு மாகாணத்தை முஸ்லிம்களின் ஆளுகைக்குள் கொண்டு வருவது இனிமேல் சாத்தியப்படுமா? என்பதே இன்றைய கேள்வியாகும்.

Email this page Your Opinion Print this page
ஏன் இந்தத் தாக்குதல்கள்?
வேட்டையாடப்படும் தமிழக மீனவர் மௌனமாக இருக்கும் இந்திய அரசு
எதிரணியினரின் போராட்டமும் அசைந்து கொடுக்காத அரசும்!
சிங்கள மக்களின் பிரச்சினை என்ன?
ஊடகங்களுக்கு எதிரான போர்ப் பிரகடனம்!
கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள கிழக்கு முஸ்லிம்களின் எதிர்காலம்
பெற்றோலிய விலை உயர்வு: காரணங்களும் தாக்கங்களும்
பல்கலைக்கழக அனுமதியில் சிறுபான்மை சமூகங்களுக்கு அநீதி?
குடாநாட்டை கலக்கும் கொள்ளையர்கள்!
ஹிலாரியின் பிரசாரப் பின்னடைவில் மலர்ந்துள்ள ஒபாமாவின் வெற்றி
மகிந்தவின் சுக்கிர திசை தொடர்கிறது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com