குரு
1948 ம் ஆம் ஆண்டு திசம்பர் 10ஆம் திகதி வெளியிடப்பட்ட ஐ.நா.சபையின் மனித உரிமைகள் தொடர்பான நம்பிக்கைப் பிரகடனத்தில் 10 ஆவது சரத்தில்-பிரிவில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கின்றது.
தன்னுடைய கருத்தை தந்திரமாகத் தீர்மானிப்பதற்கும்,வெளியிடுவதற்கும் ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கின்றது. கட்டுப்பாடுகளின்றி தேச எல்லைகளையும் கடந்து எந்தவொரு ஊடகத்தின் மூலமாகவும் தகவல்களைத் திரட்டுவதற்கும், பெற்றுக் கொள்வதற்கும்; அதனை விநியோகிப்பதற்கும் ஒருவனுக்கு உரிமை உண்டு.
ஐ.நா.சபையின் இந்தப் பிரகடனத்தில் இலங்கையும் கைச்சாத்திட்டிருப்பதுடன் அது தனது அரசியல் யாப்பிலும் இவ்வுரிமை தொடர்பாகவும் தெளிவாகச் சொல்லியிருக்கின்றது.
சர்வதேச சட்டங்களிலும் தேசிய சட்டங்களிலும் கருத்துச் தந்திரம் பற்றிச் சொல்லப்பட்டாலும் நடைமுறையில் இதனை முன்னெடுக்கின்றபோது உள்நாட்டில் ஊடகத்துறையினர் கடுமையான சவால்களை எதிர் நோக்குகின்றனர்.
ஊடகச் தந்திரம் தொடர்பாக எதிரணியில் இருக்கின்ற காலத்தில் உரத்துப் பேசுகின்ற அரசியல்வாதிகள் - தலைமைத்துவங்கள் பதவிக்கு வந்ததும் தமது இயலாமையை மூடி மறைப்பதற்காக அவற்றை அடக்கி வைக்க முயன்று வருவது கடந்த காலங்களிலும் இன்றும் தெளிவாகக் காணக்கூடியதாக இருக்கின்றது.
கால் நூற்றாண்டுகளாக நடந்து கொண்டிருக்கின்ற தமிழ் ஈழ தந்திரப் போராட்டம் வெற்றியடைவதற்கோ அல்லது அரசபடைகள் அதனைத் தோற்கடிப்பதற்கான அறிகுறிகளோ தொலைவில் தென்படாத சூழ்நிலையில் இப்போரில் 75000 பேரளவில் தமது உயிர்களை இழந்திருக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள். இதனைவிடப் பெரும் எண்ணிக்கையானோர் கால்,கைகளை இழந்து ஊனமுற்றிருக்கின்றனர். பல இலட்சக்கணக்கானவர்கள் சொந்த இருப்பிடங்களை இழந்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அகதிகளாகத் தஞ்சமடைந்திருக்கின்றனர்.
இப்போர் தொடர்பான யதார்த்தமான தகவல்கள் பெரும்பாலும் பொதுமக்களின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டிருக்கின்றன.
போர் தொடர்பான தகவல்களைச் சேகரிப்பதற்கு உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்குச் சில கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருகின்றன. அவர்களால் தந்திரமாக இப்பிரதேசங்களில் சென்று செய்திகளைச் சேகரிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து படைத்தரப்பினர் தருகின்ற செய்திகளையும், புலிகளின் கட்டுபாட்டுப் பிரதேசங்களிலிருந்து அவர்கள் சொல்லுகின்ற செய்திகளை மையமாக வைத்தே போர் தொடர்பான செய்திகளைச் சொல்ல வேண்டியிருக்கின்றது.
வெற்றிகள், இழப்புக்கள் தொடர்பான புள்ளி விபரங்கள் அவரவருக்கு சாதகமாக சொல்லப்படுகின்றன, அதனால்தான் ஒரு சம்பவம் தொடர்பான தகவல்களில்; கணிசமான முரண்பாடுகள் நிலவுகின்றன. வெகுஜனங்களுக்கு எந்தத் தகவலை ஏற்பது என்ற குழப்பநிலை.
இவற்றையும் கடந்து போர் தொடர்பான தகவல்களைக் கண்டறிந்து அவற்றை மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்துகின்ற போது அவ்வாறன ஊடகவியலாளர்கள் தண்டிக்கப்படுகின்றார்கள். அவர்களின் தலைகள் கொய்யப்படுகின்றன, உடல்கள் சிதைக்கப்படுகின்றன. இவ்வாறு ஊடகவியலாளர்களுக்கு தண்டனை கொடுப்பவர்கள் தண்டிக்கப் படுவதற்குப் பதிலாக அவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர் -உற்சாகமூட்டப்படுகின்றனர் என்பதே வெகுசன அபிப்பிராயமாக இருந்து வருகின்றது.
எனவே ஊடகவியலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் பின்னணியில் பலமான கரங்களின் அனுசரணை இருப்பது தெரியவருகின்றது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ராஜபக்ஷ அவர்கள் லேக்ஹவுஸ் நிறுவனத்தில் பதவி வகிப்பவர்களான, தொழில் ரீதியான பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் பலசூரிய , அதன் செயலாளர் போத்தள ஜயந்த ஆகியோரை அழைத்து எச்சரிக்கும் விதமாகவும், அச்சுறுத்தும் விதமாகவும் நடந்து கொண்டது தொடர்பாக சர்ச்சை எழுந்திருக்கின்றது.
பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் அவர்கள், அரச துறையில் தொழில் பார்த்துக் கொண்டு அரசுக்கு நெருக்கடிகளை உண்டு பண்ணுகின்ற விதமாக நடந்து கொள்வதை அங்கீகரிக்க முடியாது. மேலும் இராணுவத்தினருக்கு நெருக்கடிகளை உண்டு பண்ணுகின்ற விதமாக நடந்து கொள்கின்ற போது இராணுவத்தை நேசிப்பவர்களினால் ஊடகவியலாளர்களுக்கு ஏற்படுகின்ற நெருக்கடிகளுக்குத் தம்மால் எதுவுமே செய்யமுடியாது எனவும் அவ்விருவரிடத்திலும் சொல்லியிருக்கின்றார்.
மேலும் புலிகளுக்கெதிரான தாக்குதல்கள் தொடர்பான செய்திகள் வெளியாகின்ற போது இராணுவத்தின் மன வலிமையைப் பலவீனப்படுத்துகின்ற விதமாக செய்திகளை வெளியிடுவதனாலும் நெருக்கடிகள் தோன்றுகின்றது எனச் சொல்லியிருப்பது தமக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாக ஊடகத்துறையினரால் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
பாதுகாப்புச் செயலாளருடன் நடந்த சந்திப்பில் கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கருத்து வெளியிடும் தமது உரிமைகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும்விதமா நடந்து கொள்ள வேண்டாம் என ஊடகவியலாளர்கள் குறிப்பிட்ட போது அப்படியானால் நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடருங்கள் நடக்கின்ற வற்றைப்பார்ப்போம் எனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அவர்களிடத்து சொல்லியிருக்கின்றார். அப்படியானால் நீங்கள் எதையாவது பண்ணப் போகின்றீர்களா என பாலசூரிய , ஜயந்த ஆகியோர் பாதுகாப்புச் செயலாளரைத் திருப்பிக் கேட்க நான் எதுவும் செய்யப்போதில்லை செய்கின்றவர்கள் செய்வார்கள் என அவர் பதிலாளித்திருக்கின்றார்.
சரியான தந்தைக்குப் பிறந்திருந்தால் நீங்கள் இப்படியெல்லாம் நடந்து கொள்ள மாட்டீர்கள் போன்ற வார்த்தைகளை செயலாளர் உபயோகித்ததாகவும் சொல்லப்படுகின்றது.
இவ்வாறாக பாதுகாப்புச் செயலாளர் நடந்து கொள்கின்ற போது அந்த காட்சிகளைப்பார்த்துக் கொண்டு இந்தச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த லேக் ஹவுஸ் நிறுவனத் தலைவர் பந்துல பத்மகுமார மௌனம் காத்ததும் ஊடகத்தரப்பினருக்கு அதிருப்தியைக் கொடுத்திருக்கின்றது. இந்த ஊடகவியலாளர்களை அடியாட்கள் ஏற்கனவே வீடு தேடிச்சென்று அச்சுறுத்தியிருந்ததை வாசகர்கள் நினைவில் வைத்திருப்பார்கள்.
நியுஸ் பெர்ஸ்ட் செய்தி சேகரிப்பாளராகப் பணியாற்றி வந்த தேவகுமாரும், அவரது சகா மகேந்திரன் வரதன் என்பவரும் யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
இவற்றையெல்லாம் எடுத்து நோக்குகின்ற போது ஊடகத்துறையினர் மீதான தாக்குதல்கள் விரைவு படுத்தப்பட்டிருக்கின்றமை தெளிவாகின்றது. இதனை அரசதரப்பினரின் உத்தியோகபூர்வமான போர்ப்பிரகடனமாகவே எடுத்துக் கொள்ள வேண்டியிருப்பதாக ஊடகவியலாளர்கள் கருதுகின்றனர்.
ஊடகத்துறை அமைச்சரோ மேற்படி இருவருக்கும் கருத்துக் கூறும் உரிமை இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்.
கீத் நொயார் எப்படிக் கடத்தப்பட்டார்? என்ற கதைகளுக்கு மத்தியில் தாக்கப்பட்டபின் விடுவிக்கப்பட்ட அவர் இச் சம்பவம் தொடர்பாக எதுவுமே பகிரங்கப்படுத்தாமல் மௌனம் காப்பது ஏன் என்பது புரியாமலிருக்கின்றது.
20 வருடங்களுக்கு மேலாக பத்திரிகைத் துறையில் தொழில் பார்க்கும் நொயார் கடந்த 22ஆம் திகதி தன்னுடைய வாகனத்தில் ஏறி வீடு செல்வதற்கு முயன்ற வேளை, இரவு 10.45 மணியளவில் வெள்ளை வான் காரர்களினால் கடத்தப்பட்டிருக்கின்றார். கடத்தியவர்கள் இவருக்கு இராணுவ இரகசியங்கள் எங்கிருந்து கிடைக்கின்றது என்பதைத் தெரிந்து கொள்ள முனைந்திருக் கின்றார்கள். அதற்கு அவரால் வழங்கப்பட்ட பதில்களில் திருப்திப்படாதவர்கள் அவரை உடல் ரீதியில் வருத்தி தகவல்களைப் பெற்றுக்கொள்ள முனைந்திருக்கின்றார்கள்.
கடத்தப்பட்டவர் ஏழு மணித்தியாலங்கள் கடந்து விடுவிக்கப்பட்டார். காயங்களுடன் வீடு திரும்பிய அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
த நேசன் பத்திரிகையில் சென்பத்தி (தளபதி) என்னும் பெயரில் பாதுகாப்புத் தொடர்பான கட்டுரைகளை எழுதிவரும் கீத் நொயார் தனக்கு விடுக்கப்பட்ட அநாமதேய தொலைபேசி அழைப்புக்களுக்கு அடிபணியாத ழ்நிலையிலேயே கடத்தப்பட்டிருக்கின்றார்.
கடந்த 11ஆம் திகதி இராணுவம் இராணுவத் தளபதியின் வீட்டுச் சொத்தல்ல என்று எழுதிய கட்டுரை இக்கடத்தலுக்கு உடனடிக்காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இத் தாக்குதல் தொடர்பாக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்கும்படி ஜனாதிபதி கட்டளையிட்டாலும் விசாரணைகளின் போக்கின் -குற்றவாளிகளின் அடிப்படையிலும் அதன் வேகம் தானாகவே மந்த கதியை அடைந்துவிடும், என்பது தான் நாட்டு சம்பிரதாயம் இதனையும் மீறி கீத் நொயார் விசாரணைகள் நடந்தால் நல்லது பார்ப்போம்.!
நொயார் தனது கடத்தல் தொடர்பாக பேசாமல் இருப்பது கூட கடத்தியவர்கள் விதித்த கட்டுப்பாடா? அல்லது மேல் மட்டத்திலிருந்து போடப்பட்ட எச்சரிக்கை கலந்த உத்தரவா? என்பதைப்புரிந்து கொள்ள முடியும்...! கொழும்பில் கடத்தப்பட்டவர் பல மைல்கள் தொலைவுகளுக்கப்பாலுள்ள மல் வானைப் பிரதேசத்திற்கு கொண்டு செல்லப் பட்டிருக்கின்றார். பாதுகாப்புக் கெடுபிடிகள் மிகுந்த தலைநகரிலிருந்து இவர் எப்படி அத்தனைச் சோதனைச் சாவடிகளைத் தாண்டி அங்கு கொண்டு செல்லப்பட்டார்.? கீத் நொயாரின் கைடெக்கத் தொலைபேசியைக் கைப்பற்றிய கடத்தல்காரர்கள் அதிலிருந்த இலக் கங்களுக்குச் சொந்தமானவர்கள் தொடர்பான தகவல்களையும் திரட்டியிருப்பதாகத் தெரிய வருகின்றது.
புலிகளை அடியோடு ஒழித்துக் கட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இந்த நேரத்தில் ஊடகத்துறையினர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ கூறியிருக்கின்றார். எனவே ஊடகத்துறையினர் பொறுப்புடன் நடந்து கொள்வதில் குறைபாடுகள் இருப்பதாகச் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றது.