Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, June 08, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
எதிரணியினரின் போராட்டமும் அசைந்து கொடுக்காத அரசும்!
[08 - June - 2008] [Font Size - A - A - A]
பி.ஆர்.நாயகம்

எதிர்க் கட்சிகள் மீண்டும் வீதியில் இறங்கியுள்ளன. விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டத்தை தமது கைகளில் தூக்கிப்பிடித்துள்ளன. பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஒரு புறமும், ஜே.வி.பி. மறுபுறமும் இந்தப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியிருக்கின்ற அதேவேளையில் அரசாங்கம் இதனால், கலக்கமடைந்திருப்பதாகத் தெரியவில்லை. பதிலாக இந்தப் போராட்டங்களைக் கேலிசெய்வது போல அரச தரப்பிலிருந்து வெளிப்படும் கருத்துக்கள் அமைந்திருப்பது எதிரணியினரின் பலவீனத்தையே வெளிப்படுத்துகின்றன. எதிரணியினரின் பிரசாரங்கள், போராட்டங்களை ஒடுக்குவதற்கு யுத்தத்தை ஒரு கருவியாக அரசாங்கம் பயன்படுத்துகின்றதா என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது.

அரசாங்கத்திற்கு எதிரான பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியிருக்கும் எதிர்க்கட்சிகள் மூன்று அம்சங்களைத் தம்முடைய போராட்டத்துக்கான அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஒன்றுவிலைவாசி உயர்வு, இரண்டுஊடக சுதந்திரத்துக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல், மூன்று மோசமான நிலைக்குச் சென்றுள்ள மனித உரிமை மீறல்கள். இந்த மூன்று விடயங்களும் மக்கள் மத்தியில் அனுதாபத்தையும் ஆதரவையும் பெற்றுக் கொள்வதற்கு உதவக்கூடியவையாகவுள்ள போதிலும், எதிரணியினரின் போராட்டங்கள் அரசாங்கத்தை ஒரு "தற்காப்பு' நிலைக்குத் தள்ளக் கூடியளவுக்கு பலமானதாக இருக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இதனை உணர்ந்த நிலையில் தான் எதிர்க் கட்சிகள் அனைத்தையும் உள்ளடக்கிய "மகா கூட்டணி'ஒன்றை அமைக்கும் முயற்சி ஒன்று முடுக்கிவிடப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, ஸ்ரீ.ல.சு.க.வின் மங்கள சமரவீர பிரிவு என்பவற்றை உள்ளடக்கி அமைக்கப்படவுள்ள எதிர்க் கட்சிகளின் "மெகா' கூட்டணியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவையும் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக ஆங்கில வார இதழ் ஒன்று கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தி வெளியாகிய அடுத்த நாளே ஐ.தே.க. வுடன் எந்தவொரு கூட்டணியும் இணையப் போவதில்லை என்ற தமது நிலைப்பாட்டை ஜே.வி.பி தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றது. ஆக, "மெகா கூட்டணி' என்பது சாத்தியமானதல்ல என்பதையே இது வெளிப்படுத்துகின்றது.

அதேவேளையில் பிரச்சினையை முன்னெடுத்துச் செல்வதிலும் ஐ.தே.க.வின் அணுகுமுறைக்கும் ஜே.வி.பி.யின் அணுகுமுறைக்கும் இடையில் பாரிய முரண்பாடும் காணப்படுகின்றது. ஐ.தே.க.வைப் பொறுத்தவரையில் விலைவாசி உயர்வு விவகாரத்தை மட்டுமன்றி, ஊடகங்கள் மீதான அடக்குமுறை மற்றும் மனித உரிமை மீறல் போன்ற விவகாரங்களையும் அரசுக்கு எதிரான பிரசாரத்துக்கான கருவியாகப் பயன்படுத்த முற்படுகின்றது. இருந்த போதிலும் ஜே.வி.பி.யைப் பொறுத்தவரை விலைவாசி உயர்வுப் பிரச்சினையை மட்டுமே அரசுக்கு எதிரான போராட்டத்துக்கு அது பயன்படுத்துகின்றது. மனித உரிமை மற்றும் ஊடக சுதந்திரம் போன்ற விடயங்களை வலியுறுத்துவது படையினருக்கு எதிரான ஒரு செயற்பாடாக முத்திரை குத்தப்படும் நிலையில் இந்த விடயங்களில் அவதானமாக காய்களை நகர்த்தவே ஜே.வி.பி. முற்படுகின்றது. ஆக, ஜ.தே.க.வும் ஜே.வி.பி.யும் அரசுக்கு எதிராக இணைந்து செயற்படும் என்பது எதிர்பார்க்கக் கூடியதாக இல்லை.

அரசின் வியூகமும் யுத்த வெற்றியும்

எதிர்க் கட்சிகளின் இந்தப் போராட்டங்கள் மக்கள் மத்தியில் "அலை' ஒன்றைத் தோற்றுவிப்பதாக அமைந்திருக்கவில்லை என்பதுடன், அரசாங்கத்தை அச்சமடையச் செய்யக் கூடிய தன்மையையும் கொண்டிருக்கவில்லை. அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படக்கூடிய இவ்வாறான போராட்டங்கள் எதுவும் இப்போதைக்கு எந்தப் பலனையும் தரப்போவதில்லை என்பதே உண்மை. பிரதான எதிர்க்கட்சிகள் தமது ஆதரவாளர்கள், உறுப்பினர்கள் சோர்ந்துவிடாமல், துடிப்புடன் வைத்திருப்பதற்கு இவ்வாறான போராட்டங்களை நடத்த நிர்ப்பந்திக்கப்பட்டாலும் அரசாங்கத்தை அவர்களால் ஆட்டம் காண வைக்க முடியாது என்பதே உண்மை.

காரணம், அரசாங்கத்தின் யுத்தக் கொள்கையால் சிங்கள மக்கள் நன்கு கவரப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தைக் கைப்பற்றியமை, அதன் பின்னர் அங்கு தேர்தல் ஒன்றை நடத்தி முதலமைச்சர் ஒருவரை நியமித்தமை என்பவற்றுடன், இந்தியாவின் ஆதரவுடன் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பிளவுபடுத்தியமை என்பன சிங்கள மக்கள் மத்தியில் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தியிருக்கின்றது. சமாதானம் தொடர்பாக என்னதான் பேசினாலும் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றிபெற வேண்டும் என்பதுதான் சிங்கள மக்களுடைய விருப்பமாக இருக்கின்றது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின்படி சிங்கள மக்களில் 11 வீதமானவர்கள் மட்டுமே அரசியல் தீர்வில் நம்பிக்கை வைத்துள்ளார்கள். ஏனையவர்கள் இராணுவத் தீர்வில் நம்பிக்கை வைத்துள்ளதுடன், மகிந்த ராஜபக்ஷ அரசினால் அதனைச் செய்ய முடியும் எனவும் நம்புகின்றனர்.

இராணுவ வெற்றிகள் என்பவற்றுக்கு அப்பால், வடக்கு கிழக்கு இணைப்பைப் பிரித்தமை சிங்களக் கடும் போக்காளர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையைக் கொடுப்பதாகவே இருந்துள்ளது. தமிழர்களுடைய தாயகக் கோட்பாட்டை சிதைப்பதாக இது அமைந்திருப்பதால் சிங்களவர்களுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுப்பதாகவே அதுவும் அமைந்திருந்தது.

இந்த நிலையில் யுத்தம் என்பதைத் தவிர மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திடம் மாற்றுத் தெரிவுகள் எதுவும் இருக்கப் போவதில்லை. யுத்தத்தை முன்னெடுக்கும் நிலையில் இரண்டு விதமான பொருளாதார நெருக்கடிகள் உருவாகும். ஒன்று யுத்த செலவினம் அதிகரிப்பதால் ஏற்படும் நெருக்கடி. இரண்டு மனித உரிமை மீறல் போன்றன காரணமாக மேற்கு நாடுகளிலிருந்து எதிர்கொள்ளப்படும் தடைகள். இவை இரண்டும் பொருளாதார நெருக்கடிகளை உருவாக்குவதுடன், அதனை மக்களுடைய தலையிலேயே அரசு சுமத்த நிர்ப்பந்திக்கப்படும். இந்த நிலையில் பொருளாதாரப் பிரச்சினைகள் எதிர்காலத்தில் தீவிரமடையும். நடுத்தர மக்கள் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்படுவார்கள்.

ஆனால், இவை அனைத்தையும் தமது அரசியலுக்கு பயன்படுத்தக்கூடிய இயலுமை எதிரணிகளுக்கு இருக்கின்றதா என்பது முக்கியமான கேள்வி! யுத்தத்தையே தன்னுடைய அரசியல் ஆயுதமாக மகிந்த அரசு பயன்படுத்தும் நிலையில் இந்த பௌத்த சிங்கள நாட்டில் பொருளாதாரப் பிரச்சினையை அரசுக்கு எதிரான ஆயுதமாக எதிரணியினரால் பயன்படுத்திக்கொள்ள முடியாது அவர்கள் தங்களுடைய உபாயங்களை மாற்றிக் கொள்ளாத வரையில் அரசாங்கத்தை இப்போதைக்கு அசைக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும்.

Email this page Your Opinion Print this page
ஏன் இந்தத் தாக்குதல்கள்?
வேட்டையாடப்படும் தமிழக மீனவர் மௌனமாக இருக்கும் இந்திய அரசு
எதிரணியினரின் போராட்டமும் அசைந்து கொடுக்காத அரசும்!
சிங்கள மக்களின் பிரச்சினை என்ன?
ஊடகங்களுக்கு எதிரான போர்ப் பிரகடனம்!
கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள கிழக்கு முஸ்லிம்களின் எதிர்காலம்
பெற்றோலிய விலை உயர்வு: காரணங்களும் தாக்கங்களும்
பல்கலைக்கழக அனுமதியில் சிறுபான்மை சமூகங்களுக்கு அநீதி?
குடாநாட்டை கலக்கும் கொள்ளையர்கள்!
ஹிலாரியின் பிரசாரப் பின்னடைவில் மலர்ந்துள்ள ஒபாமாவின் வெற்றி
மகிந்தவின் சுக்கிர திசை தொடர்கிறது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com