Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, June 08, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
ஏன் இந்தத் தாக்குதல்கள்?
[08 - June - 2008] [Font Size - A - A - A]
விதுரன்

வடக்கில் பெரும் போர் நடக்கிறது. கிழக்கில் இனமோதல்கள் தொடர்கிறது. தெற்கில் தினமும் குண்டுகள் வெடிக்கிறது. மொத்தத்தில் இந்த நாட்டில் மக்களின் அன்றாட வாழ்க்கையென்பது கேள்விக்குறியாகிவிட்டது.

இது இலங்கையின் இன்றைய நிலை குறித்த சிறு மதிப்பீடுதான். இந்த நிலைமை மேலும் தொடருமானால் அனைத்தும் ஸ்தம்பிதமடைந்துவிடும் நிலையேற்படலாம். தமிழ் மக்களுக்கெதிரான போர் மேலும் மேலும் மோசமடையும் போது அதன் எதிரொலி நாட்டையே அதிரச் செய்கிறது. தெற்கை பாதுகாத்தவாறு வடக்கு கிழக்கில் எதனையும் செய்யலாமென்ற அணுகுமுறையால் இன்று தென்பகுதி பேரச்சத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது.

இனப்பிரச்சினைக்கு யுத்தம் மூலமே தீர்வு காண அரசு முனைகிறது. இதுவரை காலமும் ஏற்பட்ட அழிவுகள் குறித்து சிந்திக்காது இந்த அரசு நாட்டை முழு அளவில் போருக்குள் தள்ளியுள்ளது. கிழக்கை புலிகளிடமிருந்து மீட்டு விட்டதால் யுத்தத்தை வடக்குடன் மட்டுப்படுத்தி விட்டதாக அரசு மார்தட்டிக் கொண்டிருக்கையில் யுத்தம் தெற்கே வந்துவிட்டது.

பழிக்குப் பழி, இரத்தத்திற்கு இரத்தமென்ற நிலையில் வடக்கே ஒவ்வொரு தாக்குதலுக்கும் எதிரானதும் சமனானதுமான மறுதாக்குதல் தெற்கில் நடைபெறுகிறது. வடக்கில் பொது மக்களை படைகள் இலக்கு வைக்கும் போது தெற்கில் புலிகள் பொதுமக்களை இலக்கு வைக்கின்றனர்.

வன்னிக்குள் தாங்கள் செயற்படுவதில்லை என்பதால் அங்கு பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு தாங்கள் எப்படிப் பொறுப்பாயிருக்க முடியுமென படையினர் கேள்வி எழுப்பும்போது, தெற்கில் நடைபெறும் தாக்குதலுக்கு மட்டும் எப்படி புலிகளை குற்றஞ்சாட்ட முடியுமென அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

வன்னிக்குள் மக்கள் மத்தியிலும் புலிகள் மத்தியிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில் தினமும் தாக்குதல்கள் தொடர்கிறது. அப்பாவி மக்களென்பது நன்கு தெரிந்தும் ஆழ ஊடுருவும் படையணி தினமும் அவர்களைக் கொன்று குவிக்கையில் அதன் பதிலடியாகவே தெற்கில் தாக்குதல்கள் நடைபெறுகிறது. பொதுமக்கள் மீதான இந்தத் தாக்குதல்களை அரசியல் இலாபத்திற்காகவும் இராணுவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்த அரசு முனைவதால் அழிவுகள் உடனடியாக நிறுத்தப்படப் போவதில்லை.

தமிழ் மக்களைப் பாதுகாக்க அரசும் முன்வரவில்லை. படையினரும் முன்வரவில்லை. சிங்கள மக்களும் முன்வரவில்லை. யுத்தம் தொடர்பான அரசினதும் படைத்தரப்பினதும் பொய்ப் பிரசாரங்கள், யுத்தத்தின் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு விடலாமென்ற நப்பாசையை தென்பகுதி மக்களிடையே ஏற்படுத்தியுள்ளதால்அவர்கள் இந்த யுத்தத்தை பெருமளவில் ஆதரிக்கின்றனர். அப்பாவித் தமிழர்களின் அழிவுகள் பற்றி அவர்கள் சற்றும் சிந்தித்ததுமில்லை. சிந்திக்க முயல்வதுமில்லை.

படையினரின் வெற்றி குறித்து மட்டுமே சிந்திக்கும் அவர்கள் படையினருக்கு படு தோல்விகள் ஏற்படும் போதெல்லாம் உணர்ச்சி வசப்படுகின்றனர். அரசைத் திட்டுவதும் அரசுக்கெதிரான உணர்வை வெளிப்படுத்துவதும் சர்வ சாதாரணம். இதனால் தான், தனக்குச் சாதகமான நிலைமையைத் தோற்றுவிக்க விரும்பும் போதெல்லாம் அரசு யுத்தத்தில் பெரும் வெற்றியைப் பெற்றுவிட வேண்டுமென்பதற்காக வடக்கு கிழக்கில் பேரழிவுகளை ஏற்படுத்த சற்றும் தயங்குவதில்லை.

இதையடுத்தே இன்று தென்பகுதி குறி வைக்கப்படுகிறது. இதனைத் தடுக்க முடியாது அரசும் படைத்தரப்பும் திண்டாடுவதுடன் மேலும் மேலும் வன்னியில் தாக்குதலைத் தீவிரப்படுத்த அதன் எதிரொலி தெற்கில் கேட்கிறது. இதிலிருந்து மக்களை காப்பது யாரென்ற கேள்வியும் எழுகிறது. வன்னியில் ஆழ ஊடுருவும் படையணியின் தாக்குதல்களிலிருந்து புலிகளால் எப்படி மக்களைப் பாதுகாக்க முடியாதுள்ளதோ அது போன்றுதான் தெற்கிலும் குண்டுவெடிப்புகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க முடியாது அரசு திணறுகிறது.

வன்னியில் கடும் போர் நடைபெறுவதால் அங்கு ஏற்படும் அழிவுகள் குறித்து இலங்கை அரசோ சர்வதேச சமூகமோ அலட்டிக் கொள்வதில்லை. ஆனால், தினமும் நூற்றுக்கணக்கில் மக்கள் குடியிருப்புகளை நோக்கி வீசப்படும் ஆட்லெறி ஷெல்கள் , மோட்டார் குண்டுகள், பல்குழல் ரொக்கட்டுகள், விமானத் தாக்குதல்களிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை புலிகளுக்குள்ளது. படையினரின் இந்தத் தாக்குதல் யுத்தத்தின் ஒரு அங்கமென்றால் பதில் தாக்குதல்களும் யுத்தத்தின் அங்கம் தான்.

தெற்கில் இடம்பெறும் தாக்குதல்களானது நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலானவை. இதன்மூலம், வடக்கில் அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்களை தடுப்பதற்கானதொரு தாக்குதலாகவே தமிழ்த்தரப்பு கருதுகிறது. ஏனெனில் வடக்கில் தினமும் படையினரின் தாக்குதல்களுக்கிலக்காகிக் கொல்லப்படும் படுகாயமடையும் மக்களைப் பற்றி எவருமே இன்று வரை கவனம் செலுத்தாத நிலையில் அந்த மக்களைப் பாதுகாக்க வேண்டுமானால் அதுபோன்ற அழிவுகள் மூலம் தெற்கில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துவதன் மூலமே நிறுத்த முடியுமென்றதொரு நிலையேற்பட்டுள்ளது.

தெற்கில் இடம்பெறும் தாக்குதல்களுக்கு மட்டுமே காலாகாலமாக கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. யுத்தத்தில் தோல்விகளைச் சந்திப்பவர்கள் மூடத்தனமாக நடந்து கொள்கிறார்களென்றால் மக்கள் மீது தாக்குதல்களை நடத்துவோரெல்லோரும் மூடர்களென்பதுடன் அவர்கள் தோல்விகளைச் சந்திப்பவர்களுமாவர். ஜனாதிபதியின் இந்தக் கூற்று புலிகளுக்கு மட்டுமல்ல, அரசுக்கும் படையினருக்கும் பொருந்தும். ஏனெனில் தெற்கில் கொல்லப்படும் மக்களை விட வடக்கு கிழக்கில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

தெற்கில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை விட வடக்கு கிழக்கில் இடம்பெற்ற தாக்குதல்கள், படுகொலைகளின் எண்ணிக்கை சொல்லிலடங்காது. வடக்கு கிழக்கில் இனப்படுகொலை உச்சக் கட்டத்தை அடைந்த பின்பே யுத்தம் தெற்கே வந்தது. தெற்கில் முதல் பொதுமகன் கொல்லப்படுவதற்கு முன்னர் வடக்கு கிழக்கில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டுவிட்டனர்.

யுத்தத்தில் அப்பாவிகள் கொல்லப்படுவதென்பது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாது. அது வடக்கு கிழக்காய் இருந்தாலும் சரி, தெற்காயிருந்தாலும் சரி அப்பாவி உயிர்கள் கொல்லப்படும் போது எந்தவித பாகுபாடுமின்றி மிக வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும். ஆனால், இலங்கையிலோ இனங்களிடையே உள்ள பாகுபாடு போன்றே படுகொலை செய்யப்படுவோர் யார் என்பதிலும் பாகுபாடு காண்பிக்கப்படுகிறது.

வடக்கு கிழக்கில் இடம்பெறும் படுகொலைகளும் அழிவுகளும் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின் அங்கமெனச் சித்திரிக்கப்படும் அதேநேரம், தெற்கில் ஏதாவது சம்பவம் நடைபெற்றுவிட்டால் அது பயங்கரவாதத்தின் உச்சமென வர்ணிக்கப்படுகிறது.

இதுபோன்ற நிலைதான் இன்று ஊடகங்கள் மத்தியிலும் காணப்படுகிறது. இந்த இரட்டைத் தன்மையே தெற்கில் ஏதாவது சம்பவங்கள் ஏற்படும்போது இனமுறுகலையும் இன வன்முறைகளையும் தோற்றுவிக்கிறது.

வடக்கில் அப்பாவி மக்கள் கொல்லப்படும் செய்திகளை சிங்கள, ஆங்கில ஊடகங்கள் மூடி மறைத்து விடுகின்றன. தாக்கப்பட்டவர்கள் அப்பாவிகளென்பது தெரிந்தும் அவர்களைப் புலிகளென்றே இந்த ஊடகங்கள் கூறமுற்படும். விமானத் தாக்குதல்கள் , ஷெல் தாக்குதல்கள், ஆழ ஊடுருவும் படையணிகளின் தாக்குதல்களில் பெருமளவு தமிழ் மக்கள் கொல்லப்பட்டாலும் அவை குறித்து இந்த ஊடகங்கள் மூச்சு விடுவதில்லை. குறைந்தது வானொலிகளும், தொலைக்காட்சிகளும் தங்கள் செய்திகளில் கூட குறிப்பிடுவதில்லை.

பத்திரிகைகளும் இதேபோக்கையே கடைப்பிடிக்கின்றன. பெரியளவில் இடம்பெறும் மக்களுக்கான இழப்புகள் குறித்து ஒரு வரிச்செய்தி கூட வெளியிடுவதில்லை. இதனால், தென்பகுதி மக்களுக்கு வடக்கு கிழக்கில் ஏற்படும் பேரழிவுகள் மறைக்கப்பட்டு விடுகின்றன.

இது இன்று நேற்றைய கதையல்ல. இனப்பிரச்சினை தொடங்கிய நாள் முதல் இந்த நிலைப்பாட்டையே இந்த ஊடகங்கள் கடைப்பிடிப்பதால் யுத்தத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது குறித்து தென் பகுதி மக்களுக்கு எதுவும் தெரியவருவதில்லை.

ஆனால் தெற்கில் சிறு சம்பவம் நடந்தால் கூட தொலைக்காட்சி நிறுவனங்கள் "பிறேக்கிங் நியூஸ்' என போட்டி போட்டு மணித்தியாலக் கணக்கில் நேரடிச் செய்திகளை வெளியிட்டு மக்களை பெரும் பதற்றத்திற்குள்ளாக்கி விடுகின்றன. இது இனங்களுக்கிடையே பதற்றத்தையும் முறுகலையும் ஏற்படுத்துகிறது. தெற்கில் இவ்வாறானதொரு சம்பவத்திற்கு இவ்வாறு நேரடி ஒலி, ஒளிபரப்புக்கள் மூலம் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தில் ஒரு வீதத்தையாவது வடக்கு கிழக்கில் இடம்பெறும் சம்பவங்களுக்கு கொடுத்தால் அப்பகுதிகளின் உண்மை நிலைபற்றி தென்பகுதி மக்களுக்குத் தெரியவரும்.

இதேநேரம், தெற்கில் இடம்பெறும் சம்பவங்களை வாய்ப்பாகப் பயன்படுத்தி வடக்கு கிழக்கு நிலைமைகளை மேலும் மேலும் மோசமாக்கவே அரசு முற்படுகிறது. தென்பகுதிச் சம்பவங்களை, ஆத்திர மூட்டும் செயலெனவும் மக்கள் பொறுமை காக்க வேண்டும் எனவும் கூறி மக்களை தூண்ட சிலர் முற்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இதே நிலைமை வடக்கு கிழக்கில் ஏற்படும் போது அந்தப் பகுதி மக்களின் உணர்வுகள் எவ்வாறிருக்குமென்பது குறித்து எவருமே அலட்டிக் கொள்வதில்லை. இதனால்தான் பழிக்குப் பழி, இரத்தத்திற்கு இரத்தமென்ற நிலை காணப்படுகிறது.

முன்னைய அரசாங்கங்களைப் போன்றே இந்த அரசும், தெற்கைப் பாதுகாத்தவாறு வடக்கு கிழக்கில் பெரும் போரை நடத்த முடியுமென நம்புகிறது. மற்றைய ஆட்சியாளர்களை விட இந்த அரசு இந்த விடயத்தில் மிகவும் தீவிரமாயுள்ளது. கிழக்கை கைப்பற்றி, அங்கு ஒரு தேர்தலை நடத்தி, ஆட்சியை எப்படியோ கைப்பற்றி, அங்கு இனமோதலைத் தொடரவிட்டு, அதற்கூடாக நிர்வாகத்தை கொண்டு செல்ல முடியுமென நம்புகிறது. இதனால்தான் அங்கு தினமும் இனங்களுக்கிடையே பதற்ற நிலை தொடர்கிறது. இந்த நிலைமை மேலும் தொடரும் சூழ்நிலையே தென்படுகிறது.

கிழக்கில் இவ்வாறானதொரு சூழ்நிலையில் வடக்கில் போர் மேலும் மேலும் தீவிரமடைந்து வருகிறது. மன்னார் பகுதியில் படையினரின் நடவடிக்கை தீவிரமடைகிறது. மணலாறிலும் கடும் நெருக்கடியை கொடுக்க படையினர் முற்படுகின்றனர். தொடரும் கடுமையான விமானத் தாக்குதல்கள் மற்றும் நீண்ட தூர ஷெல் தாக்குதல்களால் ஆயிரக்கணக்கில் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில் தினமும் இடம்பெறும் பாரிய இடப்பெயர்வுகள் மக்களை சொல்லொணாத் துன்ப, துயரங்களுக்குள் ஆழ்த்தி வருகிறது.

மக்களை பாரியளவில் இடம்பெயரச் செய்தும் மக்கள் மீது மோசமான தாக்குதல்களை நடத்துவதன் மூலமும் உளவியல் ரீதியில் அவர்களைப் பாதிப்புறச் செய்து புலிகளுக்கு பெரும் நெருக்குதல்களை ஏற்படுத்துவதே படையினரின் திட்டமாகும். இடப்பெயர்வுகள், உணவுத்தட்டுப்பாடு, மோசமான மருத்துவ நிலைமையால் மக்களை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி இடம்பெயரச் செய்யும் முயற்சிகளில் அரசும் படைத்தரப்பும் தீவிரம் காட்டுகின்றன.

அங்கு மக்களின் நிலைமைகள் மோசமடைகையில் அதன் தாக்கம் தென்பகுதியில் எதிரொலிக்குமென்பதால் தெற்கில் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியவாறு மேலும் மேலும் நெருக்கடிகளை கொடுக்க அரசு முற்படுகிறது. இதனால் தென்பகுதியின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதாக எச்சரிக்கப்பட்டாலும் அதற்கப்பால் செயல்படவும் அரசு முனைகிறது. இதற்காகவே எதிர்க்கட்சிகள் மீது கடும் நெருக்கடிகளைக் கொடுத்தவாறும் ஊடகங்களுக்கு வாய்ப்பூட்டை போட்டும் காரியங்களை சாதிக்க அரசு முற்படுகிறது.

வன்னியில் படையினருக்கு ஏற்படும் இழப்புகள் மற்றும் பின்னடைவுகள் குறித்து ஊடகங்கள் வெளியிடும் தகவல்கள் தெற்கில் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்துகிறது. இராணுவத்திலிருந்து தப்பியோடுவோரின் தொகையும் அதிகரிக்கிறது. தற்போதைய மிக மோசமான வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் படைகளில் சேருவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியுமென அரசு கருதுகிறது. ஆனாலும் அது சாதகமான பலனைத் தராததால் இராணுவத்திலிருந்து தப்பியோடியோரை மீண்டும் படையணிகளில் இணைத்து விட அரசு முயல்கிறது.

(தொடர்ச்சி Sunday Thinakkural பாதுகாப்பு நிலைவரம் பக்கம் பார்க்க )

Email this page Your Opinion Print this page
ஏன் இந்தத் தாக்குதல்கள்?
வேட்டையாடப்படும் தமிழக மீனவர் மௌனமாக இருக்கும் இந்திய அரசு
எதிரணியினரின் போராட்டமும் அசைந்து கொடுக்காத அரசும்!
சிங்கள மக்களின் பிரச்சினை என்ன?
ஊடகங்களுக்கு எதிரான போர்ப் பிரகடனம்!
கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள கிழக்கு முஸ்லிம்களின் எதிர்காலம்
பெற்றோலிய விலை உயர்வு: காரணங்களும் தாக்கங்களும்
பல்கலைக்கழக அனுமதியில் சிறுபான்மை சமூகங்களுக்கு அநீதி?
குடாநாட்டை கலக்கும் கொள்ளையர்கள்!
ஹிலாரியின் பிரசாரப் பின்னடைவில் மலர்ந்துள்ள ஒபாமாவின் வெற்றி
மகிந்தவின் சுக்கிர திசை தொடர்கிறது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com