பாதுகாப்பு அமைச்சுக்கும் ஊடகவியலாளர்களுக்குமிடையில் ஆரம்பித்திருக்கும் முறுகல் அல்லது நெருக்கடி நிலை, தீர்வு ஏற்படுவதற்குப் பதிலாக விரிவடையக் கூடிய விபரீதத்தையே காணக்கூடியதாகவுள்ளது. பாதுகாப்புச் செயலாளரின் நேரடி அச்சுறுத்தல் ஊடகவியலாளர்களின் மன நிலையை மோசமான விதத்தில் பாதிப்படையச் செய்துள்ளது. அதுமட்டுமன்றி, ஊடகவியலாளரின் உயிர் பாதுகாப்புக்கும் ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக, சுயாதீனமாக செயற்படும் உரிமையுடையவர்கள். அவர்களுக்குரிய கருத்து, எழுத்துச் சுதந்திரத்தை எந்தச் சக்தியாலும் பறித்தெடுக்க முடியாது. ஆனால், இன்று ஊடகவியலாளர்களால் சுயாதீனமாக இயங்க முடியாத நிலை உருவாகியுள்ளது. அண்மையில் தாக்குதலுக்குள்ளான த நேசன் பத்திரிகையின் இணையாசிரியர் கீத் நொயார் உட்பட பல ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வருகின்றனர். எமது நாட்டின் தலை சிறந்த அரசியல் விமர்சகர்கள், பத்தி எழுத்தாளர்கள் அடுத்தடுத்து அச்சுறுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
அனைத்து ஊடகங்களும் அரசைப் பாதுகாக்க வேண்டும், அரசுக்கு குடை பிடிக்க வேண்டுமென நினைப்பது ஆரோக்கியமான ஊடக கலாசாரத்திற்கு ஏற்புடையதல்ல. ஊடகவியலாளரின் பேனா முனை சுதந்திரமாக எழுதும் உரிமையுடையது. விமர்சனங்களைக் கண்டு சகிக்க முடியாதவர்கள் அரசியலுக்கு வரவேண்டிய அவசியமே இல்லை. ஜனநாயக அரசியலில் ஒருநாள் பாராட்டப்படலாம். மறுநாள் விமர்சிக்கப்படலாம். இரண்டையும் சமாந்தரமாக ஏற்று ஜீரணிக்கும் வலிமை ஒவ்வொருவரிடமும் காணப்பட வேண்டும். தற்போது உருவாகியுள்ள சூழ்நிலை ஆரோக்கியமானதாகத் தென்படவில்லை. அரசுக்கும் ஊடகத்துறைக்குமிடையில் ஏற்பட்டிருக்கும் இந்த மனக்கசப்பை மேலும் மோசமடைய இடமளிக்கப்படக்கூடாது. இதனை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய பாரிய பொறுப்பு ஜனாதிபதியின் கரங்களில் தான் தங்கியுள்ளது. புலிகளுக்கு எதிரான யுத்தத்தை ஊடகங்களுக்கு எதிரான யுத்தமாக அரசியல் கட்சிகளுக்கு எதிரான யுத்தமாக மாற்றும் முயற்சியில் பாதுகாப்புச் செயலாளரும் இராணுவத் தளபதியும் ஈடுபட முனையக் கூடாது. ஊடகவியலாளர்களின் கடும் விமர்சனங்களையும் தாங்கிக் கொள்ளும் மன நிலையை அவர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
நாட்டின் இன்றைய மோசமான நெருக்கடி நிலையில் அரச தரப்பு ஊடகத் துறையை உதாசீனப் போக்குடன் நடத்த முயற்சிக்குமானால் அது பெரும் சிக்கல்களைத் தோற்றுவித்து விடலாம். ஐந்து ஊடக அமைப்புகள் சில தினங்களுக்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து தற்போது எழுந்துள்ள நிலைமையையிட்டு கலந்துரையாடியுள்ளனர். நாட்டின் தலைவருடனும் எதிர்க்கட்சித் தலைவருடனும் பிரச்சினை குறித்துப் பேசுவதை அர்த்தமுள்ளதாகக் கருத முடியும். ஊடக சுதந்திரமென்பது ஜனநாயக அரசியலில் முக்கியமானதாகும். சர்வாதிகாரத்துக்கும் ஜனநாயகத்துக்குமிடையில் ஊடகம் இன்று பந்தாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நிறைவேற்று அதிகாரம் என்பது சர்வாதிகாரத்தின் அண்ணன், தம்பி போன்றதாகும். இந்த அதிகாரத்தின் கைகளுக்குள் ஊடகவியலாளர்கள் கழுத்திறுகிப் போயுள்ளனர். இந்தத் தருணத்தில் தான் ஜனநாயகம் விழித்துக் கொள்ள வேண்டியுள்ளது.எமது நாட்டில் நிறைவேற்று அதிகாரம் உருவானதன் பின்னர் ஊடகங்களை கட்டுப்படுத்தும் முயற்சிகளும் முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டன. இதனை இனிமேலும் நீடிக்க இடமளிக்க முடியாது.
ஊடக சுதந்திரம் பேணப்பட வேண்டுமானால் ஜனநாயக அரசியல் முறைமை வலிமைப்படுத்தப்பட வேண்டும். அதற்குரிய சாத்தியமான வழிவகைகளை கையாள்வதற்குரிய காத்திரமான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டே ஆக வேண்டும். அதிகார வர்க்கம் பேனா முனைகளை அடக்குவதற்கு வாளை அல்லது துப்பாக்கியை பயன்படுத்த முனைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லாது போனால் நாட்டில் ஊடக சுதந்திரம் மட்டுமல்ல ஜனநாயகமுமே செத்துமடியும் அபாயம் ஏற்பட்டு விடலாம்.