லண்டன் : பணியில் இருந்து ஓய்வு பெற்று வீட்டுக்குள் மன அழுத்தத்துடன் முடங்கிக்கிடப்பவர்களே, மீண்டும் வேலைக்குத் திரும்புங்கள் மன அழுத்தம் பறந்து போய்விடும் எனக் கூறுகிறார்கள் இங்கிலாந்து ஆய்வாளர்கள்.
சமீபத்தில் தாங்கள் நடத்திய ஆய்வில்தான் இது தெரியவந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 555 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 169 பேர் பணியில் இருந்து ஓய்வுபெற்ற 3 மாதத்தில் மீண்டும் பகுதிநேர வேலைக்கு திரும்பியுள்ளனர். 51 பேர் முழு நேரப் பணிக்குத் திரும்பியுள்ளனர். 75 பேர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற 4 மாதத்தில் மீண்டும் பகுதிநேர வேலைக்கும் 256 பேர் முழுநேர வேலைக்கும் திரும்பியுள்ளனர்.
இவர்களிடம் மீண்டும் பணிக்குத் திரும்பியது குறித்துக் கேட்டபோது; அனைவருமே வீட்டில் வேலை செய்யாமல் இருக்கும் போது எதையாவது நினைத்து மனதைக் குழப்பிக் கொள்வதாக இருந்தது. இதனால் மன அழுத்தமும் அதிகரித்தது. இதனாலேயே மீண்டும் பணிக்குத் திரும்பினோம் என்றே தெரிவித்துள்ளனர்.
தற்போது தினந்தோறும் எங்களுக்கென ஒதுக்கப்பட்ட பணி உள்ளது. அதில்தான் எங்களது முழுச் சிந்தனையும் உள்ளது. வேலையை தவிர்த்து தேவையில்லாததை நினைக்க வழியில்லை. தற்போது வருமானமும் கிடைக்கிறது. மன அழுத்தம் பறந்து மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து ஆய்வாளர்களின் இந்த ஆய்வுக்கட்டுரை லண்டன் மருத்துவ இதழ் ஒன்றிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.