*ஆன்மிகமும் உதவும் என்கிறார் இராணுவ அதிகாரி
ரொஷான் நாகலிங்கம்
சட்டவிரோத ஆயுதப் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு சிவில் சமூகங்களின் பங்களிப்பு அவசியமென இராணுவ அதிகாரி லெப்டினன்ட்கேணல் சுகந்த செனிவிரட்ன தெரிவித்துடன் ஆன்மிக ரீதியில் இவற்றின் பாவனையை கட்டுப்படுத்த முடியுமெனவும் தெரிவித்தார்.
சிறு ஆயுதங்களுக்கு எதிரான தெற்காசிய அமைப்பின் இலங்கை வலைப்பின்னல் ""துப்பாக்கியின் உண்மைக்கதை' எனும் தலைப்பில் வெள்ளிக்கிழமை ரான்ஸ் ஏசியா ஹோட்டலில் நடத்திய ஊடக வியலாளர் மநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்;
சுதந்திரத்துக்கு பின்னரே ஆயுதம் மூலமான முதல் தாக்குதல் 1959 இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க மீது நடத்தப்பட்டது. ஜே.வி.பி.யினர் தமது முதல் கிளர்ச்சியின் போது அனுமதிபெற்ற ஆயுதங்கள் மூலமே தமது நடவடிக்கையை மேற்கொண்டனர். 1970 க்கு முன் படையினரிடமிருந்து துப்பாக்கிகள், ஆயுதப்பொருட்கள் மற்றும் கிரனேட் என்பவை பொதுமக்கள் கைகளுக்கு செல்ல விடாது தடுப்பதற்கான சிறந்த முகாமைத்துவம் மிக்க பொறிமுறையிருந்தது.
ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சியின் போது 1988/89 காலப்பகுதியில் அவர்கள் தமது உறுப்பினர்களை இராணுவத்துக்கு அனுப்பி ஆயுதப்பயிற்சியை பெற்றதுடன் இதன் ஊடாக ஆயுதங்களைப் பெற்று தமது செயற்பாடுகளை முன்னெடுத்தனர். இக்காலப் பகுதியிலேயே ரி 56 ரக துப்பாக்கி பாவனை மூலமான தாக்குதல் இடம்பெற ஆரம்பித்தது.
அக்காலப்பகுதியில் ஐ.தே.க.வின் செயலாளராகவிருந்த ஹர்ஷா அபயவர்தன ரி56 ரக துப்பாக்கியால் மோட்டார் சைக்கிளில் வந்தஇருவரால் தாக்கப்பட்டார். அவர் வீட்டுக்கு வெளியில் தனது வாகனத்தை எடுக்கும் போது இராணுவ பாணியிலான தாக்குதல் நடத்தப்பட்டதாக இதனைக் கண்ணுற்றவர்கள் தெரிவித்தனர். இந்த பாணியை பயிற்சி பெற்றவர்களாலேயே மேற்கொள்ள முடியும். அது போன்ற தாக்குதலே உதவி பொலிஸ் அத்தியட்சர் டெரன்ஸ் குணவர்த்த மீதும் இடம்பெற்றது.
இந்திய இராணுவத்துடன் வடக்கு கிழக்கில் இருந்த ஆயுதக் குழுக்கள் 1990 இல் அரசுக்கு ஆதரவாக மாறியதால் பின்னர் கொழும்பு வந்தனர். இதன் பின்னர் பெருமளவில் சட்டவிரோத ஆயுதங்களின் பெருக்கமும் தாக்குதல்களும் அதிகரித்தன.
இவ்வாயுதங்கள் பாதாள உலகத்தவர்களின் கைகளில் சென்றதனாலேயே கொலைகள், தற்கொலைகள், கொள்ளைகள் மற்றும் பாலியல் வன்முறையும் பெருமளவில் நாட்டின் சகல பகுதிகளிலும் அதிகரித்தன.
1995 க்கு பின்னர் இராணுவ நடவடிக்கையின் போது பாவிக்கப்பட்ட ஆயுதங்களின் பாவனை தொடர்பில் இராணுவத்தினர் கணக்கு காட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டதால் அவர்கள் தமது அறைகளுக்கும் பின்னர் வீடுகளுக்கும் கொண்டு சென்றனர். இதனாலும் சட்டவிரோத ஆயுதங்கள் பெருகின. இதன் காரணமாக தற்கொலைகள், கொலைகள், பாலியல் வல்லுறவு மற்றும் கொள்ளைகள் அதிகரித்தன.
இதனைக் கட்டுப்படுத்துவதற்கு சட்டவிரோத ஆயுதங்களை பறிக்க வேண்டியது அவசியமாகும். முதலில் பாவனையாளர்களுக்கு ஆயுதங்கள் வருவதை தடுக்க வேண்டும். அடுத்தது இருக்கின்ற வற்றைக் களைய வேண்டும் இதனை உடனடியாக மேற்கொள்ள முடியாது.
இதற்கு சிவில் சமூகங்களின் ஒத்துழைப்பு அவசியமானதாகும் தனித்து ஆயுதங்களை பறிப்பதனால் கொலைகளையும், தற்கொலைகளையும் நிறுத்த முடியாது இதற்கு ஆன்மிகம் பெரும் பங்காற்ற முடியும் என்றார்.
கிங்ஸிலி ரொட்றிகோ
பவ்ரல் அமைப்பின் தலைவரான கிங்ஸிலி ரொட்றிகோ உரையாற்றுகையில்;
சிறு ஆயுதங்கள் தொடர்பில் சிவில் சமூகங்கள் இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்றுகின்றதுடன் இலங்கை ஐ.நா.திட்ட செயற்பாட்டினை தேசிய ஆணைக்குழுவை அமைத்து பெரும் பங்காற்றுகின்றது.
அதாவது, 2001 இல் ஐ.நா. திட்டத்துக்கு அமைய தெற்காசியாவில் முதன்முதல் தேசிய ஆணைக்குழுவை அமைத்து சிறு ஆயுதங்கள் இலகுரக ஆயுதங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொள்கின்றது. குறிப்பாக இது தொடர்பான அறிவூட்டல் நிகழ்ச்சிகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது.
இந்த தேசிய ஆணைக்குழுவுக்கு தொடர்ந்து பங்களிப்பு வழங்கி இலங்கை அரசுக்கு உதவுமாறு நான் கோருவதுடன் நாட்டை பாதுகாப்பான சமாதானத்தை எட்டுவதற்கும் அதனை ஸ்திரப்படுத்துவதற்கும் உதவுமாறு வேண்டுகின்றேன் என்றார்.
இதன்போது ஆயுத வன்முறையால் இழப்புகள்; அதன் மூலம் கற்ற பாடம் என்னும் அறிக்கையை கொழும்பு பல்கலைக்கழகத்தின் மனித உரிமை ஆய்வுக்கான நிலையத்தின் பணிப்பாளர் பேராசியர் ரவீந்திர பெர்னாண்டோ வெளியிட்டார்.