எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வில் கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்கிரம காலை 9.30 மணியளவில் முக்கிய உரையொன்றை நிகழ்த்துவாரென பேரவையின் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உரை நிகழ்த்துவதற்காக மாகாண சபையின் பேரவை மண்டபம் உள்ள கிழக்கு மாகாண பிரதம செயலகத்திற்கு வருகை தரும் ஆளுநருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும். பின்னர் தேசியக் கொடி, மாகாண சபைக் கொடி ஏற்றும் நிகழ்வுகள் இடம்பெறும்.
அதனை அடுத்து மாகாண சபையின் விசேட அமர்வு ஆரம்பமாகும். ஆளுநர் உரை நிகழ்த்தப்பட்ட பின்னர், சபையின் அமர்வுகள் அன்றைய தினம் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்படும். ஒத்திவைக்கப்பட்ட அமர்வு மீண்டும் ஆரம்பமாகும்போது, கிழக்கு மாகாண சபையின் வழமையான அலுவல்கள் ஆராயப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கூடுதல் ஆசனங்களைப் பெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட இரண்டு போனஸ் ஆசனங்களுக்கு நியமிக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்களில் பிரியந்த பிரேமகுமார பதவி ஏற்றுள்ளார். அவர் ஆளுநர் முன்பாகப் பதவிப் பிரமாணம் செய்த பின்னர் ஜூன் 4 ஆம் திகதி நடைபெற்ற சபையின் முதலாவது கூட்டத்தில் கலந்துகொண்டார். இரண்டாவது போனஸ் ஆசன உறுப்பினராக அறிவிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னைநாள் அரச அதிபர் மோனகுருசாமி இதுவரை பதவியேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.