கதிர்காமம் புனித பிரதேசத்தில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் 42 கடைகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட திடீர்த் தீயினால் எரிந்துள்ளன.
இவற்றில் 22 கடைகள் முற்றாகவே எரிந்துள்ளன. 20 கடைகள் பகுதி அளவிலான சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.
இச்சம்பவம் இடம்பெற்றதும் கதிர்காமம் பிரதேச சபையின் தீயணைப்புப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அங்கிருந்து எவரும் சம்பவ இடத்துக்கு வரவில்லை எனவும் கடை உரிமையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதனால் பொதுமக்களும் பொலிஸாரும் கடற்படையினரும் இணைந்து பலத்த சிரம்தின் மத்தியில் தீயை மேலும் பரவாமல் அணைத்தனர்.
கதிர்காமம் கடைத்தொகுதியில் மொத்தமாக 140 கடைகள் உள்ளன. மாலைகள் மற்றும் ஆலய பூசைப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் உணவுப் பொருட்கள், சிற்றுண்டிகள் விற்பனை செய்யும் கடைகளுமே உள்ளன.
இந்தச் சம்பவத்தால் 3 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்டவர்களிடம் நட்ட ஈடுகோரி விண்ணப்பித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலக உயர் அதிகாரிகள் குழுவினர் வந்து பார்வையிட்டுள்ளனர். மின்சாரக் கோளாறே இத்தீ ஏற்படக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது.
எதிர்வரும் கதிர்காமத் திருவிழாவுக்கு முன்னதாக தற்காலிகமாகக் கடைகளை அமைத்துத் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கடைகள் ஆரம்பத்தில் மாணிக்க கங்கை ஓரமாக வசதிகள் இன்றி இயங்கி வந்தன. 1987 ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ ""கம் உதாவ' எழுச்சித் திட்டத்தின் கீழ் புதிதாக இக்கடைகளை நிர்மாணித்து வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.