மொறட்டுவ, கட்டுப்பொத்தவில் பஸ் மீது நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலையடுத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் 36 பேர் நேற்று மொறட்டுவ நீதிமன்ற நீதிபதி பிலிப்பிட்டியவினால் விடுதலை செய்யப்பட்டனர்.
குண்டு வெடிப்பையடுத்து மொறட்டுவை பல்கலைக் கழக தமிழ் மாணவர்கள் கைது செய்யப்பட்டதையறிந்த சட்டத்தரணிகள் துஷித் ஜோன்தாசன், எம்.ஐ.பாலசண்முகன் ஆகியோர் மாணவர்களின் விடுதலை தொடர்பில் உடனடியாகக் கவனம் செலுத்தினர். இவர்களுக்கு உதவியாக மொறட்டுவ பல்கலைக் கழக விரிவுரையாளர்களான டயஸ் மற்றும் விமலரட்ன ஆகியோரும் தமது தனிப்பட்ட ரீதியான உதவிகளை வழங்கியதுடன், பொலிஸ் நிலையத்திற்குச் சென்று மாணவர்களின் நலன்கள் தொடர்பில் கவனமெடுத்தனர்.
சட்டத்தரணிகள் துஷித் ஜோன்தாசன், பாலசண்முகன் ஆகியோரின் நடவடிக்கையில் அன்றைய தினமே பல்கலைக்கழக மாணவிகள் 8 பேர் பொலிஸாரினால் விடுதலை செய்யப்பட்டனர்.
ஏனைய 36 மாணவர்களும் நேற்று சனிக் கிழமை மொறட்டுவ நீதிமன்றத்தில் பொலிஸாரினால் ஆஜர் படுத்தப்பட்டதையடுத்து நீதிபதி பிலிப்பிட்டியவினால் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் வைத்து கைதுசெய்யப்பட்டதையிட்டு தான் வெட்கமும் வேதனையுமடைவதாகத் தெரிவித்த நீதிபதி அவர்களை எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ததுடன், சம்பந்தப்பட்ட மாணர்வர்களை அவரவர்களின் இடங்களுக்கு பாதுகாப்புடன் கொண்டுசென்று விடுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
தாம் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது பொலிஸாரினால் மிகவும் கீழ்த்தரமாக நடத்தப்பட்டதாக மாணவர்கள் தமது சட்டத்தரணிகளிடம் தெரிவித்துள்ளனர். அத்துடன், தமது சிலரின் அடையாள அட்டைகள் பொலிஸ் நிலையத்தில் பறித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் சட்டத்தரணிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து மாணவர்களின் அடையாள அட்டைகளையும் சட்டத்தரணிகள் பெற்றுக்கொடுத்தனர்.
இதேவேளை, தாம் கைதுசெய்யப்பட்டதையறிந்தவுடன் பொலிஸ் நிலையம் வந்து தமது நலன்களை கவனித்த சட்டத்தரணி துஷித்ஜோன் தாசனுக்கும் தமக்காக கட்டணமின்றி நீதிமன்றில் ஆஜராகிய சட்டத்தரணி எம்.ஐ. பாலசண்முகனுக்கும் மாணவர்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.