*எதுவும் கிடைக்கவில்லை
அக்கரைப்பற்று பிரதம தபாற்கந்தோரினுள் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகாக் கூறி, தபாலகக் கட்டிடத்தின் நிலப்பகுதியை தோண்டி படையினர் சோதனையிட்ட போதும் எதுவும் கிடைக்கவில்லை.
அனாமதேயத் தகவலொன்றையடுத்தே நேற்றுக் காலை 8 மணியளவில் பொலிஸார் சகிதம் வந்த படையினர் களஞ்சியசாலையில் இந்த ஆயுதங்களைத் தேடிப் பார்த்துள்ளனர்.
அக்கரைப்பற்று, அம்பாறை வீதியிலுள்ள இந்த தபாற்கந்தோருக்கு 1.5 மில்லியன் ரூபா செலவில் புதிய கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சர் மகிந்த விஜயசேகர, நீர் வழங்கல் வடிக்கால் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா ஆகியோர் திறந்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து இப் புதியகட்டிடத்தில் அஞ்சல் சேவைநடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் இக்கட்டிட களஞ்சிய அறையின் நிலப்பகுதியில் ஆயுதங்கள் இருப்பதாகக் கூறிநேற்றுக் காலை இராணுவத்தினர் இவ் அறையில் நிலப்பகுதிச் சிமெந்துத் தரையை உடைத்து சோதனை நடாத்தியுள்ளனர். எனினும் எதுவும் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக தமது அஞ்சல் திணைக்கள உயர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக அக்கரைப்பற்று தபால் கந்தோர் அதிபர் யு.கே. றகுமான் தெரிவித்தார்.
இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் க. பத்மநாதன் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
இக் கட்டிடம் தனியார் நிறுவனமொன்றால் நிர்மாணிக்கப்பட்ட போதும் முறைப்படி தபாற்கந்தோரிடம் கையளிக்கப்படாமல் அரசியல் இலாபங்களுக்காக அவசர அவசரமாக திறந்துவைக்கப்பட்டது.
இத் தபாற்கந்தோர் தரம் 2 உடையது. இதனை சில அரசியல்வாதிகள் தமது பிரதேசத்திற்கு மாற்றுவற்காக கடந்த காலம் தொட்டு பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்துவந்தனர்.
அது சாத்தியப்படாது போகவே இதை மீண்டு தமது பிரதேசத்திற்கு மாற்றுவதற்கான ஒரு செயலாகவே இது தெரிகின்றது. எனவே இது தொடர்பாக அஞ்சல் தொலைத் தொடர்பு அமைச்சர் மகிந்தவிஜய சேகரவிடம் கடுங்கண்டனம் தெரிவித்து முறைப்பாடு செய்துள்ளதாக பத்மநாதன் தெரிவித்தார்.