*மனித உரிமை மீறலென கடும் விசனம்
ரொஷான் நாகலிங்கம்
அனல் மின் நிலையம் அமைப்பதற்காக திருமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் பல ஏக்கர் நிலத்தை இந்தியாவுக்கு வழங்குவதை கடுமையாக எதிர்க்கும் ஜே.வி.பி, அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடப்போவதாகத் தெரிவித்தது.
இது தொடர்பாக அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவிக்கையில்;
சம்பூரில் பல காலமாக வாழ்ந்து வந்த மக்களை மீளக் குடியேறவிடாது அரசாங்கம் தடுத்து வருகிறது. இதனால் அம் மக்கள் இன்றும் அகதி முகாம்களில் இன்னல்களின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
இதற்கு காரணம் அந்நிலப்பரப்பை இந்தியாவுக்கு தாரைவார்ப்பதாகும். அம் மக்களை சொந்த மண்ணில் வாழவிடாது தடுப்பது மனித உரிமை மீறலாகும். எனவே, இதற்கெதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறோம்.
இது குறித்து எமது கட்சி உறுப்பினர்கள், சட்டவல்லுநர்கள் ஆலோசித்து வருகின்ற நிலையில், மிக விரைவில் அம் மக்கள் சார்பில் மனித உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்யவுள்ளோம்.
இந்த அரசாங்கம் மக்களின் நலனை கருத்தில் கொள்ளாது இந்தியாவுக்கு இலாபம் பெற்றுக்கொடுக்கும் வகையில் செயற்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றார்.