மொறட்டுவ கட்டுப்பெத்த மற்றும் கண்டி பொல்கொல்ல பகுதிகளில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பஸ் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசேட பொலிஸ் குழுக்கள் தொடர்ந்தும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதேநேரம் இவ்விரு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாகவும் ஐம்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மொறட்டுவ கட்டுப்பெத்த பகுதியில் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் 21 பயணிகள் கொல்லப்பட்டதுடன், 80 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இதேநேரம் கண்டி பொல்கொல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் குண்டு வெடிப்பில் இருவர் கொல்லப்பட்டதுடன், 20 பேர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதல்களையடுத்து மொறட்டுவ மற்றும் கட்டுப்பெத்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடத்தப்பட்ட தேடுதலில் மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் எண்மர் உட்பட 58 பேர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.
எனினும் இதில் எட்டு மாணவர்களும் வெள்ளிக்கிழமை இரவு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஏனைய 50 பேரும் நேற்றுக் காலை மொறட்டுவ நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூவரிடம் தீவிர விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தாக்குதலின் சூத்திரதாரி அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
அத்துடன் கிளைமோர் பொருத்தப்பட்ட இடத்திற்குச் சமீபமாக மூன்று நாய்கள் இறந்தது தொடர்பாகவும் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். குண்டை பொருத்தியவர்கள்தான் இந்த நாய்களிற்கு நஞ்சூட்டிக் கொன்றார்களா அல்லது வேறு காரணங்கள் ஏதுமுள்ளதா என்பது குறித்து விசாரணைகளும் நடைபெறுகின்றன.
சம்பவம் நடைபெற்ற பகுதியிலும் மொறட்டுவ மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், வீதிச் சோதனைகளும் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
கண்டியில்
இதேநேரம் கண்டி பொல்கொல்ல பகுதியில் பயணிகள் பஸ்ஸில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பாகவும் பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் சம்பவத்தின் சூத்திரதாரியெனத் தெரிவித்துள்ள பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தனர்.
இதேநேரம் இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட இருவரில் ஒருவரது சடலம் நேற்று மாலை வரை அடையாளங் காணப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டது.