வவுனியா மாவட்ட நீதிபதியாக கடந்த 9 வருடமாகக் கடமையாற்றிய நீதிபதி எம்.இளஞ்செழியன் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக (ஆணையாளர்) பிரதம நீதியரசர் சரத் என் சில்வா முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.
இந்த நியமனம் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் பிரதம நீதியரசர் தலைமையிலான நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் சிபார்சின் அடிப்படையில் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளது.
16.05.2008 முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்ட இந்த நியமனம் 05.06.2008 அன்று வைபவ ரீதியாக பிரதம நீதியரசரால் வழங்கப்பட்டது.
இவர் கடந்த 9 வருடங்களாக வவுனியா மாவட்ட நீதிபதியாக கடமையாற்றியுள்ளார். மூன்று வருடம் மன்னார் மாவட்ட நீதிபதியாகவும் ஒரு வருடம் யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி வழக்கின் விசேட நீதிபதியாகவும் கடமையாற்றியுள்ளார்.
கடந்த 12 வருட காலமாக வடக்கில் நீதிபதியாக கடமையாற்றியுள்ள இளஞ்செழியன் மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றதையடுத்து கிழக்கு மாகாணத்தில் திருமலை மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் மாவட்ட நீதிபதியாகவும் நீதிவானாகவும் கடமையாற்றிய போது செம்மணி புதைகுழி வழக்கு, மன்னார் காமலிட்டா பாலியல் வல்லுறவுக் கொலை வழக்கு, மடு தேவாலய குண்டுத்தாக்குதல் வழக்கு, லயன் ஏயார் விமான விபத்து வழக்கு, வவுனியா தாண்டிக்குளம் விவசாயக் கல்லூரி மாணவர் கொலை வழக்கு மற்றும் அண்மையில் வேப்பங்குளத்தில் 5 அப்பாவி இளைஞர்கள் கொலை வழக்கு போன்ற பிரபல வழக்குகளில் நீதிபதியாக கடமையாற்றியவர்.
இவர் கொழும்பு பல்கலைக்கழக சட்டமாணியும் கொழும்பு பல்கலைக்கழக சட்டமுதுமாணியும், கொங்ஹொங் பல்கலைக்கழக சட்ட முதுமானியுமாவார். மறைந்த பிரபல சட்டத்தரணி குமார் பொன்னம்பலத்தின் சட்டப் பாசறையில் வளர்ந்த இவரை அமெரிக்க அரசு கௌரவ விருந்தினராக அழைத்து கௌரவ பிரஜாவுரிமை பட்டமும், மாநில மேயர் அந்தஸ்தும் வழங்கிக் கௌரவித்ததும் குறிப்பிடத்தக்கது.
இவர் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவராவார். வேலணை திரு.திருமதி மாணிக்கவாசகர் ஆசிரியர், அதிபர் தம்பதிகளின் புதல்வருமாவார்.