பூநகரி மற்றும் முல்லைத்தீவுப் பகுதியில் நேற்றும் நேற்று முன்தினமும் கடும் விமானத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
பூநகரியில் வெள்ளிக்கிழமை இரவும் முல்லைத்தீவில் நேற்று பிற்பகலும் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
பூநகரியிலும், கல்முனையிலுமேயே வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
பராவெளிச்சக் குண்டுகள் ஏவப்பட்டே இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. புலிகளின் இனங்காணப்பட்ட நிலைகள் மீதே குண்டு வீச்சு விமானங்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக விமானப் படையினர் தெரிவித்தனர்.
இதேநேரம் முகமாலைப் பகுதியில் நேற்றுக் காலை முதல் படையினர் கடும் ஷெல் தாக்குதலை நடத்தியுள்ளனர். காலை முதல் நண்பகலுக்கும் மேலாக முகமாலை மற்றும் பளை பகுதிகளை நோக்கி தொடர்ச்சியாக கடும் ஆட்லறி ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதேநேரம், முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் நேற்று பிற்பகல் 1.20 மணியளவில் கடும் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
புலிகளின் தலைவர்கள் ஒன்று கூடும் மத்திய நிலையம் மீதே இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும் இதனால், அவர்களுக்கு பலத்த சேதமேற்பட்டுள்ளதாகவும் விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்.