* தேசிய வீரர்கள் தின நிகழ்வில் எதிரணிக்கு ஜனாதிபதி அறிவுரை
எம்.ஏ.எம். நிலாம்
தேசத்தை பயங்கரவாதத்திடமிருந்து பாதுகாப்பதற்காக எமது படை வீரர்கள் செய்த தியாகத்தை அரசியல், சுய நலன்களுக்காக கேவலப்படுத்த வேண்டாமெனவும் படை வீரர்களின் அர்ப்பணிப்புணர்வையும் வெற்றியையும் உதாசீனப்படுத்தி சர்வதேசத்துக்கு காட்டிக் கொடுக்க முனைய வேண்டாமெனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்தார்.
ஜனநாயகம், சமாதானம் என்பவற்றை மீட்டெடுக்கும் போராட்டத்தையே படை வீரர்களும் முன்னெடுத்தனர். அவர்களின் அந்த தியாகத்தை நாடு மதிக்கத் தவறினால் அதைவிட துரோகச் செயல் எதுவுமிருக்க முடியாது எனவும், நாடு எதிர்பார்க்கும் ஜனநாயக, சமாதானத்தை எட்டும் நாள் வெகு தொலைவில் இல்லையெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தேசிய படை வீரர் தினத்தையொட்டிய பிரதான வைபவம் நேற்று சனிக்கிழமை மாலை ஜயவர்த்தனபுரக்கோட்டை பாராளுமன்றக் கட்டிடத்துக்கு அருகில் நடைபெற்றபோது அங்கு படை வீரர் நினைவு தூபியை திறந்து வைத்த பின்னர் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மதத்தலைவர்களின் ஆசீர்வாதத்துக்கு மத்தியில் நினைவுத் தூபியை திரை நீக்கம் செய்து வைத்த பின்னர் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, நாட்டை பாதுகாப்பதற்காக எந்தத் தியாகத்தையும் செய்ய நாட்டு மக்கள் தயாராகவுள்ளதாகவும் அதேசமயம் சுய நல அரசியலுக்காக படை வீரர்களின் தியாகத்தை அவமதிக்கும் தீய அரசியல் சக்திகள் இருப்பது நாட்டுக்கே அவமானம் எனவும் கவலை தெரிவித்தார்.
இங்கு ஜனாதிபதி தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;
""கடந்த காலங்களில் தேசிய படை வீரர் தினத்தை கண்டி மைலப்பிட்டியவில் நடத்தினோம். இம்முறை பாராளுமன்றத்திற்கு முன்பாக நினைவுத் தூபி அமைத்து நினைவூட்டுகின்றோம். பாராளுமன்றம் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் உயர் பீடமாகும். அதற்குச் சமமானதே தேசத்தைப் பாதுகாக்கும் படை வீரர்களின் செயற்பாடுகள். இரண்டையும் சமாந்தரமாக நாம் மதித்தாகவேண்டும்.
ஜனநாயக அரசியல் நடவடிக்கைகளில் கூட காட்டுத்தர்பார் நடத்தப்பட்ட சம்பவங்கள் உண்டு. அப்படியான ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாட்டைப் பாதுகாக்கும் பெரும் பணியை படைவீரர்கள் நிறைவேற்றியுள்ளனர்.
பாராளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதிகளைக் கூட வேறுபாடுகாட்டாமல் பாதுகாத்தவர்களும் படைத்தரப்பினர் தான். இன்று எமது படைவீரர்களை உலகமே பாராட்டி மதிக்கின்றது.
முழு உலகமும் பயங்கரவாதத்தை தோற்கடிக்கப் போராடிக்கொண்டிருக்கின்றது. இலங்கையிலும் எமது மண்ணை பயங்கரவாதத்திடமிருந்து மீட்பதற்காக இந்த மண்ணின் புதல்வர்களே உயிர் தியாகம் செய்து போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.
மக்களையும் நாட்டின் வளங்களையும் பாதுகாப்பதற்காகவும் ஒவ்வொரு பிரஜையினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் படை வீரர்கள் போர?டிக்கொண்டிருக்கின்றனர்.
மாவிலாறு போராட்டத்தின்போது எதிர்க்கட்சிகள் எம்மை விமர்சித்தனர். சம்பூரை மீட்கும் போரின்போதும் விமர்சித்தனர். அதன்பின்னர் பிரபாகரன் எமக்கு விரைவில் பாடம் புகட்டுவார் எனக் கூறி படையினரைப் பலவீனப்படுத்த முயற்சித்தனர். தொப்பிகலையை மீட்டபோது யாருமில்லாக் காட்டை பிடித்ததாக பரிகாசித்தனர். பின்னர் கிழக்கை முழுமையாக மீட்டு தேர்தலை நடத்தியதும் தேர்தல் ஊழல், மோசடி நிறைந்தது என்றனர். அரசு எதனைச் செய்தாலும் தவறான கண்கொண்டே பார்க்கின்ற எதிரணி அரசியலையே இங்கு நாம் பார்க்கின்றோம்.
எமக்கெதிரான குரல்களுக்கு எந்தவேளையிலும் எம்மால் பதிலளிக்க முடியும். ஆனால், முகமாலையில், கிளிநொச்சியில் புலிகளின் தாக்குதலுக்கு பதிலளிக்க தாமதம் காட்ட முடியாது.
எனக்கு முடியும், முழுப் படையையும் பயன்படுத்தி நாட்டைச்சுற்றி வேலிபோட முடியும். ஆனால் நாட்டுக்குத் துரோகமிழைக்க முயற்சிப்போரின் வாய்க்குப் பூட்டுப்போட முடியாது. அரசியல் தாக்குதலுக்கு பதிலளிக்க எம்மால் முடியும். ஆனால் முகமாலையில் நெஞ்சுக்கு நேரே குண்டுவரும்போதுநேராக அதற்கு முகம் கொடுக்கும் படைவீரர்களை அவமதிக்கும் வார்த்தைகளை அனுமதிக்க முடியாது. அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.
ஆயுதங்களால் மட்டும் யுத்தத்தில் வெல்ல முடியாது. படைவீரரின் மனத்தைரியம் மிகமுக்கியமானதாகும்.
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை திசைதிருப்ப முயலும் சர்வதேச சக்திகளையும் நாம் சந்திக்க வேண்டியுள்ளது. எந்தச்சூழ்நிலையிலும் எமது படைவீரர்களை காட்டிக் கொடுக்க எவருக்கும் இடமளிக்க மாட்டோம். சமாதானத்தை விற்றுப் பிழைக்கும் சக்திகள் படைவீரரின் தியாகத்தை மலினப்படுத்த முயற்சிக்கின்றனர்.
இதைப்போன்ற துரோகச் செயல் வேறென்ன இருக்க முடியும் எனக் கேட்கின்றேன்.
உள்ளூர் சதிகாரர்களதும், சர்வதேச சக்திகளதும் எந்தச் சவாலுக்கும் அழுத்தங்களுக்கும் நாம் ஒருபோதும் அடிபணியப்போவதில்லை. இந்த விடயத்தில் நான் முன்வைத்த காலை ஒருஅடியேனும் பின்வைக்கப் போவதில்லை.
நான் நாட்டு மக்களிடமும் எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கேட்பது எமது படைவீரரின் வெற்றியை ,முன்னேற்றத்தை குறைத்து மதிப்பிடாதீர்கள். அவமதிக்காதீர்கள். தேசத்தை பாதுகாத்து அடுத்த சந்ததிக்கு சுதந்திரமான, சமாதானமான பூமியை பெற்றுக்கொடுக்க நாம் ஒன்றாக பணியாற்றுவோம்.