|
கோகர்ணன்
தமிழகத்திலே யாரோ ஒருவர் புனைபெயரில் எழுதிய கட்டுரையொன்றில் இந்தியாவில் ஒலிம்பிக் தீப்பந்தத்தை வீதிவழி கொண்டு சென்ற போது அதை இடையூறு செய்து தலாய்லாமாவின் ஆதரவாளர்கள் கலகம் விளைவிக்காமல் இந்திய அரசாங்கம் பாதுகாப்பு வழங்கியது தவறு என்று கூறப்பட்டிருந்து. அந்தக் கட்டுரை என்ன நோக்கில் எழுதப்பட்டது என்று தெரிந்தோ தெரியாமலே மிகுந்த முக்கியத்துவத்துடன் நமது நாளேடொன்றில் மீளவும் பதிப்பிக்கப்பட்டது. இது மூர்க்கத்தனமான சீன விரோதம் காரணமானது.
1950 க்கு முந்திய திபெத்தில் சாதாரண மக்களின் வாழ்வு எப்படி இருந்தது என்று கட்டுரைய?ளருக்கோ அதை மீளப் பதிப்பிக்கப்பட்டவர்கட்கோ தெரியாமலிருக்கலாம். தலாய் லாமாவின் அரசியல் பற்றி விசாரிக்க அவர்கட்கு ஆர்வம் இல்லை. 1961 சீன இந்திய எல்லைப் போரில் சீனாவே ஆக்கிரமிப்பாளன் என்ற கருத்து இன்று வரை வாய்ப்பாடு போல ஒப்புவிக்கப்பட்டு வருகிறது. சீன இந்திய எல்லைத் தகராறு பற்றிப் புதிதாகக் கிடைக்கிற ஒவ்வொரு தகவலும் தகராற்றைப் பேசித் தீர்ப்பதற்கு நேருவின் நிருவாகம் எவ்வளவு தூரம் இடையூறாக இருந்து வந்தது என்று காட்டுகிறது. எனினும், அதுபற்றிய அக்கறை மிகச் சிறுபான்மையான இடதுசாரி ஏடுகளை விட்டால் தமிழிலில் எங்கும் காணக் கிடைப்பதில்லை.
வியட்நாம் போரின் போது அமெரிக்காவின் கொடிய போரை எதிர்த்து அமெரிக்காவிற்குள்ளேயே பெரும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தெழுந்த பின்புங் கூடத் தமிழரிடையே இடதுசாரிகளை விட்டால் எந்தத் தமிழ்த் தலைமையும் அமெரிக்காவைக் கண்டிக்கத் துணியவில்லை. மாறாக வியற்நாமியருக்கு எதிரான கருத்துகள் பரப்பப்பட்டன.அதில் ஒன்று வியற்நாமின் கம்யூனிஸ்ற்றுகள் தென் வியற்நாமை விடுவித்தால் அங்கே வாழுகிற தமிழகத்து வட்டிக்கடைக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ""சுதந்திரன்' ஆசிரியர் கோவை மகேசன் தெரிவித்த மணியான கருத்து.அமெரிக்கா கம்யூனிச சர்வாதிகாரத்திலிருந்து எங்களின் சனநாயகங்களை எல்லாம் காப்பாற்றப் போரிடுவதாகவே எங்களது தலைவர்கள் சொல்லி வந்தார்கள்.அந்தத் தலைவர்கள் எல்லாரும் தூக்கி எறியப்பட்டாலும், அவர்களது பக்கச் சார்பானதும் நேர்மையற்றதுமான வாதங்களின் தாக்கத்திலிருந்து தமிழ்த் தேசியவாதம் இன்னமும் விடுபடவில்லை. அது விடுபடக் காலமெடுக்கும்.விடுபடாத வரை, விடுதலை என்பது இன்னுமொரு அடிமைத்தனம் நோக்கிய நகர்வாகவே இருக்கும்.
விடுதலைப் போராட்டங்கள் அறம் பற்றியன. அறஞ்சார்ந்த பார்வையால் வழிநடத்தப்படாத விடுதலைப் போராட்டங்கள் வென்றதில்லை.குறுகிய கால வெற்றிகள்,தோல்விக்கே இட்டுச் செல்கின்றன.அறம் என்று முழு உலகிற்கும் பொதுவானதாக உள்ளதென எதையும் நான் கருதவில்லை. மனித சமத்துவம்,மனிதரது அடிப்படை உரிமைகள் என்கிற அடிப்படைகளில் நோக்கும் போது நமது இருப்பின் அடிப்படையிற் சில முடிவுகட்கு வர இயலும்.அந்த அறம் தேசங்களின் விடுதலையையும் நாடுகளின் சுதந்திரத்தையும் ஏற்கும்.மனிதரை மனிதர் அடக்கி ஒடுக்குவதையும் பல மனிதரின் உழைப்பைச் சிலர் சுரண்டிப் பறிப்பதையும் மறுக்கும். நீதிக்காகப் போராடச் சொல்லும் தமிழ்த் தேசியவாதம், தமிழரின் மொழி உரிமைபற்றிப் பேசத் தொடங்கிய காலந் தொட்டுத் தனி நாடு கேட்கிற நிலைக்குத் தள்ளப்படுகிற வரையும், அதற்கு அப்பாலும், எத்தகைய அறஞ் சார்ந்த பார்வையைக் கொண்டிருந்தது?
தமிழர் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகம் என்ற உண்மை இன்னமும் நமக்கு உறைக்கவில்லை. இன்னமும் ஆண்ட பரம்பரைக் கனவுக்குள் திரும்பத் திரும்ப அமிழ்த்தப்படுகிறோம். நம்மிற் சிலருக்கு அந்தக் கனவுக்கும் நிச வாழ்வுக்கும் வேறுபாடு தெரியாது.இன்னமும் நமக்குச் சொல்லப்பட்டுவந்த மூவேந்தர் முச்சங்கம் என்பன பற்றிய புனைவுகளையே வரலாறாக நம்புகிறோம்.தமிழ் நமது கண்முன்னால் சீரழிகிறது.ஆனாலும் அதன் தொன்மையையும் தூய்மையையும் மேன்மைகளையும் பற்றிய புனைவுகளில் மகிழ்ச்சி அடைகிறோம்.""பேச்சு வானுயரம் பயணம் கால்நடை' என்பது தான் தமிழர் இருப்பின் யதார்த்தம். அது மாற வேண்டும்.அதை மாற்றுவதனால் நமது உண்மையான நிலை நமக்கு விளங்க வேண்டும்.
உரிமைக்கான போராட்டம் விடுதலைக்கான போராட்டமாக வளர்ந்து இப்போது இருப்பிற்கே போராட வேண்டிய நிலையில் தமிழ்ச் சமூகம் உள்ளது. இதற்கான பழியைக் குறிப்பாக எவர் மீதும் சுமத்துவது சரியாகாது.தமிழ்ச் சமூகம் தனது விடுதலைக்கான பொறுப்பை முற்றிலும் தன் வயமாக்காதவரை தவறுகள் தவிர்க்க இயலாதவை.
ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் என்ற வகையில் நமது நிலை என்ன? நம்மையொத்த நிலையில் உள்ள உலகின் பிற மக்கள் யார்? நாம் யாருடன் நம்மை அடையாளப்படுத்துவது? இந்த மாதிரி விடயங்களிற் சரியான முறைகளை வந்தடைய நமக்கு உலக நிலைமைகள் பற்றிய உண்மைகள் தெரிய வேண்டும். நமது வரலாறு பற்றிய உண்மைகள் தெரிய வேண்டும். அவை ஏன் சொல்லப்படுவதில்லை என்பதை நாம் கவனமாக ஆராய வேண்டும்.
1950 களில், குறிப்பாக 1961 சத்தியாக்கிரகத்தின் தோல்வியை அடுத்து ஏற்பட்ட திகைப்பின் தொடர்ச்சியாக நமக்கு முன்னுதாரணமான ஒரு நாடாக இஸ்ரேல் காட்டப்பட்டது.இஸ்ரேல் இயற்றி வந்த கொடுமைகள் பற்றி பேச இஸ்ரேலின் உருவாக்கம் எவ்வளவு அநீதியானது என்றோ நமக்குச் சொல்லப்பட்டதில்லை.""மீண்டும் ஒருமுறை ஆளுகிறார்கள்' என்ற அந்தப் ""பொதுமை' தமக்குப் போதுமானதாகவே தலைவர்கட்குத் தெரிந்தது.நமது நிலை பலஸ்தீனத்தின் அராபியர்களது போன்றது என்பதையும் அந்த ஒற்றுமை பல வகைகளிலும் பொருந்தி வருகிறது என்பதையும நாம் காலங்கடந்தே உணர முடிந்தது.எனினும், அது கூட அதிக காலம் நிலைக்கவில்லை. பலஸ்தீன விடுதலை இயக்கம் சர்வதேச அங்கீகாரம் பெறும் வரை பலஸ்தீன மக்களுடன் தமது தமிழ்த் தேசியவாதிகட்கு அனுதாபம் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை.தமிழ் இளைஞர் இயக்கங்கட்கும் பலஸ்தீன விடுதலை இயக்கங்கள் வழங்கிய ஆதரவுக்குப் பல பின்னணிகள் இருந்தன.அந்தப் பின்னணிக ளினூடு கொஞ்சமாவது புரிதல் இருந்து. அந்த வழி வந்த நல்லுறவு பின்னர் கட்டி எழுப்பப்பட்டதா? இல்லை.ஏனெனில் பங்களாதேஷ் (முன்னர் கிழக்கு வங்கம்,கிழக்குப் பாக்கிஸ்தான்) விடுதலையை வென்று தந்த இந்தியாவே தமிழீழ விடுதலையை வென்று தரும் என்ற கனவு ஊட்டி வளர்க்கப்பட்டது.பங்களாதேஷில் இந்தியப் படைகளும் அவர்களது உள்ளூர்க் கூட்டாளிகளும் அங்கே ஒரு வலிய போராட்டச் சக்தியாக இருந்தது கம்யூனிஸ்ட்டுகளை வேட்டையாடியது பற்றி அறியும் அக்கறை நமக்கு இருக்கவில்லை.
இந்தியாவின் எடுப்பாகச் செயற்பட்ட முஜிபுர் ரஹ்மான் மக்களின் ஆதரவை இழந்து இராணுவச் சதியில் உயிரிழந்த நாள் வரை,முஜிபுர் தமிழருக்கு முன்னுதாரணமாகக் காட்டப்பட்டு வந்தார். இப்போது கொசோவோ நமக்கு முன்மாதிரியாகக் காட்டப்படுகிறது. இந்த முன்னுதாரணம் இன்னுஞ் சில காலத்துக்குப் பயன்தரும்.
நமக்கான முன் மாதிரிகட்கான ஒரே தகுதி, தோற்றப்பாடான வெற்றி மட்டுமே என்று தான் எண்ணத் தோன்றுகிறது.இவ்வாறான வெற்றிகட்கான விலையென்னவென்றோ அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னவென்றோ நாம் யோசிப்பதில்லை. அவற்றை ஆதாரமாகக் கொண்டு பின்தொடரக் கூடாவர்கட்குப் பின்னாற் போகுமாறு தூண்டப்படுகிறோமே. அது தான் மிகவுங் கெடுதலானது.தூண்டுவோரின் நோக்கங்களை ஆராயாமல் விடுவது ஆபத்தானது.
சீனாவோ ஈரானோ பாக்கிஸ்தானோ ரஷ்யாவோ இன்றைய சூழலில் இலங்கையிலோ ஆசிய ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க நாடு எதிலுமோ நேரடியாக எவ்வகையிலும் குறுக்கிடும் வாய்ப்பில்லை.அவற்றின் தேவைகளும் நோக்கங்களும் விஸ்தரிப்பை அடிப்படையாகக் கொண்டவையல்ல.இரண்டு நாடுகளிடையிலான நல்லுறவு என்ற அடிப்படையிலும் அரசுக்கட்சியிடையிலான நட்பு என்ற வகையிலும் வழங்கப்படுகிற உதவிகள், இராணுவத் தளவாட வழங்கல் உட்பட,ஆக்கிரமிப்பு நோக்கமுடையவையல்ல.இலங்கை எப்படித் தனது பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென்று சில நாடுகள் சொல்கிற கருத்துகள் கூட நட்பு அடிப்படையில் அமையலாம்.மேற்குறிப்பிட்ட நாடுகள் அந்த எல்லையைக் கூட எட்டவில்லை. அவற்றைப் பற்றிய பகைமை உணர்வைத் தமிழரிடையே திட்டமிட்டுப் பரப்புகிறவர்களது நோக்கம் என்னவாக இருக்க இயலும்? அறியாமையா? வன்மமா? வஞ்சகமா?
அதேவேளை, இலங்கையில் முன்னவகையான தீர்வுகள் ஏற்புடையனவல்ல என்று வலியுறுத்துகிற ஒரு நாடு பற்றி நாம் ஏன் போதியளவு கண்காணிப்புக் காட்டத் தயங்குகிறோம்?
இலங்கையில் சனநாயகமும் மனித உரிமைகளும் பேணப்பட வேண்டும் என்று அமெரிக்கா சொல்வதைத் தமிழர்கட்கு ஆதரவான நிலைப்பாடாகக் கருதுமாறு ஏன் தூண்டப்படுகிறோம்.
இலங்கைக்குக் கேடானதும் இலங்கை அரசுக்கு எதிரானதும் தமிழருக்கு நல்லதாக அமைய அவசியமில்லை.அதிலும் முக்கியமாகத் தமிழரைக் காரணங்காட்டிக் குறுக்கிடுகிற எவரும் தமிழரின் நன்மை கருதிக் குறுக்கிடவில்லை என்பதை நாம்நன்கு நினைவிலிருத்த வேண்டும். |