Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, June 08, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
 
பக்கம் - 02
 
புஷ் நிர்வாகம் ஈரான் மீது தாக்குதலை தொடுக்குமா?
ஏ.ஜீ.எம்.நஜீப்

ஆய்வுகளின் அடிப்படையில் ஊகங்கள் வெளியிடப்படுவதும் நிகழ்காலப் புள்ளிவிபரங்களை நம்பி எதிர்காலக் கணிப்பீடுகளைச் செய்வதும் மேகத்தை நம்பி மழையைத் தீர்மானிப்பதும் பல்வேறு மட்டங்களில் அவரவர் அறிவிற்கும் தகவல்களுக்கும் எட்டியவாறு தீர்மானமாக எடுத்துக் கொள்ளப்பட்டாலும் காலம் யதார்த்தத்தை முடிவு செய்கின்றது.

ஆய்வுகளும் தகவல்களும் ஊகங்களும் சொல்லப்படுகின்ற இடத்தைப் பொறுத்தும் அதற்கொரு கனதி பெறுமானம் அல்லது அங்கீகாரம் இருப்பதை மறுப்பது முட்டாள்தனமான நடவடிக்கையாக அமைந்திருந்தாலும், ""புஷ் நிர்வாகம் விரைவில் ஈரானைத் தாக்கும்' என்ற தலைப்பு தொடர்பான சிறு குறிப்பொன்றைச் சொல்லி நமது வார இதழ் தொடர்பாக வாசகர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் போல் தோன்றுகின்றது.

எனவே...!

மே மாதம் நடுப்பகுதியில் நியூயோர்க் டைம்ஸ் வார இதழ் வெளியிட்ட செய்தியொன்று சர்வதேச ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதே தலைப்பிலான செய்தியை இஸ்ரேல் வானொலி சில தினங்களுக்கு முன்னர் ஒலிபரப்புச் செய்தபோது, அச்செய்தியை சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளாக எடுத்துக் கொண்டன. அச்செய்திகள் அனைத்தும் நாம் மேற்சொன்ன நியதிகளின் அடிப்படையில் வெளியிடப்பட்ட செய்திகளே!

ஆனால், இதே நியதியின் அடிப்படையில் இதே செய்தியை தினக்குரல் வார இதழ் கடந்த ஜனவரி 13 ஆம் திகதி ""அமெரிக்காவிற்கு தலையிடி கொடுக்கும் ஈரான் அதிபர் அகமட் நிஜாட்' என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரையில் இதே வார்த்தைகளில் கட்டுரையாளனால் முதன்முதலில் சொல்லப்பட்டிருந்ததை வாசகர்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றது. ""அமெரிக்க ஜனாதிபதி புஷ் தனது அந்திம காலத்தில் ஈரான் மீது ஓர் அதிரடித் தாக்குதலை நடத்துவதும் சாத்தியம்' என்று சொல்லப்பட்டிருந்தது.

இதே வார்த்தைகளைத்தான் நான்கு மாதங்கள் கடந்து டைம்ஸும் இஸ்ரேல் வானொலியும் சொல்லியிருக்கின்றன.

இந்தப் பின்னணியில் இத்தாக்குதலின் சாத்தியம் தொடர்பாகவும் அது நிகழக்கூடிய மார்க்கங்கள் தொடர்பாகவும் புதிய பல தகவல்களை நமது வார இதழ் மூலம் முதலில் நமது வாசகர்களுக்கு அறியக்கொடுப்பதற்காக இக்கட்டுரை முனைகின்றது.

சதாம் காலத்தில் இஸ்ரேலை முன்னிறுத்தி ஈராக் ஆயுதத்தளங்களை தாக்கிய பாணியில் இத்தாக்குதலை ஈரான் மீது தொடுப்பதற்கான சாத்தியங்கள் அமெரிக்காவிற்கு மிகக்குறைவு. எல்லையில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லாஹ், ஹமாஸ் குழுக்கள் ஏற்கனவே இஸ்ரேலுக்கு பெரும் சவாலாக வளர்ந்துள்ளன. அத்துடன், பிராந்தியத்தில் ஈரானிய ஆயுத வல்லமையும் இதற்கு இடம்கொடுக்காது.

தரைவழியாக ஈராக்கைப் பயன்படுத்தி அமெரிக்கா ஈரானிய இலக்குகளைத் தாக்குவதும் சாத்தியமில்லாத விடயம். அமெரிக்கப் படைகள் ஈராக்கில் நிலை கொண்டிருந்தாலும் ஈரானுக்குப் பலமான செல்வாக்கு ஈராக்கில் காணப்படுகின்றது. ஈரான் அதிபர் விஜயத்தின் போது அவருக்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பு இதனை உறுதி செய்கின்றது.

ஈராக்கிலுள்ள ஷீயாக்கள் ஈராக் மண்ணிலிருந்து ஈரானைத் தாக்குவதற்கு ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டார்கள். மத்திய கிழக்கில் ஈராக்கைத் தாக்கக்கிடைத்த அரசியல் பின்னணி ஈரான் விடயத்தில் இப்போது சாத்தியமில்லை. ஈரான் மீதான ஆகாய வழித் தாக்குதலுக்கும் மிகக்குறைந்த சாத்தியங்களே காணப்படுகின்றன.

அமெரிக்கா சார்பு மேற்கத்திய நாடுகளும்கூட இத்தாக்குதல் விடயத்தில் நேரடியாகப் பங்குகொள்வதைத் தவிர்த்துக் கொள்வதையே விரும்புகின்றது. ஏனெனில், ஈரானைத் தாக்கும் விடயத்தில் அமெரிக்கா தனது இலக்குகளை அடைந்தாலும், ஈரான் சார்பு ஆயுதக் குழுக்களின் பதில் தாக்குதல்கள் ஒட்டுமொத்த உலக செயல்பாடுகளையும் ஸ்தம்பிக்கக்கூடிய வல்லமை படைத்தவையாகும்.

தன்னைத் தாக்கினால் சர்வதேச ரீதியில் அமெரிக்க இலக்குகள் மீது கொடுக்கப்பட வேண்டிய பதிலடிகளையும் இலக்குகளையும் குழுக்களையும் ஈரான் ஏற்கனவே தயாரித்து வைத்திருகின்றது.

என்றாலும், புஷ் நிர்வாகத்திற்கு ஈரானைத் தாக்க வேண்டிய கட்டாயமும் இருக்கின்றது.

இத்தாக்குதல்களுக்கு புஷ் நிர்வாகம் கடல் மார்க்கங்களை உபயோகித்துக் கொள்வதற்கான வாய்ப்புகளே மிகவும் சாத்தியமாக அமைந்திருக்கின்றது.

அமெரிக்கா தனது கடற் படையின் வல்லமையையும் அதிலிருந்து செலுத்தக்கூடிய நவீன ஏவுகணைகளையும் இத்தாக்குதல்களில் உபயோகித்துக் கொள்ளமுனையும். மேலும், இவ்வதிரடித் தாக்குதல் கணப் பொழுதில் நிகழ்ந்து முடிவதற்குப் பதிலாக பல மணித்தியாலங்கள் நிகழக்கூடிய ஏவுகணைப் போராக இது அமையும்.

ஈரான் மீதான தனது தாக்குதல்களுக்குரிய திகதியை, காலத்தைத் தெரிவு செய்வதில் புஷ் நிர்வாகத்திற்கும் உளவுத்துறையினருக்குமிடையே இதுவரை இணக்கப்பாடு எட்டப்படாத நிலை காணப்படுகின்றது.

ஒரு பிரசாரத்திற்காவது ஈரான் மீது கல் எறிய வேண்டிய கட்டாயம் புஷ் நிர்வாகத்திற்கு ஏற்பட்டிருக்கின்றது. அது கௌரவப் பிரச்சினையும் கூட.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜோன் மெக்கய்னின் வெற்றி வாய்ப்புகள் சாத்தியமில்லாத நிலையில் ஈரான் மீதான தாக்குதல் உறுதிப்படுத்தப்படுகின்றது. அவர் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமானால் இத்தாக்குதலுக்கான அவசியம் பலவீனப்படுகின்றது. மெக்கய்னின் வெற்றி புஷ் நிர்வாகத்தின் தொடர் என்ற நியதி இது.

தாக்குதல்கள் தொடர்பாக ஈரான் அதிபரோ இப்படித் தனது கணிப்பீடுகளைத் தெரிவிக்கின்றார். ""தான் தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராக வேலை பார்த்து வந்திருக்கின்றேன். எனக்குத் தெரிந்த கணிதப்படி அமெரிக்கா ஈரானைத் தாக்குவதற்கான சாத்தியங்கள் கிடையாது. அப்படித்தான் நடந்தாலும் அது நெருப்புடன் விளையாடிய விளையாட்டு என்பதனை நாங்கள் அவர்களுக்கு கற்றுக்கொடுப்போம்' என அவர் அடித்துக் கூறுகின்றார்.

Email this page Your Opinion Print this page
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com