|
மானியூர் செந்தூரன்
கலா சாதனாலயா கலைக் கல்லூரியின் 7 ஆவது ஆண்டு நிறைவு விழா கலா அர்ப்பணம் 2008 நிகழ்ச்சிகள் நோர்வே ஒஸ்லோவில் சாண்ட்விகா தியேட்டரில் நடைபெற்றது.
ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் பெண்ணிய எழுத்தாளர், கவிதாயினி, நர்த்தனகலாமயூரம் கவிதா ரவிக்குமார் அவர்களால் ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி நமது கலாசார பண்பாட்டினை விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கும், பரதநாட்டியம் மற்றும் கலைகளை சொல்லித்தரும் விதமாக தொடங்கப்பட்டதே கலாசாதனாலயா கலைக் கல்லூரியாகும்.
புலம் பெயர்ந்த தமிழர்கள் உலகமெங்கும் பரந்து விரிந்து வாழும் இடமெங்கும் தமது கலை கலாசாரங்களை மேலை நாகரீகங்களில் வாழ்ந்தாலும், தம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அவ்வாறாக கவிதா ரவிக்குமாரின் நூற்றுக்கணக்கான குழந்தைகள் கலைகளைக் கற்று வருகின்றார்கள்.அந்தக் குழந்தைகள் தங்களின் திறமைகளை கலா அர்ப்பணம் மேடையிலே நிரூபித்துக் காட்டினார்கள்.
நிகழ்ச்சிக்கு பிரதம விருந்தினர்களாக நோர்வே கலை,கலாசார அமைச்சர் திரீன பெனடிக்ஷன் அவர்களும், நாட்டியக் கலைமணி சுமித்திரா சுகேந்திரா அவர்களும் வருகை தந்து சிறப்பித்தார்கள். வித்யாபூஷண தமிழினி சிவலிங்கம், வித்யாபூஷண துஷ்யா அமரசிங்கம், வித்யாபூஷண பாமினி ஜெயராஜன், வித்யாபூஷன் மேரி இளங்கீரன், நர்த்தன கலா மயூரம், கவிதா ரவிக்குமார் ஆகியோர் மங்கல விளக்கேற்றி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்கள்.
நிகழ்ச்சியை அழகிய தமிழ்நடையில் திருமதி தியாகேஸ்வரி நாதனும் நோர்வேஜிய மொழியில் செல்வி.ஜீவந்தி தவேந்திரனும் தொகுத்து வழங்கினார்கள். நாட்டியத்தின் சிறப்புகளை, மேன்மைகளை ஜீவந்தி அவர்கள் ? நார்வேஜிய மொழியில் தொகுக்கும் போது நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த அம்மக்கள் நமது கலை,கலாசாரத்தினை எவ்வளவு போற்றுகின்றார்கள் என்பதை கரவொலியின் மூலம் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.
வரவேற்புரையினை திருமதி யாழினி விஜேந்திரன் வழங்கினார்கள். தொடர்ந்து கணபதி ஸ்துதியுடனும், ஆடல் அரனுக்குரிய புஷ்பாஞ்சலியுடனும் கலா அர்ப்பணம் 2008 இன் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகியது. நடன நிகழ்ச்சிகளுக்குரிய பாடல்களை திரு ஹரிகரன் (இந்தியா) மிருதங்கம் வாத்திய விஷாரத் திரு.முருகன், வயலின் வித்துவான் வி.விநாயகமூர்த்தி, தபேலா உடுக்கு திரு.ஜெயராஜன், நட்டுவாங்கம் வித்யாபூஷண கவிதா ரவிக்குமாரும் வழங்கினார்கள்.
கண்ட நடையில் ஆரம்பித்த காளி கௌத்துவம் பாடலுக்கு மிருஷா நவரத்னராஜா, பானுஷா நவரத்னராஜா, விதுர்ஜா சிவஞானம், அனிதா நாகராஜா, நிருஜா கிருபாநிதி ஆகியோர் தங்கள் திறமைகளை காட்டி சபையோரின் ஏக கரகோஷத்தை பெற்றார்கள்.
ஆடும் பாதனின் தரிசனம் கிடைத்திட என்று நர்த்தனம் ஆடும் நடராஜனையே ஆட வைத்தார்கள்.சோபிகா சுதகர், பிரியங்கா சிவகுமார், டிசாந்தி தவேந்திரன், வர்ணா தங்கவேல், அமலின் ஜெயசீலராஜா, பானுகா நாகராஜா ஆகியோருடன் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் என்ற பதத்திற்கு சந்தியா குகேந்திரன், சங்கீதா விஜயேந்திரன், பிரகாஜினி நாகராஜா அபிநயா ஜெயசீலராஜா, கவிதா கன்னலிங்கம் ஆகியோரும் ஆடியபோது அரங்கமே அதிர்ந்தது கரவோசையினால்.தொடர்ந்து திருப்புகழ் மற்றும் கந்தசஷ்டி பாடல்களுக்கு நடனமாடி அழகன் முருகனை உச்சி குளிர்வித்தார்கள்.
கலா சாதனாலயாவின் ஆரம்ப நிலை மாணவிகள் ஆயர்பாடி மாளிகையில் என்று கண்ணனையும் கோபியையும் குழலூத வைத்து,வெண்ணை தின்ன வைத்து, தாலாட்ட வைத்த போது அக் குழந்தைகளின் பெற்றோர்கள் பரவசநிலைக்கு சென்றிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
தொடர்ந்து காணிநிலம் வேண்டும் என்ற மகாகவி பாரதியின் பாடலுக்கு ஆடியபோது அம் மாணவிகள் தங்கள் சொந்த மண்ணை, வீட்டை, உற்றார் ,உறவினர்களை இழந்து வந்ததை நினைத்து, ஏங்கி ஆடியதைப் போல் இருந்தது. சபையோர்கள் மத்தியில் ஒருவித நிசப்தம். அம்மாணவிகளுக்கும், பாடலுக்கு நடனம் அமைத்த கவிதாவுக்கு ஒரு சபாஷ்.தொடர்ந்து அமிர்தவர்ஷினி ராகத்தில் அமைந்த தில்லானாவுடன் நிகழ்ச்சியில் முதல் அரங்கம் நிறைவடைந்து,அழகிய நடனங்களுடன் பங்கரா, விசிறி நடனங்களோடு இரண்டாவது அரங்கம் தொடங்கியது.
திரு.இரவிக்குமாரின் இசையமைப்பில் உருவான பிரம்மம் ஒன்றுதான் என்ற பாடல் இசையாலும் நடனத்தாலும் சபையோர்களைக் கட்டிப் போட்டது என்றே சொல்ல வேண்டும். கவிதா அவர்களின் குரு கார்மேகம் நந்தா எழுதி இரவிக்குமார் இசையமைத்த நள்ளிரவில் கதிர் உலவு நாட்டினிலே என்ற பாடலுக்கும், இசையமைப்பாளர் தினாவின் இசையில் வெளிவந்த ஆசைமுகம் மறந்து போச்சே என்ற பாரதியாரின் பாடலுக்கும் ஆடிய நடனங்கள் சிறப்பு.
கலா சாதனாலயா மாணவர்கள் பங்கேற்ற ஊர்த்திருவிழா எனும் நிகழ்ச்சியில் ஈழத்துக் கோயில்களிலே நடைபெறுகின்ற பொய்க்கால் குதிரை, தப்பாட்டம், கரகாட்டம், காவடி, புலியாட்டம், குரங்காட்டி, பாம்பாட்டி வித்தைகள் என்று பல வகைத்தரப்பட்ட கிராமிய நடனங்களை செய்து காட்டியதன் மூலம் நோர்வே போன்ற மேலை நாடுகளிலும் எம் கிராமங்களை மறக்காமல் எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.
கவிதா ரவிக்குமார் அவர்கள் நடனத்துறையில் மட்டுமல்லாது பெண்ணியத்திற்கான எழுத்துலகத்திலும் தன்னை நிலை நிறுத்தியுள்ளமை அனைவரும் அறிந்ததே. அவ்வகையில் தன்னுடைய மாணவ,மாணவிகளையும் ஒரு துறையில் மட்டும் இல்லாமல் பல்வேறு துறைகளிலும் ஈடுபடுத்தி ஊக்கப்படுத்துவது. நம்மால் வாழ்த்தி வரவேற்கப்பட வேண்டிய விஷயமாகும். மாணவிகளால் நோர்வேஜிய மொழியில் எழுதப்பட்ட அதாவது கவிதையின் அசைவு நாட்டியம் என்று நாட்டிய சாஸ்திரம் கூறுவதை நூலின் தலைப்பாக வைத்து எழுதியிருக்கிறார்கள். இந் நூலானாது பரதநாட்டியத்தின் அறிமுறைகளை தமிழ் மொழியில் இருந்து நோர்வேஜிய மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டவை. இந்தியாவில் நூல் அச்சிடப்பட்டிருந்தாலும் அதனுடைய தரத்தினை பார்க்கும் போது அது தமிழர்களுக்கானது அல்ல என்பதும் தெரிகிறது.
இந் நூலினை நோர்வேயின் கலை,கலாசார அமைச்சர் திரீனபெனடிக்ஷன் அம்மையார் வெளியிட வித்யாபூஷண செல்வி.மதிழினி சிவலிங்கம் பெற்றுக்கொண்டார்.
வெளியிட்டீனைத் தொடர்ந்து கலாசாதனாலயா கலைக்கல்லூரியின் இயக்குனர் கவிதா ரவிக்குமார் நூலினைப் பற்றிப் பேசும் பொழுது
இது எனது கலாசாதனாலயாவின் மற்றொரு படைப்பாகும். இந்த புத்தகத்திலே மொழிபெயர்க்கப்பட்டவையும், எழுதியிருப்பவையும் எமது கலைக்கூட மேற்பிரிவு மாணவர்களாலேயே எழுதப்பட்டவையும் என்பது பெருமைக்குரிய விடயமாகவே கருதுகிறேன்.நாம் இரு மொழிச் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எமது தமிழ்ச் சிறார்கள் பொதுவாக பெண்பிள்ளைகள் பெரும்பாலோனோர் பரதநாட்டியம் பயில்வது மேலும் மேலும் பெருகிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் தமிழிலே இருக்கும் அறிமுறைகளை நோர்வேஜிய மொழியில் கொணருவதால் மாணவர்களுக்கு பெரும் உதவியாக மட்டுமில்லாமல் தற்போது நோர்வேஜிய மாணவர்களும் இந் நாட்டில் இருக்கும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் பரதம் கற்றுக் கொள்வதால் இந்த புத்தகத்தின் அவசியம் மிகையாகிறது.எம்மாலும் முடியும் என்ற மனத்திடத்தை மாணவர்களுக்கு அளிப்பதும் ஒரு ஆசிரியராக என்னுடைய கடமையாகவே கருதுகிறேன் என்றும் இப் புத்தகம் வெளிவர காரணமாகவிருந்த ஏனையோரையும் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
கலா அர்ப்பணம் 2008 இன் இறுதி அங்கமாக, நிருத்திய நாடகம் சுந்தர காண்டமும் சீதா பகர்ணமும் என்ற நாட்டிய நாடகம் நடைபெற்றது. புராண இதிகாசமாக இருந்தாலும் இங்கு கவிதா ரவிக்குமார் ஆணாதிக்கத்திற்கு எதிரான அமைவாக பாரதியின் கண்ணம்மாவை துணையாகக் கொண்டு நடனங்களை அமைத்திருந்தமை அனைவரையும் சற்று யோசிக்கவே வைத்தது.இராமனாக சந்தியா குகேந்திரன், சீதாவாக சங்கீதா விஜேந்திரன் இராவணனாக மிருஷா நவரட்ணராஜா, லட்சுமணனாக கவிதா கண்ணலிங்கம், கண்ணம்மாவாக பிரகாஜினி நாகராஜா, அபிநயா ஜெயசீலராஜா, அனுமனாக பானுகா நாகராஜா ஆகியோர் ஆடியிருந்தார்கள். பாடல்களை கவிதா அவர்கள் எழுத இசையினை இரவிக்குமார் வேலாயுதம் செய்திருந்தார்.பாடல்கள் அனைத்தும் மாணவர்களாலேயே பாடப்பட்டு பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சீதாவைத் தேடி அனுமன் புறப்படுவதில் இருந்து நாடகம் தொடங்குகிறது.இலங்கையில் அரக்கர் கூட்டத்துடன் அனுமன் போராடுதலும்,இலங்கையைத் தீக்கிரையாக்கி இராமனிடம் கண்டேன் சீதையை என்று சேதி சொல்லுதலும்,பின் இலங்கையை அடைய வானரங்களின் உதவியுடன் கடல்மேல் பாலமைத்தலும் நம் கண்முன்னே மிகவும் தத்துரூபமாக காட்சியாக்கப்பட்து.வானரங்களும், அரக்கர்களுக்குமான மோதல்களும் பின் இராவணனை அழித்து சீதாவை மீட்கப்பட்டதையும் ஆடப்பட்டது.சபையோர் அடுத்ததாக என்ன என்று எதிர்பார்க்கும் வேளையில் தான் காட்சியை மாற்றி அமைத்திருக்கிறார் கவிதா இரவிக்குமார்.
மக்களில் ஒருவன் கேட்டுவிட்டான் என்பதற்காக இராமன் சீதையை சந்தேகத்தில் தகுமா என்பது குறித்து மக்களில் இருந்து பாரதி கண்ணம்மா போராடுகின்றாள்.இறுதியில் ராமனின் ஐயத்தைத் தீர்க்க மீண்டு வரும் சீதா ராமனிடம் தன் மனநிலை விளக்கியிருந்தால் என்ற கற்பனையும் பின்னப்பட்டு முடிவுவடைந்தது தீக்குளித்தல் பற்றிய மறுபார்வை.
சபையோர்கள் மத்தியிலே பலத்த கரகோஷத்தினை இந்த நாட்டிய நாடகம் பெற்றிருந்தாலும் சில பழமைவாதிகள் தங்கள் அதிருப்தியை இக் கருத்தின் மீது காட்டியிருப்பார்களோ என்ற ஐயத்தை தீர்க்கும் வகையில் கவிதா அவர்கள் விளக்கம் கொடுத்தார்.ஆண்களினால் எழுதப்பட்ட புராண இதிகாசங்கள் அந்த காலத்து சமூகத்திற்கு எழுதப்பட்டிருந்தாலும் நாம் இந்த சூழ்நிலையிலும் நம் குழந்தைகளுக்கு அவைகளைக் கற்பித்துக் கொண்டிருக்கிறோம். அதனால் அது தொடர்பான மறு பார்வையையும் நாம் எடுத்துச் சொல்ல வேண்டிய தேவையும் இதுபோன்ற இதிகாசங்களைக் கேள்விக்கு உட்படுத்தப்படவேண்டிய கட்டாயமும் எமக்கு இருக்கின்றது என்றார்.
இறுதியாக போராலும், இயற்கையாலும் இறந்த உலக மக்களுக்காக இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலியுடன் நோர்வே கலாசாதனாலயா கலைக்கல்லூரியின் கலா அர்ப்பணம் 2008 இனிதே நிறைவடைந்தது. |