Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, June 08, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
 
 
சிறுவர் மீதான வன்முறைகளை ஒழிப்போம்
எம்.சாந்தி

உலகம் முழுவதும் பெண்களுக்கு அடுத்தபடியாக சிறுவர்களே பாதிக்கப்படுகின்றார்கள்.இதில் ஆசிய நாடுகளை பொறுத்தமட்டில் மிகவும் இளம் வயதிலேயே சிறுவர்கள் வேலை செய்ய ஆரம்பிக்கிறார்கள். ஆறு அல்லது ஏழு வயதில் குடும்பத்தில் அன்றாட வேலைகளையும் பொருட்களைக் காவிச் செல்லுதலையும் வயல்களில் தமது பெற்றோருக்கு உதவியளிப்பதையும் மேற்கொண்டு வீட்டில் உள்ளவர்களுக்கும் உதவுகிறார்கள்.

குடும்பத்தில் உள்ள வயது வந்தவர்களினால் இச் செயற்பாடுகள் அடிக்கடி ஊக்கமளிக்கப்படுகின்றன. ஏனெனில் இத்தகைய செயற்பாடுகள் சிறுவரின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அனுகூலமாக விளங்குவதாக அனுமானிக்கப்படுகின்றது.சிறுவர்கள் பொறுப்பு உணர்ச்சியைக் கற்றுக் கொள்வதுடன் குடும்பமொன்று உயிர்வாழ்வதற்கு உதவுகின்ற பணிகளை மேற்கொள்வதில் பெருமையும் அடைகின்றனர்.இருப்பினும் நாம் இந்த வேளையில் குழந்தைகள் மீது திணிக்கப்படும் அழுத்தங்களையே இக் கட்டுரையின் மூலம் வெளிக் கொண்டு வர விரும்புகின்றோம்.

பொதுவாக நல்ல சூழலில், நல்ல குடும்ப பின்னணியில் பிறந்து வளரும் குழந்தை அங்கு நல்ல முறையில் வளர்க்கப்படுகின்றான்/ள்.அக் குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய பெற்றோர்கள் இருக்கும் பட்சத்திலும் அக் குழந்தையின் வேலைகளை கவனிப்பதற்கு அமர்த்தப்பட்டு இருப்பது ஒரு சிறுவனையோ,சிறுமியையோ தான். இவர்கள் பெரும்பாலும் 14 வயதிற்குட்பட்டவர்களாகவே இருப்பர். பணக்கார வீட்டு பிள்ளைகளின் பாடசாலை பையை சுமந்து செல்லவும்,பாதணிகளை அணிவித்து விடவும் என தனது பிள்ளைகளின் வேலைகளை கவனிக்க வைக்கும் பெரியோர்கள் வறுமையின் நிமித்தம் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கும் அப்பிள்ளையின் தேவையை கவனிக்காது இருப்பது கவலைக்குரிய விடயம். இன்று சிறு வயதிலேயே வேலைக்கு அமர்த்தப்படுவதற்கான காரணங்கள் பற்றியும், பாடசாலைக்கு செல்லாமைக்கான காரணங்கள் எதுவெனப் பார்த்தால்..சிறுவர் உடலுழைப்பின் முக்கியமான காரணிகளில் ஒன்று வறுமை, அடுத்தது பெருமளவு அரசாங்கங்கள் பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு முகம் கொடுக்கும் போது ஏழைகளினால் தாங்கிக் கொள்ள முடியதா பெருங்கஷ்டங்களை ஒழிப்பதற்கு உதவக்கூடிய துறைகளுக்கு அதாவது,சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, வீடமைப்பு, ஆரோக்கியம், வருமானம் தோற்றுவிக்கும் திட்டங்கள், பயில் திறன் பயிற்சி போன்றவற்றுக்கு முன்னுரிமை?யை வழங்குவதில்லை.ஆகையால் ஏழைகளின் உயிர் வாழ்வுக்கான நாளாந்தப் போராட்டமாக வாழ்க்கை விளங்குகின்றது.ஆகவே ஒன்றில் பெற்றோர்கள் வேலை செய்வதற்காக வீட்டில் உதவுவதன் மூலம் அல்லது குடும்பத்திற்கு பணத்தைச் சம்பாதிப்பதற்காக தாமாகவே வேலைக்கு செல்வதன் மூலம் குடும்பப் பொறுப்புகளை சிறுவர்கள் பொறுப்பேற்கப்படுவதற்கு நிர்பந்திக்கப்படுகின்றனர்.

பெற்றோரின் வேலையில் பங்கெடுத்தல், குடும்பத்திற்கு வெளியே சம்பாதித்தல் (பெற்றோர்களுடன் சேர்ந்து கூலி வேலை செய்தல்),நகைக் கடைகளிலும் ஹோட்டல்களிலும் வேலை செய்தல் அல்லது வீட்டை நிர்வகிப்பதில் உதவுதல் ஆகியவற்றின் மூலம் குடும்பப் பொறுப்புகளை சிறுவர்கள் பங்கிட வேண்டும் என பெருமளவு சமூகங்களில் உள்ள நம்பிக்கையும் சிறுவர் உடலுழைப்புக்கான இன்னொரு காரணியாகும்.

சிறுவர் உடலுழைப்பை விளைவிப்பதில் சிறுவர் ஊழியர்களுக்கான கிராக்கியும் அங்கமொன்றை வகிக்கின்றது.

வறுமையானது வேலை செய்வதற்கு சிறுவர்களை நிர்ப்பந்திப்பதுடன் இவ் வறுமையை தொழில் கொடுப்போர் அனுகூலமாக எடுக்கின்றனர்.சிறுவர்களைத் தொழிற்படுத்துவதன் மூலம் தமது உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இயலாதவர்களையும் வயது வந்தவர்களை விட மிகவும் குறைவான ஊதியத்திற்கு மிகவும் இழிவான தொழில்களைக் கூட செய்வதற்கு தயாராக இருப்பவர்களாகவும் பணிவான,ஒத்துப் போகின்ற கீழ்ப்படிகின்ற தொல்லைகளை ஏற்படுத்தாத ஊழியர்கள் சிறுவர்கள் தான் என உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன.

பெரும்பாலும் மலையகத்தைச் சேர்ந்த சிறுவர்கலே நகர்புற கடைகளிலும், ஹோட்டல்களில் வேலை செய்வதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.பாடசாலைக்கு

சென்று கற்று வரவேண்டிய இவ் இளம் தலைமுறையினர் ஹோட்டல்களில் எச்சில் தட்டை எடுப்பதிலும், வியாபார ஸ்தலத்திற்கு ஆட்களை சேர்க்கும் நோக்கில் கடையோரங்களில் நின்று வாடிக்கையாளர்களை அழைப்பதிலும் செலவழிக்கிறார்கள்.

இது மாத்திரமன்றி, சில தனியார் பேரூந்துகளிலும் நடத்துநர்களாக 1416 வயது ஆண் பிள்ளைகளை காணக்கூடியதாக இருக்கிறது.

பெரும்பாலும் சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுவதற்கு குடும்ப வறுமை ஒருபுறம் அடுத்து பெற்றோரின் பிரிவு காரணமாக குடும்பம் எதிர்நோக்கும் சவால்களுக்கு முகங்கொடுக்கும் முகமாகவும், தாய் மத்திய கிழக்கு நாட்டிற்கு பணிபுரிய செல்லும் வேளையில் பிள்ளையின் அடிப்படை தேவைகளை கூட கவனிக்க முடியாமையினால் பிள்ளையின் வாழ்க்கை முறை அங்கு மாற்றப்படுகிறமை போன்றவற்றை கூறலாம்.

சிறுவர் உடலுழைப்பை ஒழிப்பதில் அதன் பாகத்தினை கல்வியானது ஆற்றுவதற்கு கல்வி முறைமைகளில் உள்ள பிரச்சினைகள் கவனத்திற்கு எடுக்கப்படுவது அவசியமானதாகும்.சம்பந்தமானதும், அடையத்தக்கதும்,இலவசமானதுமான தரமான கல்வியை வழங்குமுகமாக, கொள்கைகளையும்,செயற்திட்டங்களையும் விருத்தி செய்வதற்கு நாடுகள் பாரிய முயற்சியை எடுக்க வேண்டும் கல்விசார் முறைமைகளில் இந்தத் தலையீடுகள் வறுமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளினால் இணைந்திருக்க வேண்டும்.குடும்பத்தின் உயிர் வாழ்வுக்கான தேவைகளைப் பொறுப்பு எடுப்பதன் மூலமும், வேலைக்கு தமது பிள்ளைகளை அனுப்புவதற்கு மாற்றீடுகளை பெற்றோர்க்கு வழங்குவதன் மூலமும் மட்டுமே சிறுரவர்கள் அடிப்படைக் கல்வியைப் பெறுவதை எம்மால் உறுதிப்படுத்த முடியுமா?

ஆனால் இளமையில் கல்வி என்பது மிக முக்கியமான ஒன்று சிறுவர் உடலுழைப்பைத் தடுப்பதில் எவ்வாறு கல்வி ஒரு சக்திமிக்க கருவியாக விளங்க முடியும் என்பதற்கு நல்ல உதாரணமாக இந்தியாவின் மாநிலமான கேரளா விளங்குகின்றது.

பாடசாலை முறைமையை விஸ்தரித்து, மேம்படுத்துவதன் மூலமும், சகலருக்கும் கல்வியை கிட்டச் செய்வதன் மூலமும் சிறுவர் உடலுழைப்பை, குறிப்பாக அதன் துஷ்பிரயோகத்திலான அமைப்புகளை கேரளா குறிப்பிடத்தக்க அளவுக்கு ஒழித்துள்ளது.

இதேபோல் எமது நாட்டிலும், வறுமையின் நிமித்தம் பாடசாலை வர முடியாத மாணவர்களுக்காக அரச பாடசாலைகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பணிஸ்பால் பாடசாலை உணவு இடைவேளையின் போது வழங்கப்பட்டது.பின்னர் வறுமை நிமித்தம் பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்ப முடியாத நிலையில் இருந்த குடும்பத்தினர்களின் போக்கை மாற்றும் முகமாக பாடசாலைககு மாணவர்கள் வரும் தின அடிப்படையில் புள்ளிகள் இடப்பட்டு மாத இறுதியில் அந்த கூப்பன் கார்ட் வழங்கப்பட்டது.இதில் கூட்டுறவுக் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்கக் கூடியதாக இருந்தது.

இதன் மூலம் குடும்பத்தின் சுமை ஓரளவு குறையப்பட்டது. அதாவது ஒரு குடும்பத்தில் பாடசாலைக்கு செல்லும் வயதில் நான்கு பிள்ளைகள் இருக்கும் வேலையில் குடும்ப வறுமை காரணமாக ஒரு பிள்ளையை கூட பாடசாலைக்கு அனுப்ப முடியாமல் இருந்த பெற்றோர் தமது நான்கு பிள்ளைகளையும் பாடசாலைக்கு அனுப்ப ஆரம்பித்தனர்.அதன் பின்பு பாட சாலை சீருடைகளை வழங்கினார்கள். இவ்வாறான உதவிகளின் மூலம் பாடசாலைக்கு பிள்ளைகளை தவறாது சமுகமளிக்கவும்,வறுமையின் பிடியில் சிக்குண்ட குடும்பங்களிற்கு கூட பிள்ளைகள் பாடசாலைக்கு வந்து படிக்கக்கூடிய விதத்தில் எமது நாட்டிலும் பல சலுகைகள் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இவற்றையும் தாண்டி இன்னும் பல சிறுவர்கள் பாடசாலைச் செல்லாது தொழில் பார்க்கின்றனர்.இவர்களுக்கு குடும்ப வறுமை மாத்திரமே கண்முன் நின்று செயல்படுகின்றன.ஆனால் இவர்களை தொழிலுக்கு அமர்த்தும் நிறுவனமோ அல்லது வீட்டு உரிமையாளர்களோ தண்டிக்கப்படுவர் எனவே தான் எமது நாட்டடடில் சிறுவர் பாதுகாப்பு அமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

கட்டாயத்தின் (அடிமைத் தனத்தில்) பேரில் சிறுவர்களை வேலைக்கமர்த்துவது சட்டப்படி குற்றம்.அத்துடன் 14 வயதிற்குட்பட்ட எந்த சிறார்களையும் வேலைக்கு அமர்த்த முடியாது.இதற்காக விசேட புலனாய்வுப் பிரிவினரால் நாடு பூராகவும் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரணை செய்தல், சந்தேக நபர்களை கைது செய்தல், நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பாதிக்கப்பட்ட சிறுவர்களைப் பாதுகாக்கவும், பொறுப்பேற்கவுமான சகல நீதிமன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கான முயற்சிகளை செய்திருக்கிறது.

பொலிஸ் தலைமையகத்தில் இணைக்கப்பட்டுள்ள சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத்தினைத் தடுக்கும் பிரிவானது பொலிஸ் மா அதிபரின் சுற்று நிரூப இலக்கம் 119/93 மற்றும் குற்றத் தடுப்பு சுற்று நிரூப இலக்கம் 34/93 இன் படி 1993.11.10 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது இலங்கையில் 36 பொலிஸ் பிரிவுகளையும், பிரதேச மட்டத்தில் சகல பொலிஸ் நிலையங்களையும் இணைக்கும் வண்ணம் பெண்கள் அமைப்பொன்றை அமைப்பதன் மூலமாகவும் எதிர்காலத்தினைப் பொறுப்பேற்கவுள்ள சிறார்களைப் பாதுகாக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

36 பொலிஸ் பிரிவுகளும் உள்ளடங்கும் வண்ணம் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம், தலைமையகப் பொறுப்பதிகாரியாக பெண் உபபொலிஸ் பரீட்சகர் அல்லது அதற்கு மேற்பட்ட பதவியையுடைய பெண் பொறுப்பதிகாரி கடமையாற்றுவார்.அத்துடன் இந்தப் பிரிவில் சிறுவர் தொடர்பான விசேட நிபுணத்துவம் வாய்ந்த பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்குத் தேவையான கீழ்க்கட்டுமான வசதிகளும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்தப் பணியகத்தின் மூலம் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களைப் பற்றிய விசாரணைகள் பிரதேச ரீதியாக மேற்கொள்ளப்படுவதுடன், பாடசாலை மாணவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாவதில் இருந்து பாதுகாத்தலினைப் பற்றி பிரதேசவாசிகளையும்,முதியோர்களையும், அரச உத்தியோகத்தர்கள் உட்பட சமூகத்தினையும் விளிப்பூட்டும் அதேவேளை சிறுவர் பெண்கள் மீதான குற்றங்களைப் பற்றி கணினி மயப்படுத்திய தகவல்களை தலைமையகத்திற்கு அனுப்பும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகின்றது. சிறுவர் பெண்கள் தடுப்புப் பிரிவானது கொழும்பில் தலைமையகத்தைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தாலும் பல விசேட பிரிவுகளையும் கொண்டு இயங்குகின்றது.அதாவது,விசேட புலனாய்வுப் பிரவு,சிறு முறைப்பாடுகள் பிரிவு,நிர்வாகப் பிரிவு, புள்ளிவிபரவியல் பிரிவு மற்றும் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு என்பனவாகும்.

சிறுவர் உடலுழைப்பை ஒரு சிக்கலான பிரச்சினை என்பதுடன் பெருமளவு வேறுபட்ட மட்டங்கள் மீது கவனத்திற்கெடுக்கப்படுவது அவசியமாகும்.அவசர விடயமொன்றாக, பிரச்சினையை இலகுப்படுத்துவதிலும்,ஒழிப்பதிலும் அரசாங்கங்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.வறுமைப்பட்ட குடும்பங்களினால் முகங்கொடுக்கப்படும் சூழ்நிலையைத் திருத்தியமைப்பதற்கு அவை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.ஆனால் இப் போராட்டத்தில் அரசாங்கங்கள் மட்டும் செயற்பாட்டாளர்களாக செயல்பட முடியாது.போதிய மாற்று வழிகளை அவர்களுக்கு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதற்காக முழுச் சமூகமும் ஒன்று திரட்டப்பட வேண்டும்.சிறுவர் உடலுழைப்பை ஒழிப்பதற்கான முயற்சியில் முக்கியமான பங்கினை கல்வி ஆற்றுகின்றமை உண்மை.

Email this page Your Opinion Print this page
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com