|
விதுரன்
தெற்கில் இடம்பெறும் சம்பவங்களால் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. எவ்வளவுதான் பாதுகாப்பை அதிகரித்தாலும் தாக்குதல்கள் மிகச் சர்வசாதாரணமாக நடைபெறுவதால் அரசும் படைத்தரப்பும் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளன. முன்னர் வடக்கு கிழக்கில் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் எப்போதாவது ஒரு முறை தெற்கில் பதில் தாக்குதல் நடைபெறும். தற்போது நிலைமை தலைகீழாகிவிட்டது. அங்கு ஒரு தாக்குதல் நடைபெற்றால் அதற்கான பதில் தாக்குதல் அடுத்த நாளே இங்கு நடைபெறுகிறது.
தெற்கில் படையினரின் எண்ணிக்கையை மேலும் மேலும் அதிகரித்து பாதுகாப்பை பலப்படுத்தினாலும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த முடியாதுள்ளது. அரசுத் தலைவர்கள், படை அதிகாரிகள் மீதான தாக்குதலென்றால் அது கொழும்பு நகரினுள் நடைபெறும் தாக்குதலாயிருக்கும். ஆனால் இது பொது மக்களை இலக்கு வைக்கும் தாக்குதலென்பதால் நாட்டின் எந்தப் பகுதியில் எந்நேரம் குண்டுகள் வெடிக்குமெனத் தெரியாதுள்ளது. இந்தக் குண்டு வெடிப்புகளால் அரசுக்கு எல்லா வழிகளிலும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.
தற்போதைய நிலையில், எதிர்க்கட்சிகள் எல்லாவற்றையும் பிளவுபடுத்தி பிளவுற்ற அணிகளை அரசு தன்னுடன் சேர்த்து வைத்திருப்பதால் எதிர்க்கட்சிகள் பலமிழந்து செயலிழந்துள்ளன. அவர்களால் இந்த அரசுக்கெதிராக வீதிகளில் இறங்கி மக்களை பெருமளவில் சேர்த்து அரசுக்கு நெருக்கடி கொடுக்க முடியாத நிலையேற்பட்டுள்ளது. அரசியலிலும் யுத்தத்திலும் இவ்வாறு தந்திரமாகக் காய்களை நகர்த்திச் செயற்பட்டு அனைத்து எதிர்த்தரப்பையும் பலவீனப்படுத்தி விட்டு எவ்வித எதிர்ப்புமின்றி ஆட்சியைக் கொண்டு செல்ல அரசு முற்படுகிறது. எனினும் இவ்வாறானதொரு நிலைமை குறுகியகால இலாபங்களை ஏற்படுத்தலாம். நீண்டகாலச் செயற்பாட்டை இது பெரிதும் பாதிக்குமென்பதால் இந்த அரசு எத்தனை காலத்திற்கு இவ்வாறானதொரு ஆட்சியை கொண்டு செல்லப் போகிறது? |