-ச.ந.கனகசேகரம்-
சைவமும் தமிழும் நெறியோடு தழைத்தோங்க அவ்வக்காலங்களில் தோன்றும் அவதார நாயகர்களில் சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அன்னையாரும் ஒருவர் எனலாம். 1925 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் நாள் அப்பாக்குட்டி தம்பதிகளின் இல்லறமும் நல்லறமும் பெருமைபெறப் பெண்மகவாக அவதரித்தார். அம்பாள் அருளோடு பிறந்த தங்கநிறத்து மகளுக்கு தங்கம்மா என்று நாமம் சூட்டினர்.
கல்வியில் ஆர்வமுடைய அன்னையைச் சிவத்தொண்டும் தமிழ்ப்பற்றும் மிளிர அவரின் ஆன்மீகத்தொண்டுக்கு உறுதுணையாக அமைந்தது. 31 வருட ஆசிரிய சேவையில் அவரின் அபூர்வ சக்தியின் செயற்பாட்டை உணரலாம். அவரின் சேவைக்கு வழங்கப்பட்ட பட்டங்கள் அவரின் சேவையால் பெருமைபெற்று உயர்ந்தது. 1952 இல் பண்டிதையும் 1958 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சைவப்புலவர் பட்டத்தையும் பெற்றார். சிவத்தமிழ்ச் செல்வி துர்க்கா துரந்தரி அவரின் நாமத்தோடு அணி சேர்த்த பட்டங்கள். 1989 இல் சமாதான நீதிபதியானார். யாழ்.பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட கலாநிதிப் பட்டம் அவரின் தொண்டிற்குச் சான்று. 1991 இல் கலாசார அமைச்சு "கலாசூரி' என்ற பட்டம் அளித்தது. பட்டங்கள் அவரால் சிறப்புற்றது.
"சொற்பொழிவு' அவரின் அழியாத சொத்து. கல்லூரியில் அவர் கற்றது கடுகு அளவு. வெளியில் சொற்பொழிவுகளிலும் தொண்டு ஈடுபாட்டிலும் கற்றது கடலளவு. ஆறு அறிவோடு ஆன்மீக அறிவை எமக்கு புகட்டியவர் அன்னையார். ஆசிரியராக வாழ்ந்து வழிகாட்டினார். ஒரு தொண்டராகக் குருவாக என் கடன் பணி செய்வதே என்று வாழ்ந்து காட்டினார்.
உள்ளத்தே எழுந்த உயரிய கருத்துக்களை உருப்பட உரைத்து செயற்படுத்துவார். அறியாதாரையும் அறிந்துணர வைக்கும் ஆழமான கருத்துக்கள் நிறைந்த ஆத்மீக உரைகள் கேட்டவர் உள்ளங்களில் அசையாத சொத்து ஆக அமையும். எழுதும் பொழுது மட்டுமன்றி அவர் பேசும் பொழுதும் இலக்கணமும் சொற்சுவை ததும்பும் உச்சரிப்பும் இணைந்து பொலிந்து விளங்கும் இலங்கையில் மட்டுமல்ல உலகில் எந்நாட்டில் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் அன்னையாரின் ஆத்மீக அறிவுரைச் சொற்பொழிவுகள் நிகழ்ந்தன. அவரின் ஆத்மீகப் பயணங்களில் கிடைத்த நன்கொடை நிதியெல்லாம் கதியற்றோர், நிதியற்றோர், முதியவர், ஆதரவற்ற அனாதைச் சிறுவர், மகளிர் இல்லம் போன்ற நல்வாழ்வு நிலையங்கள் போன்ற அறப்பணிகளுக்கு ஈடுசெய்யப்பட்டது.
திருப்பணிச்சபை அமைத்து ஆலயத்தில் புனருத்தாரண வேலைகளை நிறைவேற்றி கோபுரம், மடங்கள், அன்னபூரணி மண்டபம், மகளிர் காப்பகம் (புஷ்பகரணி) தீர்த்தக்குளம் ஆகியவற்றையும் அமைத்தார். இளம் சந்ததியரின் நலம் கருதி ஆலயத்தின் அறப்பணி தொடர வங்கியில் காலப்பெட்டகங்கள் வைப்பிலிட்டுள்ளார். இதனால் பலசந்ததியரின் வாழ்விற்கு நிதி நிலைக்கும். ஆலயப்பரிபாலன சபையின் தலைவராகப் பணிபுரிந்தாலும் ஒரு நிர்வாகியாக அல்லாது ஒரு தொண்டராவே செயல் புரிந்தார்.
இளம் சந்ததியினரை தொண்டில் ஈடுபடச் செய்து இளைஞர் மன்றம் மகளிர் மன்றம் ஆகியவை மூலம் தொண்டின் பெருமையைச் சிறப்புற வைத்தார்.
அவரின் ஆளுமை ஆத்மீகசக்தியால் வெற்றியுடன் திகழ்ந்தது. ஆலயத்தின் சொத்துக்களைத் தன் உயிரிலும் மேலாகக் காத்து வந்தார். அடியாரைச் சோதிப்பது ஆண்டவனுக்கு ஒரு விளையாட்டு என்பதற்கு ஒரு சம்பவம் நடைபெற்றது. ஆலயத்தில் சொத்துக்களை அபகரிக்க ஒரு குழுவினர் முற்றுகையிட்டு ஆலயக்குருமார் தொண்டர்களை பணயம் வைத்தனர். ஒரு வஞ்சகன் அம்மாவின் நெஞ்சில் துப்பாக்கியை வைத்து மிரட்டினான். அஞ்சா நெஞ்சம் கொண்ட அம்மா தயவாக துணிவோடு, "தம்பி அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என் ஆத்மா பிரிவது இந்த ஆலயத்தில் நிகழ்வதை நான் விரும்புகிறேன்' என்றார். வஞ்சகனின் நெஞ்சம் இளகியது. கிடைத்த நகைபொருட்களோடு தலைமறைவாகிவிட்டனர். அம்பாளிடம் அம்மா கதறியழுது மன்றாடினார். அதிர்ச்சியால் அவரின் நோயும் கூடியது. என்ன அதிசயம் வேண்டுவோர் வேண்டுவதை ஈயும் இறைவன் அம்மாவின் வேண்டுதலை நிறைவேற்றினார். சில நாட்களின் பின் ஆலயவீதியில் அம்பாளின் நகை எல்லாம் குறைவின்றி மீட்டெடுத்தனர்.
கருணை உள்ளம் கொண்ட நிதியாளர்களை (பார்வையாளராகவன்றி) ஆலயத்திருப்பணிகளில் பங்குபெறச் செய்து அவர்களின் அனுசரணையுடன் பல பெறுமதி வாய்ந்த திருப்பணிகளை நிறைவேற்றினார். வசதி படைத்தவர் வழங்கிய நிதி வசதியற்றவரை வாழ வைத்தது. எமது ஆத்மீகத்தாயின் தொண்டின் பெருமை.
மரம் செடிகளுக்கிடையில் குடிசையில் வீற்றிருந்த அம்பாளுக்கு விசாலமான வீதிகள் சூழ ஆதிமூலம், வசந்த மண்டபம், களஞ்சியம், மடைப்பள்ளி, கொடிமரத்தோடு வானளாவ உயர்ந்த கோபுரம், தேர், சப்பறம் எல்லாம் திருப்பணி மூலம் அமைத்தார். சில்வண்டு ஒலியுடன் குடிசையில் வீற்றிருந்த அம்பாள் இன்று ஐந்து காலப் பூசைகளும் விழாக்களும் சிறப்பாக நடைபெற தினமும் வேத ஒலி, கீத ஒலி, முழவு ஒலி, மணி ஒலி எல்லாம் ஒன்று சேர ஆட்சி புரிகின்றாள்.
சமூக கலை கலாசார தொண்டுகளையும் செவ்வனே நடத்தினார். பெரிய புராணம் சைவ வினாவிடை போன்ற சைவநெறி சைவசித்தாந்த நூல்களை மறுபதிப்புச் செய்து நல்ல நூல்களைப் பாதுகாத்து வெளியிட்டு வைத்தார். தான் பெற்ற துன்பம் மற்றவர் படக் கூடாது என்ற உள்ளம் கொண்டவர். உனை நீ அறிந்து உத்தமனாய் வாழ் என்ற வித்தக ஞான தத்துவம் கொண்ட அன்னை எமக்குத் தன் உடலை மட்டும் விட்டுச் செல்லவில்லை. அறிவு ஒளியும் ஆத்மீக தத்துவங்களையும் எம் உள்ளங்களில் பதித்து விட்டு விண்ணுலகம் ஏகினார்.
ஒரு பெரியார் கூறினார் அம்மா சொர்க்கத்திற்கு புகாமல் நரகத்திற்கு போகவேண்டும் என்றார். காரணம் என்னவென்றால் அவரின் ஆத்மீகத் தொண்டின் மூலம் நரகத்தையும் சொர்க்கம் ஆக்குவார் என்று கூறினார். அம்மா செய்த பணிகளைத் தொடர்ந்து செயற்படுத்துவதே அவருக்கு நாம் செய்யும் சமர்ப்பணம். அன்னையாரின் ஆத்ம சாந்திக்குப் பிரார்த்திப்போம்.