Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, July 21, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
பிச்சையெடுத்தலை தடை செய்ய வேண்டும் அல்லது முற்றாக ஒழிக்க வேண்டும்
[21 - July - 2008] [Font Size - A - A - A]
-சொ. அமிர்தலிங்கம்-

தனக்காகவும் தன்னைச்சேர்ந்த குடும்பத்தினருக்காகவும் வீதி ஓரங்களில் தரிப்பிடங்களில் வீடு வீடாகச் சுற்றித் திரிந்து இரந்து உண்பது பிச்சையெடுத்தல் எனப்படுகிறது. இது வாழ முடியாத வாழவும் தெரியாத அநாதரவான நிலையில் மனிதன் செய்யும் இழிவான செயலாகும். இது மக்களிடையே சோம்பேறித்தன்மையையும் பொது மக்களுக்குத் தொல்லையையும் ஏற்படுத்துகிறது. பிச்சையெடுத்தல் பல குற்றங்களுக்கும் வழிவகுக்கிறது. எனவே, இது பற்றி நன்கு ஆராய்ந்து இதை இல்லாதொழிக்க முனைய வேண்டும். இதை ஒழிக்க தனி மனிதனால் அல்லது தனி நிறுவனத்தால் முடியாது. அரசு முன் வந்து இதனைத் தடுக்க ஒழிக்க முற்பட வேண்டும். அதற்கு மக்களும் ஒன்றிணைந்து ஒத்துழைக்க வேண்டும். பிச்சையெடுத்தலானது எல்லா இடங்களிலும் சுற்றித் திரிந்து இரந்து உண்பதனைக் குறிப்பதாகும். குறிப்பாக பிச்சையெடுத்தல் பொதுவிடங்கள், வீதிகள், தரிப்பிடங்கள் என்பனவற்றில் நிகழ்கின்றன. மேலும், சிறுவர்களைப் பிச்சைக்கு அனுப்பி அதன் மூலம் செல்வம் சேகரிப்பவர்களும் உண்டு. இவர்களும் பிச்சையெடுக்கிறார்கள். வாழவழியின்றித் திரியும் தொழிலற்ற பலர் இப்படியாகப் பிச்சைக்காரர்களாக மாறுகின்றனர். இவர்கள் நிலையான வாழ்வாதாரமின்றி தம்மையும் தம்குடும்பத்தையும் பேணவேண்டி பிச்சையெடுக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு உள்ளாகின்றனர். தங்களுக்கு ஏற்பட்டுள்ள பலவீனத்தை அதாவது நோய், காயங்கள் (ஊனம்) வறுமை என்பவற்றை காரணமாகக் காண்பித்துப் பிச்சையெடுப்பர். இப்படியாகப் பிச்சையெடுப்போர் பலரும் இரங்கிப்பணம் கொடுக்க ஏற்ற தந்திர வழிமுறைகளைக் கையாள்வர். நோயில்லாத போதும் நோய்வாய்ப்பட்டவர்கள் போல் நடித்துப் பிச்சையெடுப்பதில் ஈடுபடுபவரும் உள்ளனர்.

இன்று இலங்கையில் பிச்சையெடுத்தல் சமூகச் சிக்கல்களில் ஒன்றாகும். ஏறக்குறைய இரண்டரை இலட்சம் பேர் பிச்சையெடுக்கின்றனர். பலர் பரம்பரைத் தொழிலாகவும் செய்கின்றனர்.தந்தை, தாய் வழியாகவும் பிச்சையெடுத்தல் நடைபெறுகின்றது. இது ஒரு இழிவான தொழிலாகவே கருதப்பட்ட போதும் அற நனைந்தவனுக்குக் கூதலும் இல்லை. குளிரும் இல்லை என்பது போல இவர்களுக்கு வெட்கமோ, இழிவான செயலன்றோ தென்படுவதில்லை. பிச்சைக்கு இச்சைப்பட்டவர்களாக அலைந்து திரிவார்கள். சிறுவர் முதல் பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என்போர் பிச்சையெடுக்கும் இழிசெயலில் ஈடுபட்டுள்ளனர்.

பிச்சையெடுத்தல் பிச்சையளிப்போரின் தாராள மனப்பான்மை, இரக்கம், தர்மம், மனித நேயம், புண்ணியம் என்பவற்றின் அடிப்படையில் பெருகுகின்றது. இதனால், கஷ்டப்பட்டு உழைக்காமல் பலர் மானத்தை விற்றுப் பிச்சையெடுக்க முற்படுகின்றனர். இவர்கள் இதனைக் கீழ்த்தரமான மதிப்பிழந்த செயல் என்று கருதுவதுமில்லை. இன்று பிச்சையெடுக்கப் பலவழிகளைக் கையாளுகின்றனர். குழந்தைகள் மூலம் அல்லது பிள்ளைகளைக் கடத்தி அவர்கள் மூலம் சம்பாதிக்கவும் முற்பட்டுள்ளனர். முன்பு பலர் உணவுக்காகப் பிச்சையெடுத்தார்கள். இன்று உணவுக்காக மாத்திரமன்றி வசதி வாழ்க்கைக்காகப் பிச்சையெடுப்பவர்களும் உள்ளனர். சில பெண்மணிககள் வாழவழியின்றி விபசாரத்தில் ஈடுபட்டு உடலை விற்று உழைக்க முற்படுகின்றனர். இது முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.

பிச்சைக்காரர்களைப் பலவகைப்படுத்தலாம்

1. குழந்தைப் பிச்சைக்காரர் பணம் ஈட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் குழந்தைகள் இந்த ரகத்தினர். 2. உடல் ஊனமுற்றோர் குருடு, செவிடு, ஊமை, முடம் போன்ற உடல் ஊனமுற்றோர் இந்த வகையினர். 3. மனநலம் குன்றினோர் அநாதரவான நிலையில், உள நெருக்கீடுகளுக்குட்பட்டு மன நிலை பிறழ்ந்து, ஒழுக்கமற்றுப் போனோர் இந்த வகையினர். 4. நோய்வாய்ப்பட்டோர் காசநோய், தொழுநோய், யானைக்கால் நோய் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டோர். 5. உடல் நலமுடையோர் இவர்கள் உடல் நலமுடையவராயிருந்தும், பல பொய்களைக் கூறிப் பிச்சையெடுப்பார்கள். இரவில் அவர்களில் பலர் கொள்ளையிலீடுபடுபவர்கள். 6. சமயத்துறவிகள் இவர்களில் சிலர் இறைவன் அடியார்கள் என்ற போலியான போர்வையுடன் நடமாடுவர். 7. பரம்பரைப் பிச்சைக்காரர்கள் இவர்கள் இடத்திற்கு இடம்பெயர்ந்து குடும்பசகிதம் பிச்சையெடுப்பர் குறி பார்ப்போர் இந்த ரகத்தினர். 8. பகுதிநேர பிச்சைக்காரர் இவர்கள் தொழில்புரிந்துகொண்டே பிச்சையெடுப்பர். ஏதேனும் சிறுதொழில் செய்வர். இரவில் கொள்ளையிலும் ஈடுபடுவர். 9. விபசாரம் புரிவோர் விருப்புவெறுப்பின்றி பணத்திற்காக அல்லது பொருளுக்காக கண்டவாறு உடலுறவு கொள்ளும் பரத்தமையுடையோரும் (ணீணூணிண்tடிtதtடிணிண) பிச்சைக்காரர்களாயுள்ளனர்.

இப்பிச்சையெடுத்தலிற்குப் பலகாரணிகளுண்டு. நாட்டில் ஏற்பட்டுள்ள வறுமை, வேலையில்லாத்திண்டாட்டம், உடல் ஊனம், நோய்கள், உளக்கோளாறுகள், குடும்பத்தகராறு, மதுபாவனை, போதைப்பழக்கம் போன்றவை முக்கியமானவையாகும். தருமஞ்செய்துவரும் தரும நிறுவனங்களும் பிச்சையெடுத்தலை உற்சாகப்படுத்துகின்றன. மேலும், பொதுமக்கள் காட்டும் தாராள சிந்தையும் இரக்கமும் இதற்கு வழிவகுக்கின்றது. இவ்வாறு பிச்சையெடுத்தல் பலகாரணங்களால் ஊக்குவிக்கப்படுகின்றன. அவற்றில் சில பின்வருமாறு;

வேலையின்மை

இலங்கை ஒரு விவசாய நாடு. எனவே, விவசாயத் தொழிலில் வேலை வாய்ப்புக் குறைகின்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் நிலமற்று வாழ்கின்றனர். வேலை செய்யக்கூடியவர்களுக்கும் சொந்தமாக நிலமில்லை. தொழிலாளர்களாக தொழிற்சாலைகளில் வேலை செய்யும் வாய்ப்புக்குறையவே நகரங்களுக்குக் குடிபெயர்ந்த போதும் அங்கும் தொழிலாளர்களாகவோ வீட்டு வேலைக்காரர்களாகவோ பணிபுரிய நேரிடுகின்றது. இதுவும் பலருக்குக் கிட்டுவதில்லை. இதனால், தாம் உயிர்வாழ பிச்சையெடுப்பர். ஏழ்மை தான் பிச்சையெடுத்தலிற்கு முக்கிய காரணியாகும். எனவே, வேலையில்லாத்திண்டாட்டம் பிச்சையெடுத்தலைத்தூண்டும் காரணியாகும்.

உடல் மற்றும் உள நலமின்மை

உடல் மற்றும் உள நலமின்மை பிச்சையெடுத்தலிற்கு ஒரு காரணமாகும். இன்று பிச்சைக்காரர்களில் பலர் உடல், உள, ஊனமுற்றோராகவே இருக்கின்றனர். ஊனமுற்றோர் தமக்கு வழிதெரியாது பிச்சையெடுக்கும் நிலையில் அநாதரவான நிலையில் இருப்பதனால் பிச்சையெடுக்க முற்படுகின்றனர். வாழ்வதற்கு வேறுவழியோ பிறர் ஆதரவோ இல்லாத குடும்பச் சூழல்கள், பல?ரப் பிச்சையெடுக்கத் தூண்டுகின்றன. சிதைந்த குடும்பங்கள் ஒழுக்கமற்ற தாய், தந்தையர், அன்புக்காக ஏங்கும் குழந்தைகள், கணவன் மனைவி தகராறுகள், பிறருடன் ஒத்து வாழ முடியாத தன்மை என்பனவும் பிச்சையெடுக்கத் தூண்டுகின்றன.

நிலையற்ற மனவெழுச்சி

பிச்சைக்காரர்களில் பலர் அனாதைகள், கைவிடப்பட்டவர்கள், பைத்தியக்காரர்கள். எனவே, சமூகத்தோடு இவர்கள் ஒத்து வாழ முடியாதவர்களாக உள்ளனர். சில விதவைகள் தம் வாழ்வில் ஒளிவிளக்கேற்ற குடும்பத்தில் உழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகி பிச்சையெடுக்கின்றனர். சபலமனம், மனநிறைவற்ற ஆசைகள் என்பனவும் பிச்சையெடுக்கத் தூண்டுகின்றன. வாழ்வதற்கு வேறு வழியோ , பிறர் ஆதரவோ இல்லாத நிலையே பிச்சையெடுத்தலுக்கு அடிப்படையாக அமைகிறது.

கைவிடப்பட்ட பெண்கள்

கணவனால் கைவிடப்பட்டவர்களது வாழ்வும் பிச்சையெடுப்பதிலும் தவறான வழிகளிலும் செல்ல வழிவகுக்கின்றது. வாழ வழியின்றி பிச்சையெடுக்கும் கட்டாயத்துக்குட்படுகின்றனர். தன் மனைவி பிள்ளைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தி உழைக்கும் பிச்சைக்காரர்களும் உள்ளனர். விதவைகள் கூட குடும்பத்தின் வறுமை காரணமாக பிச்சையெடுக்கின்றனர். பாலியல் வன்முறைகளுக்கு ஆளான பெண்களை சமூகம் ஒதுக்குவதனால் அவர்களும் வாழவழியின்றி பிச்சையெடுத்தல், விபசாரம் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். கணவனால் கொடுமைப்படுத்தப்பட்டோரும் பிச்சையெடுக்கின்றனர்.

மூர்த்தி என்ற இந்திய அறிஞரின் கூற்றுப்படி பின்வரும் சிக்கல்கள் பிச்சையெடுத்தலிற்கு காரணமாக அமைகின்றன.

1. இடப்பற்றாக்குறை காரணமாக ஏற்படும் மக்கள்தொகை நெருக்கமும் மக்களுக்குத் தேவையான நில உற்பத்தியின்மையும். 2. நில உரிமை முறை, கொடுமையான பண்ணை மேலாட்சிமுறைமை, ஆதாயமற்ற விவசாயம், மிகப்பெரிய குடும்பங்கள் கொண்டுள்ளமை. 3. கடன்கள். 4. சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் பஞ்சம், வெள்ளம், தொற்றுநோய் என்பன. 5. குடும்பம் சிதைந்தது போதல். 6. ஓர் ஆண் அல்லது கணவனைப் பிரிந்த மனைவியின் பொருளாதார இயலாமையும் மனவெழுச்சி சார் இயலாமையும். 7. தீராத நோய்கள். 8. உடல் ஊனமும் மனநலமின்மையும். 9. வேலை வாய்ப்பின்மை. 10. வேலை செய்ய விருப்பமின்மை. 11. சமயத்தின்மீது கொண்ட மனச்சார்பு. 12. குழந்தைகளைக் கடத்துதல் சமூகவிரோத செயல்கள். 13. அநாதைகள், இயலாதோர், ஒழுக்கமற்றோர். 14. சமூக பாதுகாப்பும், சமூகப் பொறுப்புமில்லாமை. 15. நகர வாழ்க்கையின் மீதுள்ள மோகம். 16. வீட்டைவிட்டு ஓடிப்போதல் 17. விதியின்மீதான நம்பிக்கை.

மனிதன் பிறந்தது உழைக்கவும், உயிர்வாழவும் நல்வாழ்வு அமைக்கவுமேயாகும். இந்த நோக்கங்களைக் கொண்டு பிச்சையெடுத்தலை ஒழிக்கவேண்டும்.

பிச்சையெடுத்தலைத் தடுத்தல்

இன்று பல நாடுகளிலும் பொது இடங்களில் பிச்சையெடுத்தல் தடைசெய்யப்பட்டுள்ளது. தனியாரால் பிச்சையெடுத்தலைத் தடை செய்ய முடியாது. அரசானது தலையிட்டு பிச்சைக்காரர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முயல வேண்டும். இதற்கு இரண்டு முறைகளை அரசு கடைப்பிடிக்கவேண்டும். அவையாவன தடுத்தல் முறையும் (கணூஞுதிஞுணtடிதிஞு), தீர்த்தல் முறையும் (இதணூச்tடிதிஞு). அரசானது மக்களின் நல்வாழ்வினை மேம்படுத்த முனைகின்றது. எனினும் சமூகத்தில் மலிந்து கிடக்கும் இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசு முயலவேண்டும். இன்று அரசு பிச்சையெடுத்தலைத் தடைசெய்துள்ளது. மீறுவோருக்குத் தண்டனை வழங்கவும், சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இயலுமானவர்கள் தொழில் முயற்சிபெறவேண்டும். வேலை செய்து சீவிக்கக்கூடிய உடற்தகுதியுடைய இயலுமானவர்கள் பிச்சையெடுப்பது குற்றமாகும். திருடுதல், கடத்தல், விபசாரம் போன்றனவும் குற்றங்களாகும். அரசானது இயலாத பிச்சைக்காரர்களின் நல்வாழ்விற்கு இல்லங்கள் அமைத்து குடிசைத் தொழில்கள் செய்ய ஊக்குவிக்கப்பட வேண்டும். இலங்கையில் சுற்றித்திரியும் பயனற்ற (ஙச்ஞ்ணூச்ணt) சோம்பேறி நாடோடிகளை சட்டத்தின் முன் நிறுத்த குற்றவியல் சட்டத்தின்படி சுற்றித்திரிவோர் கட்டளைச் சட்டத்தின்படி சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இப்பிச்சையெடுத்தல் தொழிலை கட்டுப்படுத்தி அழிக்கும் பொருட்டு அரசினாலும் பல சமூக நிறுவனங்களாலும் பல வகையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அரசு அவர்களைக் குடிசைக் கைத்தொழில்களில் ஈடுபடுத்த வேண்டும். இயலுமானவர்கள் தொழில் முயற்சி பெறவேண்டும். இயலாதவர்கள் சமூக நல உதவிகளை பெற அரசு முனைப்பாக இருக்க வேண்டும். எனவே பிச்சையெடுத்தலைத் தடுக்கவோ, தீர்க்கவோ அரசு முன்வரவேண்டும். அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க முன்வரவேண்டும்.

பிச்சையெடுத்தல் இன்று நேற்றுத் தோன்றியதல்ல. இற்றைக்கு இரண்டாயிரத்திநூறு ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட திருக்குறளில் கூட மானங்கெட்டு இரந்து உண்பதற்கு எதிராக திருவள்ளுவர் எழுதியுள்ளார்.

"இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும் வன்மையின் வன்பாட்டது இல்' 1063

வறுமைத்துன்பத்தை உழைப்பால் நீக்குவோம் என்று கருதாமல் இரப்பால் நீக்குவோம் என்று கருதுபவனின் சமர்த்தைபோல் கொடுமையானது வேறொன்றுமில்லை என்றார்.

"இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகு இயற்றியான்' 1062

இவ்வுலகத்தைப் படைத்த இறைவன் இதில் வாழ்பவர்களுக்கு உழைத்து உயிர் வாழ்தலேயன்றி, இரந்து உயிர்வாழ்தலையும் விரும்பி ஏற்படுத்தியிருந்தால், அக்கொடியவனும் அவரைப் போன்றே நிலையில்லாது எங்கும் அலைந்து திரிந்து கெடுவானாக என்றார். எனவே திருவள்ளுவர் கூட இரவு அச்சம் வேண்டுமென திருக்குறளில் 107 ஆம் அதிகாரத்தை இயற்றியுள்ளார். மனிதன் உயிர் வாழவும் வாழ்க்கையை நன்முறையில் பயன்படுத்தவுமே இப்பூவுலகில் அவதரித்தான். வாழ்க்கையை வீணாக்கவோ சீர்கெட்ட தொழிலை செய்யவோ படைக்கப்படவில்லை. பொது இடங்களிலும் பொதுவீதிகளிலும் பிச்சையெடுப்பது சமயத்தூய்மைக்கு எதிரானது என்ற உடன்பாடான கருத்து இன்று சகலரிடமுமுண்டு. முறையான அரசியல் தலையீட்டின் மூலமே இச்சிக்கலைத்தீர்க்க முடியும்.

எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து இயலாதவர்களுக்கு இல்லங்களில் புகலிடமளித்தும், இயலுமானவர்களை பிச்சையெடுக்காது குடிசைத் தொழிலில் ஆர்வமூட்டியும், வறுமையை ஒழிக்க எங்களாலான பங்கையாற்றியும் நாட்டின் முன்னேற்றத்திற்காக பிச்சைக்காரர் வாழ்வு மலர உழைப்போமாக! பிச்சை ஒழிக!

கட்டுரையாளர் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர்

Email this page Your Opinion Print this page
கம்யூனிஸ்டுகள் மதச்சார்பற்ற ஹீரோக்கள்?
பிச்சையெடுத்தலை தடை செய்ய வேண்டும் அல்லது முற்றாக ஒழிக்க வேண்டும்
தாயுள்ளம் நிறைந்த எங்கள் அன்னை தங்கம்மா
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com