-எம்.கே.என்.-
"மத்திய அரசை கவிழ்த்தே தீருவோம்', "ஒவ்வொரு எம்.பி.க்கும் 25 கோடி ரூபா பேரம் பேசுகிறது', "மக்களுக்கு துரோகம் செய்துவிட்டது காங்கிரஸ்' என்றெல்லாம் வெகுண்டெழுந்து பேசி வருகிறார்கள் இந்திய இடதுசாரி தலைவர்கள்.
பிரகாஷ் காரத்தோ ஓடிச் சென்று உத்தரபிரதேச முதலமைச்சர் மாயாவதியைச் சந்திக்கிறார். "அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும்' என்று கை கோர்க்கிறார். நான்கு ஆண்டுகாலம் காங்கிரஸுக்கு ஆதரவு அளித்த கம்யூனிஸ்டுகள் இப்படி ஆவேசப்படக் காரணம் என்ன?
"மதவாத சக்திகளை புறக்கணிப்போம்' என்ற கோஷத்தை முன்வைத்தே காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை இடதுசாரிகள் ஆதரித்தார்கள். அதற்குக் காரணம் அவர்கள் வசமிருந்த 59 எம்.பி.க்கள்! தங்களை சோனியா காந்தி மிகவும் மதிக்கிறார் என்ற நினைப்பில் மிதந்து கொண்டிருந்தார்கள் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள்.
உதாரணத்திற்கு அணுசக்தி ஒப்பந்தத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள் 2005 இலேயே தொடங்கிவிட்டன. அமெரிக்க அதிபர் புஷ்ஷ?ம் பிரதமர் மன்மோகன்சிங்கும் சந்தித்து விட்டு வந்தவுடன் தொடங்கிய "அமெரிக்க எதிர்ப்பை' 2008 வரை கம்யூனிஸ்டுகள் இழுத்து வந்தது ஏன்?
சோனியாவின் மீதிருந்த மதிப்பில் ஒருங்கிணைப்புக் குழுவிலேயே இடம்பெற்று, கடந்த மூன்று வருடங்களாக அணுசக்தி ஒப்பந்தம் பற்றி விவாதத்தை நடத்தி வந்ததுதான் அதற்குக் காரணம். இந்தப் பேச்சுவார்த்தையில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் இடதுசாரிகளின் "ஹீரோவாகவே' காட்சியளித்தார்.
ஆனால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியோ வேறு ஓர் தந்திரமான போக்கைக் கடைப்பிடித்தார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அணுசக்தி ஒப்பந்தம் பற்றி இடதுசாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தக் களமிறக்கினார்.
அதேசமயம், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மன்மோகன்சிங்கை முழு வீச்சில் இறக்கிவிட்டார். சோனியா காந்தியின் இந்த தந்திரத்தில் ஏமாந்துபோனார்கள் கம்யூனிஸ்டுகள்! அதனால்தான் இன்று காரசாரமாக களத்திற்கு வந்து, "இந்த அரசை வீழ்த்தியே தீருவோம்' என்று சபதம் எடுத்துள்ளார்கள்.
ஒருபடி மேலே போய், "ஒவ்வொரு எம்.பி.க்கும் 25 கோடி ரூபா பேரம் பேசுகிறது காங்கிரஸ் கட்சி' என்று குற்றம் சாட்டியுள்ளார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பரதன். தங்களது 59 எம்.பி.க்களின் ஆதரவை நான்காண்டுகள் காங்கிரஸ் அரசுக்கு வழங்கிய இடதுசாரிகள் சார்பில் இப்படியொரு குற்றச்சாட்டு கிளம்பியுள்ளதை காங்கிரஸ் திகைப்புடனேயே பார்க்கிறது.
"இடதுசாரிகளும் காங்கிரஸும்' எப்போதுமே ஒன்றுசேர்ந்து ரொம்ப வருடங்கள் இருந்தது இல்லை! காரணம் மேற்கு வங்கம், திரிபுரா, கேரளா போன்ற கம்யூனிஸ்ட் பிடிப்பு உள்ள பகுதிகளில் பலமாக இருப்பது காங்கிரஸ் கட்சி என்பதால்தான்!
எப்போது தங்கள் வாக்கு வங்கிக்கு ஆபத்து வருகிறது என்று இடதுசாரிகள் கருதுகிறார்களோ அப்போது காங்கிரஸிடமிருந்து விலகிக் கொள்வார்கள். 1969 இல் காங்கிரஸ் கட்சி "ஆர்' ஆகவும் "ஓ' ஆகவும் உடைந்த நிலையில், "ஆர்' காங்கிரஸை நடத்திய இந்திரா காந்திக்கு நேசக்கரம் நீட்டினார்கள் கம்யூனிஸ்டுகள்!
அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1972 பொதுத் தேர்தலை காங்கிரஸுடன் கூட்டணியாகவே சந்தித்தது. அந்தக் கூட்டணியில் அகாலிதள், தி.மு.க. போன்ற கட்சிகளும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கிகள் தேசிய மயம், குறிப்பிட்ட சில தொழிலதிபர்கள் கையில் தொழிற்சாலைகள் சிக்கிக் கொள்வதை தடுத்த முறை ரிக்ஷா, டாக்ஸி ஓட்டுனர்கள், விவசாயிகள், சிறுதொழில் செய்வோர் போன்றோருக்கு அன்று பிரதமராக இருந்த இந்திரா காந்தி வழங்கிய சலுகைகள் இடதுசாரிகளுக்கு அப்படியொரு நிர்ப்பந்ததைக் கொடுத்தது.
இதன்பிறகு காங்கிரஸுடன் தேர்தல் கூட்டணி என்பதில் இருந்து கழன்று கொண்டனர் இடதுசாரிகள். 24 வருடம் கழித்து 1996 இல் அரசியல் சூழ்நிலை மாறியது. பா.ஜ.க. சார்பில் வாஜ்பாய் பிரதமராகும் வாய்ப்பு உருவானது.
அதைத் தொடரவிடக்கூடாது என்று நினைத்த கம்யூனிஸ்ட் கட்சிகள் மத்தியில் காங்கிரஸ் ஆதரிக்கும் அரசுக்கு ஆதரவளிப்போம் என்ற மனநிலைக்கு வந்தன. இதைத் தொடர்ந்து தேவகௌடா பிரதமராக பதவியேற்றார்.
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிலிருந்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியிலேயே பங்கேற்றும் பிரதமர் தேவகௌடாவை ஆதரித்தது. முதல் முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இந்திரஜித் குப்தா மத்திய உள்துறை அமைச்சரானார்!
ஆனால், கம்யூனிஸ்டுகள் பங்கேற்ற ஐக்கிய முன்னணி தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ் கட்சி திடீரென்று கவிழ்த்தது. இந்த நிகழ்வுக்குப் பிறகு 1998 இலும் சரி 1999 இலும் சரி இடதுசாரிகளின் தயவின்றியே மத்தியில் அரசு அமைக்கும் சக்தியை பா.ஜ.க. பெற்றது.
அதற்குக் காரணம் கருணாநிதி, ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு, பரூக் அப்துல்லா, மம்தா பானர்ஜி, வைகோ, டாக்டர் ராமதாஸ் போன்ற மதச்சார்பற்ற தலைவர்கள் பா.ஜ.க.வுடன் மாறி மாறி கூட்டணி அமைத்ததுதான்! மாநில அளவில் உள்ள மதச்சார்பற்ற தலைவர்களின் செல்வாக்கு உயர்ந்ததால், மதச்சார்பற்ற சக்திகளின் "ஹீரோவாக' இருந்த கம்யூனிஸ்டுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டனர்.
இதுபோன்ற சூழ்நிலையில்தான் 2004 பாராளுமன்றத் தேர்தல் வந்தது. "பா.ஜ.க. வெற்றி பெறக்கூடாது' என்ற ஒரு வரிச் செயல் திட்டத்தின் அடிப்படையிலேயே அனைத்துக் கட்சிகளும் வியூகம் வகுத்தன. அதற்கு தகுந்தாற்போல் பா.ஜ.க.வுடன் அணி சேர்ந்து நின்ற ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, பரூக் அப்துல்லா போன்றவர்கள் தங்கள் மாநிலங்களில் வலுவிழந்தார்கள்.
அவர்கள் போட்டியிட்ட இடங்களில் பா.ஜ.க.விற்கு எம்.பி.க்களின் எண்ணிக்கையை பெருக்கிக் கொடுக்க முடியவில்லை. அதேசமயத்தில், காங்கிரஸ் அணியில் நின்ற கருணாநிதி, வைகோ, ராமதாஸ் போன்றோரால் காங்கிரஸுக்கு 40 எம்.பி.க்களைக் கொடுக்க முடிந்தது.
இந்தத் தேர்தல் மீண்டும் இடதுசாரிகளின் "மதச்சார்பற்ற' ரோலுக்கு ஒரு முக்கியத்துவத்தைக் கொடுத்தது. அதனால் இடதுசாரிகளின் தேர்தல் வரலாற்றில் முதன்முதலாக 59 எம்.பி.க்களை வென்றெடுத்தார்கள். ஆக 2004 இல் கம்யூனிஸ்டுகள் மத்தியில் உள்ள அரசுக்கு ஆதரவளிப்பதில் மீண்டும் "ஹீரோ' ஆனார்கள்.
விலைவாசி உயர்வு, காங்கிரஸ் அரசின் செயல்பாடு போன்றவற்றால் இந்த இமேஜுக்கு வரும் தேர்தலில் இழப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்ற அச்சம் பிரகாஷ் காரத், பரதன் போன்ற தலைவர்கள் மத்தியில் இருக்கிறது. ஆகவேதான் காங்கிரஸுக்கு ஆதரவை வாபஸ் வாங்கி பா.ஜ.க.வை விட ஆவேசமாக "ஆன்டி காங்கிரஸ்' பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்கள்.
ஆனால், பிரணாப் முகர்ஜி சொன்னதுபோல் 51 மாதங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை ஆதரித்து விட்டு மீதமுள்ள 9 மாதங்களில் "காங்கிரஸ் எதிர்ப்பைக் காட்டி' தங்கள் இமேஜை நிமிர்த்திக் கொள்ள முடியுமா? என்ற கேள்வி மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் மத்தியிலேயே காரசாரமாக விவாதிக்கப்படுகிறது.
தமிழன் எக்ஸ்பிரஸ்