Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, July 21, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Editorial
குடும்ப அரசியல் ஆதிக்கம்
[21 - July - 2008] [Font Size - A - A - A]
தெற்காசிய சமூகங்கள் இன்னும் பிரபுத்துவ பாரம்பரியங்களுக்குள் மூழ்கிக்கிடப்பதன் காரணத்தினாலேயே அவற்றின் அரசியலில் குடும்ப அந்தஸ்து கூடுதல் முக்கியத்துவத்தைப் பெறக் கூடியதாக இருக்கிறது. மகனோ, மகளோ தந்தையின் நிலத்தையும் உடைமைகளையும் வாரிசு உரிமையாகப் பெறுவதைப் போன்று அரசியலிலும் குடும்பங்களின் ஆதிக்கம் தொடருகிறது. எமது பிராந்திய நாடுகளில் அரசியலில் குடும்பச் செல்வாக்கு ஆதிக்கம் செலுத்து வதைப்போன்று அபிவிருத்தியடைந்த மேற்கு நாடுகளில் காணப் படுவதில்லை.

இலங்கை அரசியலில் குடும்ப ஆதிக்கம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழான பழைய சட்டசபைக்காலத்திலிருந்தே தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் நேரு வம்சத்தின் ஆதிக்கம் அரசியலில் மிகவும் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. மகத்தான அரசியலில் பாரம்பரியத்தைக் கொண்ட இந்திய காங்கிரஸ் கட்சிக்கு தலைமை தாங்கு வதற்கு நேருவின் பேரனைத் திருமணம் செய்த இத்தாலியப் பெண்மணி இன்று தேவைப்படுகிறது. எத்தனையோ மூத்த தலைவர்கள் இருக்கின்றவேளையில் இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக காலஞ்சென்ற ராஜீவ் காந்தியின் புதல்வர் ராகுல்காந்தியே கடந்தவருடம் நியமிக்கப்பட்டார். இந்தியாவின் அடுத்த பிரதமராகுவதற்கான தகுதி ராகுல் காந்திக்குத்தான் இருப்பதாக நீண்டகால அரசியல் அனுபவமும் முதிர்ச்சியும் கொண்ட காங்கிரஸ் தலைவர்கள் முண்டியடித்துக் கொண்டு அண்மையில் அறிக்கைகளை விடுத்து பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தனர். இந்தியாவின் பல மாநிலங்களைப் பொறுத்தவரையிலும் கூட, முன்னாள் முதலமைச்சர்களின் வாரிசு அரசியல் கணிசமானஅளவுக்கு ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. தமிழகத்தில் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் குடும்பத்துக்கே திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப்பொறுப்புகள் முதுசமாக எழுதப்பட்டுவிட்ட ஒரு நிலைமையைக் காண்கிறோம். கருணாநிதி தனது குடும்பத்தவர்களுக்கே கழகத்தின் தலைமைப் பொறுப்புகளில் முக்கியத்துவம் கொடுக்கிறார் என்றால், அண்ணா திராவிடமுன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளரான முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தனது ஆருயிர்த் தோழி சகிகலாவுக்கும் அவரது குடும்பத்தவர்களுக்கும் கட்சிக்குள் அதிகாரம் செலுத்தும் உரிமையைக் கொடுத்திருக்கும் விசித்திரத்தைக் காண்கிறோம்.

பாகிஸ்தானில் தூக்கிலிடப்பட்ட முன்னாள் பிரதமர் சுல்பிகார் அலி பூட்டோவின் புதல்வி பெனாசிர்பூட்டோ பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு தலைவராக இருந்துவந்தார். கடந்த வருடம் டிசம்பரில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பெனாசீர் பூட்டோ கொலை செய்யப்பட்ட சில தினங்களுக்குள் அவரது மகன் பிலாவல் கட்சியின் தலைவராக்கப்பட்டார். அரசியலில் எந்த முன் அனுபவமும் இல்லாத பிலாவலின் தலைமைத்துவத்தை மக்கள் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் எல்லோரும் பயபக்தியுடன் ஏற்றுக் கொண்டனர். பிலாவல் இங்கிலாந்தில் தனது உயர்கல்வியை முடித்துக்கொண்டு நாடுதிரும்பி தீவிர அரசியலில் ஈடுபடும்வரை அவரது தந்தையாரே கட்சியின் தலைவராக பணியாற்றிக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. பங்களாதேஷில் சதிப்புரட்சியின் போது கொல்லப்பட்ட ஜனாதிபதி ஷேய்க் முஜிபுர் ரஹ்மானின் புதல்வி ஹசீனா, அவாமி லீக் கட்சியின் தலைவியாகவும் படுகொலையுண்ட இன்னொரு ஜனாதிபதி ஸியாவுர் ரஹ்மானின் மனைவி பேகம் காலிதா பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் தலைவியாகவும் இருக்கிறார்கள். பாகிஸ்தானின் பிரதமராக பெனாசிர் பூட்டோவும் பங்களாதேஷின் பிரதமர்களாக ஷேய்க்ஹசீனாவும் பேகம் காலிதாவும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பதவி வகித்திருக்கிறார்கள். முன்னாள் தலைவர்களின் மனைவிமார், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் கட்சித்தலைமைப் பதவிகளுக்கு வருவது அதைத் தொடர்ந்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதுமான குடும்ப ஆதிக்க அரசியல் பாரம்பரியம் இவ்வாறாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இலங்கையைப் பொறுத்தவரை டி.எஸ்.சேனநாயகா தலைமையிலான முதலாவது அமைச்சரவை 1947 இல் அமைக்கப்பட்டபோது அது பெருமளவுக்கு ஒரு குடும்ப ஒன்று கூடல் போன்றே காட்சியளித்தது. அப்போது காலி தொகுதியின் லங்கா சமசமாஜக்கட்சி எம்.பி.யாக இருந்த டபிள்யூ. தஸநாயகா ஐக்கிய தேசியக்கட்சியை மாமன், மருமகன் கட்சி என்று நையாண்டி செய்தார். டி.எஸ்.சேனநாயகாவின் மறைவுக்குப்பின்னர் மகன் டட்லி சேனநாயகாவும் மருமகன் சேர் ஜோன் கொத்தலாவலவும் பிரதமர்களாக பதவிவகித்தனர். டட்லியின் மறைவையடுத்து ஐ.தே.க.வின் தலைமைத்துவத்தை ஜே.ஆர்.ஜெயவர்தனா கைப்பற்றியபிறகு சேனநாயக்க குடும்பத்தின் அரசியல் ஆதிக்கம் அஸ்தமித்தது. எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டார நாயக்காவின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைத்துவம் 2006 நடுப்பகுதி வரை அவரது குடும்பத்தின் கையிலேயே இருந்தது. பண்டாரநாயக்காவின் மறைவுக்குப் பின்னர் மனைவியினதும் அடுத்து மகளினதும் தலைமைத்துவத்தின் கீழ் இருந்த சுதந்திரக்கட்சி இப்போது ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவின் ஆதிக்கத்திற்குள் வந்திருக்கிறது. இலங்கையில் குடும்ப அரசியல் ஆதிக்கம் என்பது பெருமளவுக்கு பண்டாரநாயக்கா குடும்பத்துடனேயே அடையாளப்படுத்தப்பட்ட ஒன்றாக இருந்துவந்தது. சுதந்திரக்கட்சியின் தலைமைத்துவத்தை மகிந்த ராஜபக்ஷ கைப்பற்றியதையடுத்து கட்சிக்குள்ளும் ஆட்சியதிகாரத்திலும் அவரது குடும்பத்தவர்களின் செல்வாக்கு ஊடுருவியிருக்கின்ற விதத்தை நோக்கும் போது முன்னைய அரசியல் ஆதிக்க குடும்பங்கள் காட்டியிராத அதீதமான குடும்ப அதிகார முனைப்பொன்றைக் காணக் கூடியதாக இருக்கிறது. பண்டார நாயக்கா குடும்பத்தவர்கள் ஆட்சியதிகாரத்தில் இருந்தபோது பேசப்படாத அளவுக்கு இப்போது ராஜபக்ஷ குடும்ப ஆதிக்க அரசியல் குறித்து மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் கிளம்பியிருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது.

நாட்டின் ஆட்சியதிகாரத்திலும் ஆளும் கட்சியிலும் இத்தகைய குடும்ப ஆதிக்கம் காணப்படுகின்றதற்கு புறம்பாக, அடுத்த மட்ட அரசியல் அரங்கிலும் குடும்பங்களின் அரசியல் ஆதிக்கம் வளர்ந்திருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் அமைச்சர்களின் குடும்பத்தவர்கள் கூடுதலான எண்ணிக்கையில் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறார்கள். இது இன்று நேற்றல்ல, நீண்டகாலமாகவே தொடருகிறது. அடுத்தமாதம் நடைபெறவிருக்கும் வடமத்தியமாகாண, சப்ரகமுவமாகாண சபைகளுக்கான தேர்தல்களில் சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் கணிசமான எண்ணிக்கையானோர் அமைச்சர்களினதும் முன்னாள் முதலமைச்சர்களினதும் நெருங்கிய உறவினர்களாகவே இருக்கிறார்கள். சப்ரகமுவ மாகாணத்தில் தொழில் அமைச்சர் அதாவுடசெனவிரத்னவின் மகனும் மருமகனும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பட்டியலில் போட்டியிடுகிறார்கள். நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் ஒன்றுவிட்ட சகோதரர், பாவனையாளர் விவகார அமைச்சர் எச்.ஆர்.மித்ரபாலவின் மகன், இளைஞர் விவகார அமைச்சர் பவித்ரா வன்னிய?ராச்சியின் கணவரும் மாமனாரும், அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர் பிரேமலால் ஜெயசிறியின் சகோதரர், நீர்ப்பாசன அமைச்சர் ஜெயதிஸ்ஸ ரணவீரவின் மகனும் மருமகனும், முன்னாள் சுதந்திரக்கட்சி எம்.பி.யான ஹீன்மாத்மயா ஜெயதிலகவின் மகன் ஆகியோரும் சப்ரகமுவ மாகாணத்தில் சுதந்திரமுன்னணி பட்டியலில் தேர்தல் களத்தில் நிற்கிறார்கள்.

வடமத்திய மாகாணத்தைப் பொறுத்தவரை தேசநிர்மாண அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவின் சகோதரர், பெற்றோலிய வளங்கள் அமைச்சர் துமிந்த திசாநாயகாவின் தந்தையார், சுதேச வைத்திய அமைச்சர் திஸ்ஸ கரலியத்தையின் சகோதரி ஆகியோர் சுதந்திரமுன்னணியின் பட்டியலில் போட்டியிடுகிறார்கள். இவ்வாறாக குடும்ப ஆதிக்கம் என்பது அரசியலில் தேசியமட்டத்தில் இருந்து மாகாண மற்றும் உள்ளூராட்சி மட்டங்கள்வரை ஆழமாக வேரூன்றிப் பரவியிருக்கிறது. ஜனநாயக முறைமைக்கு முற்றிலும் முரணான இப் போக்கை மேலும் வளரவிடுவது அரசியலிலும் நிருவாகத்திலும் ஊழல் மோசடிகளையே அதிகரிக்கச்செய்யும்.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com