இஸ்ரேலில் வைத்து அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய 6 தீவிரவாதிகளை அந்நாட்டு உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புஷ் இஸ்ரேலுக்கு வந்தபோது அவரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை தெரியவந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி கடந்த ஜனவரி மாதம் இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டார். அவரும் அவருடன் வந்த அதிகாரிகள் குழுவினரும் வந்த ஹெலிகொப்டர்கள், ஜெருசலேம் நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தரையிறங்கின.
அப்போது அந்த ஹெலிகொப்டர்களை ஒரு தீவிரவாதி தனது செல்போனில் படம் பிடித்துள்ளான். ஹெலிகொப்டரில் புஷ் பறந்து செல்லும்போது ஹெலிகொப்டரை சுட்டு வீழ்த்தி புஷ்ஷைக் கொலை செய்வதே அவர்களது சதித்திட்டம்.
ஹெலிகொப்டரை எப்படிச் சுட்டு வீழ்த்துவது என்று அவர்கள் இணையத்தளம் மூலமாக அல்ஹைடா தீவிரவாதிகளுடன் ஆலோசனை நடத்தினர். ஆனால், அந்த சதித்திட்டம் வெற்றி பெறவில்லை.
மேலும், இந்தத் தீவிரவாதிகள், இஸ்ரேலில் அல்ஹைடாவின் கிளையைத் தொடங்க திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது. இதற்காக அவர்கள் ஜெருசலேமில் உள்ள அல்அக்சா மசூதியில் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளில் 4 பேர் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த அரேபியர்கள், 2 பேர் இஸ்ரேல் நாட்டு அரேபியர்கள் ஆவர். அவர்களிடம் இருந்த கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான வழிமுறைகள் குறித்த தகவல்கள் இருந்தன.
இதற்கிடையே ஐரோப்பிய ஒன்றிய கடவுச்சீட்டு மூலம் ஐரோப்பிய தீவிரவாதிகள், அமெரிக்காவுக்குள் நுழைய முயல்வதாக அமெரிக்க உள்துறை பாதுகாப்பு அதிகாரி மைக்கேல் செர்டா, அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒவ்வொரு தடவையும் இத்தீவிரவாதிகளை அடையாளம் கண்டறிந்து தடுப்பது கடினம் என்றும் அவர் கூறியுள்ளார்.