பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் காலிதா ஸியா மற்றும் அவரது மூத்த மகனை விடுதலை செய்யும் நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு தீவிரமாக இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இத் தகவலை வர்த்தகத்துறை ஆலோசகர் ஹுசைன் ஜிலூர் ரஹ்மான் நிருபர்களிடம் தெரிவித்தார்.
பங்களாதேஷில் இராணுவ ஆதரவுடன் இடைக்கால அரசு செயல்படுகிறது. கடந்த ஆண்டு ஜனவரியில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டகையோடு இடைக்கால அரசு நிறுவப்பட்டது. இதைத் தொடர்ந்து இலஞ்ச, ஊழல் வழக்கில் ஸியாவும் அவரது இளைய மகன் அராபத் ரஹ்மான் கோகோவும் கடந்த செப்டெம்பரில் கைது செய்யப்பட்டனர்.
அரபாத் நோய்வாய்ப்பட்டுள்ளார் என்பதால் வெளிநாடு சென்று இரண்டு மாத காலம் சிகிச்சை எடுத்துக் கொள்ள வசதியாக அரபாத் ஜாமீனில் கடந்த வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டார். இதேவேளை ஸியாவின் மூத்த மகனான தாரிக் ரஹ்மான் ஊழல் மற்றும் கிரிமினல் குற்றப் புகார்கள் தொடர்பாக கடந்த மார்ச்சிலிருந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
காலிதா ஸியாவையும் அரபாத்தையும் விடுதலை செய்வதாக ஜிலூர் ரஹ்மான் தெரிவித்த போதிலும் எப்போது காலிதா ஸியா விடுதலை ஆவார் என்பதை தெரிவிக்கவில்லை.
பங்களாதேஷில் ஜனநாயக ஆட்சிமுறையை கொண்டுவரும் முனைப்புடன் இடைக்கால அரசு செயல்படுகின்றது. இதற்காக அரசியல் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. டிசம்பரில் பொதுத் தேர்தலை நடத்தவும் அது தீர்மானித்துள்ளது. ஆனால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமது தலைவர்களை விடுதலை செய்தால் மட்டுமே அரசு நடத்தும் பேச்சுவார்த்தையில் பங்கேற்போம் என்று காலிதா ஸியாவின் பங்களாதேஷ் தேசியவாத கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
எனவே காலிதா ஸியாவையும், அவரது மூத்த மகனையும் விடுதலை செய்தால் பங்களாதேஷில் தேசியவாத கட்சி பேச்சுவார்த்தையில் பங்கேற்க முன்வரும் என்று அரசு கருதுவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
காலிதா ஸியாவின் எதிர்க் கட்சியான அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனா சுமார் 11 மாதம் வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அமெரிக்கா சென்று அவர் சிகிச்சை பெற வசதியாக கடந்த மாதம் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
காலிதா ஸியா மூட்டுவலியால் அவதிப்பட்டு வருகிறார். அவரது இளைய மகன் அராபத்துக்கு சுவாசக் கோளாறும் இதய நோயும் உள்ளன. மூத்த மகன் தாரிக் ரஹ்மானுக்கு முதுகுத் தண்டுவடத்தில் பிரச்சினை இருப்பதாக இவர்களது தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.