ஈராக்கின் சன்னி முஸ்லிம் குழுவினர் மீண்டும் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈராக்கின் பிரதான சன்னி முஸ்லிம் குழுவினரான ஈராக் ஒன்றுபட்ட முன்னணியினர் மீண்டும் ஈராக் அரசாங்கத்தில் இணைகின்றனர். ஒரு வருடத்திற்கு முன்புதான் அதிகாரப் பகிர்வு தொடர்பான சர்ச்சையினால் இவர்கள் விலகிக்கொண்டனர்.
ஈராக்கில் தேசிய ஒற்றுமை கொண்ட அரசாங்கத்தினை உருவாக்குவதில் ஏற்பட்டிருக்கின்ற முக்கியமான முன்னேற்றம் இதுவென்று பாக்தாத்தில் இருக்கின்ற பிபிசி செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
கடந்த சில மாதங்களாக அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருப்பதோடு, மன்னிப்புச் சட்டம் ஒன்றின் மூலமாக சன்னி சிறைக்கைதிகள் பலர் விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த ஓராண்டு காலமாக ஈராக் அமைச்சரவையில் சன்னி அரபு பிரதிநிதிகள் இடம்பெற்று இருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஈராக்கில் பிரிட்டிஷ் படைகள் நிலைகொண்டிருக்கிற தென்பகுதியில் பாதுகாப்பு நிலைமை முன்னேறி இருப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் தெரிவித்துள்ளார்.