ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படைகளை படிப்படியாக வாபஸ் பெறுவதற்கான காலக்கெடுவை நிர்ணயிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதனை அமெரிக்க எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன.
ஈராக்கில் சதாம் ஹுசைன் ஆட்சி ஒழிக்கப்பட்ட பின்னரும், அங்குள்ள தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக, அமெரிக்க படைகள் அங்கு முகாமிட்டுள்ளன. சுமார் ஒன்றரை இலட்சம் அமெரிக்க படையினர் இன்னும் அங்கு உள்ளனர்.
தீவிரவாதிகளின் தாக்குதலில் அமெரிக்க படைகளுக்கு உயிர்ச்சேதம் ஏற்படுவதால், ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெற வேண்டும் என்று அமெரிக்க எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வற்புறுத்தி வருகிறது. ஜனநாயக கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா, தான் பதவிக்கு வந்தால், 16 மாதங்களில் அமெரிக்க படைகளை வாபஸ் பெறுவேன் என்று கூறியுள்ளார்.
ஆனால் ஜனாதிபதி புஷ்ஷோ படைகளை வாபஸ் பெற்றால், ஈராக்கிய தீவிரவாதிகளின் வன்முறை அதிகரித்து விடும் என்று கூறி, படை வாபசை தவிர்த்து வந்தார். இருப்பினும், சமீபகாலமாக ஈராக்கில் வன்முறை சம்பவங்கள் குறைந்து வருகின்றன. எனவே, அமெரிக்க படைகளை வாபஸ் பெற காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்று ஈராக் பிரதமர் நுர்ரி அல்மாலிகி கடந்த வாரம் வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து புஷ்ஷ?ம், ஈராக்கிய பிரதமரும் "வீடியோ கொன்பரசிங்' வசதி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெற காலக்கெடுவை நிர்ணயிப்பதற்கு இருவரும் ஒப்புக்கொண்டனர். இது தொடர்பாக இம்மாத இறுதிக்குள் உடன்பாடு செய்து கொள்ள திட்டமிட்டனர்.
தன்னிச்சையாக திகதி நிர்ணயிக்காமல், கள நிலைவரம் முன்னேற்றம் அடைவதன் அடிப்படையில் படை வாபஸ் அமைய வேண்டுமென இருவரும் ஒப்புக்கொண்டனர்.
புஷ்ஷின் இந்த கொள்கை மாற்றத்தை எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வரவேற்றுள்ளது. அக்கட்சியின் செனட் வெளியுறவு சபைத் தலைவர் ஜோசப் பிடன் கூறியதாவது;
ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெற காலக்கெடு நிர்ணயிப்பதற்கு இதுவரை பிடிவாதமாக எதிர்ப்பு தெரிவித்து வந்த புஷ்ஷின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்தை நான் வரவேற்கிறேன். இறுதியாக அவர் உண்மை நிலையை புரிந்து கொண்டுள்ளார். எனத் தெரிவித்துள்ளார்.