* சமிந்தவாஸ் கூறுகிறார்
டெஸ்ட் தொடரில் இலங்கை வீரர்களுக்கு இஷாந்த் சர்மா கடும் நெருக்கடி கொடுப்பாரென சமிந்த வாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை வந்துள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் 23 ஆம் திகதி கொழும்பில் தொடங்குகிறது. இதற்கான பயிற்சி ஆட்டத்தில் தற்போது இந்திய அணி ஆடிவருகிறது. இதில் பந்து வீசிய இஷாந்த் சர்மா முதல் இனிங்ஸில் ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றினார். இவரது பந்து வீச்சை இலங்கை வீரர் சமிந்த வாஸ் புகழ்ந்துள்ளார்.
இதுபற்றி வாஸ் கூறியதாவது; இஷாந்த் பந்து வீச்சை தொடர்ந்து கவனித்து வருகிறேன். சர்வதேச அளவில் அவரது பந்து வீச்சின் முறை எனக்குப் பிடித்துள்ளது. வழக்கமாக வேகமாக பந்து வீசும் இஷாந்த் உருவத்திற்கு ஏற்ப, பந்து வீசும் கை அளவும் உயரமாக வருவதால், துடுப்பாட்ட வீரர்கள் பந்து எந்தளவில் வீசப்படுகிறது என்பதைக் கவனிப்பது கடினமாகும். டெஸ்ட் தொடரில் இலங்கை வீரர்களுக்கு நெருக்கடி கொடுப்பார்.
வழக்கமாக எந்த ஒரு அணிக்கும் இலங்கையை அதன் சொந்த மண்ணில் முரளிதரனின் பந்து வீச்சுடன் எதிர்கொள்வது அபாயத்தைத் தரும். இவருடன் இப்போது மென்டிஸும் சேர்ந்துகொண்டுள்ள செய்தி இந்திய அணிக்கு நிச்சயம் ஒரு அபாய அறிவிப்புதான். இது புகழ்பெற்ற துடுப்பாட்ட வரிசை கொண்ட அணிக்கும் ஆபத்தான துடுப்பாட்ட வரிசையை வைத்துள்ள அணிக்கும் எதிரான விறுவிறுப்பான போராட்டம் நிறைந்த தொடராக இருக்கும்.
அதற்காக முரளிதரனையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. இந்தியாவின் முக்கிய அபாயமே முரளிதரன்தான். ஆனால், மென்டிஸ் இப்போது தான் முதன்முதலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்கிறார். ஆசிய கிண்ணப் போட்டியின்போது தனது சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்தினார். டெஸ்ட் தொடரில் மன்னர்கள் சச்சின், செவாக், டிராவிட், கங்குலி, லட்சுமண் ஆகியோருக்கு எதிராக அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பந்து வீச்சில் சிறப்பாக செயல்படுகிறேன். நான் விக்கெட்டுகள் எடுப்பதும் ஓட்டங்கள் எடுப்பதும் என்று நின்று விடுகிறதோ அன்று முதல் இலங்கைக்காக கிரிக்கெட் ஆடுவதை நிறுத்திவிடுவேனென்றும் தெரிவித்தார்.