அநுராதபுர விவேகானந்த சபைத் தலைவர்
"அன்னையின் இழப்பும் சுவாமியின் இழப்பும் அநுராதபுரம் வாழ் இந்து மக்களுக்கு பேரிழப்பாகும். 2000ஆம் ஆண்டில் அநுராதபுரத்தில் இந்து சமய கலாசாரங்கள் துளிர்விட ஆரம்பித்ததையடுத்து எமக்கு ஆலோசனைகள், உதவிகள் வழங்கிய இரு பெரியார்களை நாம் இழந்துவிட்டோம்'.
இவ்வாறு சிவஸ்ரீ பா.ஞானச்சந்திரக் குருக்கள் தெரிவித்தார். இம்மாதம் 6ஆம் திகதி அநுராதபுரம் விவேகானந்த சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இறையடி சேர்ந்த சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, சுவாமி தந்திரதேவா மகராஜ் ஆகியோருக்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனை அஞ்சலி நிகழ்விலேயே அநுராதபுரம் விவேகானந்த சபைத் தலைவரும் அநுராதபுரம் ஜயந்தி மாவத்தை பிள்ளையார் கோவில், கதிரேசன் கோவில், நீராவியடி முத்துமாரியம்மன் கோவில் ஆகியவற்றின் பிரதம குருவுமாகிய பா.ஞானச்சந்திரக் குருக்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தனது அஞ்சலி உரையில்;
"எமது சமய, சமூகப் பணிகளுக்காக உதவும் அன்னையை நேரடியாக சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அந்நாளில் அநுராதபுரம் விவேகானந்த சபையினரின் ஏற்பாட்டில் அன்னையின் குரல் அநுராதபுர ஸ்ரீ கதிரேசன் ஆலய வருடாந்த உற்சவங்களில் தொடராக ஒலித்த அனுபவங்கள் மறக்கமுடியாதவை. எமது அநுராதபுரம் விவேகானந்த தமிழ் மகாவித்தியாலய வைர விழா அலங்கார வளைவு அமைக்க உதவி கேட்டு எழுதியபோது அவர் நிதி வழங்கி உதவியதும் மறக்கமுடியாதது.
அதேபோல சுவாமியவர்களின் திருப்பாதமும் எம்மண்ணில் பட்டு, எமது ஆலயத்தில் அருளுரை செய்தது நாம் செய்த பாக்கியமே. அநுராதபுரத்தில் இந்து சமய கலாசாரத்தை வளர்ப்பதே நாம் இவர்களது ஆத்மாக்கள் சாந்தியடையச் செய்யும் கடமையாகும்' என்றார்.
சபையின் செயலாளர் க.இராசையா, முத்துமாரியம்மன் ஆலயத் தலைவர் அ.சந்திரன், செயலாளர் பாலகுமார் ஆகியோரும் இவ்விரு பெரியார்களைப் பற்றியும் இவர்களை ஆலய பரிபாலன சபையினர் சந்தித்தபோது ஏற்பட்ட அனுபவங்களையும் நினைவு கூர்ந்தனர்.