மன்னாரில் விடத்தல் தீவை எமது படையினர் தீரத்துடன் போராடி கைப்பற்றியுள்ளனர். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டு வாசல் அருகில் எமது படையினரின் வெடிச்சத்தங்கள் கேட்டவண்ணமுள்ளன. விரைவில் சகல பிரச்சினைகளுக்கும் முடிவு காணப்பட்டு சகல இன மக்களுக்கும் வளமான வாழ்வை எமது அரசு வழங்கியே தீரும்.
போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும இவ்வாறு தெரிவித்தார்.
திக்குவெல்லை ரதம்பொலையில் உள்ள கிராமிய வைத்தியசாலைக்கு 83 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இரண்டு மாடிக் கட்டிடத்துக்கும், 120 இலட்சம் ரூபா செலவில் வாவி ஒன்றை புனரமைக்கவும் அத்திவாரக் கல்லை நாட்டும் வைபவத்தில் அமைச்சர் உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார்.
போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தொடர்ந்து பேசுகையில்;
யுத்தம் ஒன்று நடைபெறுகின்ற நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கத்தான் செய்கிறது. நெருக்கடிகள் இருக்கத்தான் செய்கிறது அரைப்பட்டினி இருந்தாவது பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை மீட்டெடுப்போம்.
அரசாங்கம் இன்று பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதை சில பிற்போக்குச் சக்திகள் பொறுக்க முடியாது அரசுக்கெதிராக பொய்ப் பிரசாரங்களை கட்டவிழ்த்துக் கொண்டிருக்கின்றன. இதனை பொதுமக்கள் நம்புவதேயில்லை. ஐ.தே.க. இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த நாளிலிருந்தே அதனைக் கவிழ்த்துவிட இல்லாத பொல்லாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அரசாங்கத்துக்கு ஆரம்பத்தில் ஆதரவு வழங்கிய ஜே.வி.பி. யினரும் இப்போது ஐ.தே.க.வுடன் சேர்ந்து அரசைக் கவிழ்க்க வழி தேடுகிறது.
மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி தற்காலிகமானதே. இன்னும் 6 மாதத்தில் அல்லது ஒரு வருடத்துக்குள் நாம் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுப்போம். அதன் பின் இந்த நெருக்கடிகளிலிருந்து மக்களை விடுவித்து வளமான வாழ்வை அவர்களுக்கு வழங்குவோம்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசு இன்று இரண்டு குறிக்கோள்களை முன்னெடுத்துச் செல்கிறது. ஒன்று பயங்கரவாதத்தை அடியோடு ஒழிப்பது. மற்றது மகிந்த சிந்தனையை நிறைவேற்றுவது மகிந்த சிந்தனையின் மூலம் தான் யுத்தம் செய்து கொண்டிருக்கையிலேயே அபிவிருத்தித் திட்டங்களையும் அரசு செய்கிறது.
நடைபெறப்போகின்ற சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தலிலும், வடமத்திய மாகாண சபைத் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சி மண் கவ்வப்போவது நிச்சயமாகிவிட்டது.
கொழும்பில் இருந்து முதலமைச்சர் வேட்பாளர்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு ஐக்கிய தேசியக்கட்சி வங்குரோத்து நிலையில் உள்ளது. இவர்கள் என்ன சொன்னாலும் மக்களின் ஆதரவு எமக்கே உள்ளது! அரசை எவராலும் அசைக்க முடியாது.
அண்மையில் ஜே.வி.பி.யும், ஐக்கிய தேசியக்கட்சியும் சேர்ந்து நடத்திய வேலைநிறுத்தப் போராட்டமும் படுதோல்வியில் முடிவுற்றது என்றார்.
அமைச்சர் ஜயரட்ண ஹேரத்
சுகாதார நோய் நிவாரண போஷாக்கு அமைச்சர் ஜயரட்ண ஹேரத் தமது உரையில் கூறியதாவது;
அமைச்சர் டலஸ் அழகப்பெரும தனது சொந்த ஊரான திக்குவல்லை ரதம்பொலயில் மட்டுமல்ல ஏனைய பகுதிகளுக்கும் சிறந்த சேவைகளையாற்றிவருகின்றனர் என்றார்.
வேறு பலரும் இதில் உரையாற்றினார்கள்.