*பிரதி அமைச்சர் பாயிஸ்
""பொருட்களின் விலை உயர்வு வாழ்க்கைச் செலவு அதிகரிப்புப் பற்றி பேசுவதை விட ஒவ்வொருவரும் தங்களது குடும்ப வருமானத்தை உயர்த்தும் வழிகளைக் காண்பதுவே முக்கியமான விடயமாகும்' என கால்நடை அபிவிருத்தி பிரதி அமைச்சர் கே.ஏ. பாயிஸ் தெரிவித்தார்.
புத்தளம் சிரம்பியடி கிராம அலுவலர் பிரிவில் இடம்பெற்ற மீள் எழுச்சி வேலைத்திட்டம் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இவ்வருடத்திற்கான மீள் எழுச்சி அபிவிருத்தித் திட்டத்திற்காகத் தெரிவு செய்யப்பட்ட புத்தளம் பிரதேச செயலக பிரிவிலுள்ள கிராம அலுவலர் பிரிவுகளில் சிரம்பியடி பிரிவில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக ஆராயும் இக்கூட்டத்தில் தொடர்ந்து பேசிய பிரதி அமைச்சர் பாயிஸ் மேலும் கூறியதாவது;
""இன்று நாட்டில் ஒரு பகுதியில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எமது அரசு யுத்தத்தைக் காரணம் காட்டி பின்தங்கிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகளைப் பிற்போடவில்லை. சகல அபிவிருத்திப் பணிகளும் அவ்வாறே முன்னெடுக்கப்படுகின்றன.
இன்று எமது பசுக்களில் இருந்து இரண்டு லீற்றர் பாலையே நாம் பெறுகின்றோம். இதனை 20 முதல் 30 லீற்றராக அதிகரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நல்ல இன பசுக்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளன. இவை மக்களுக்கு வழங்கப்பட்டு அவர்களின் குடும்ப வருமானத்தை அதிகரிப்பதே எமது நோக்கமாகும். இந்த சிரம்பியடி பிரதேசம் மிருக வளர்ப்புக்கு மிகவும் ஏற்ற ஒரு பிரதேசமாகும். முயல் வளர்ப்பு மூலம் மாதம் கணிசமான வருமானத்தைப் பெற முடியும். இவ்வாறு உயர் இனப் பசுக்கள், காடைக்கோழிகள், முயல்கள் என்பனவற்றை எமது அமைச்சின் மூலம் நாம் மக்களுக்கு பகிர்ந்தளித்துள்ளோம்.
இன்று உலக சந்தையில் எரிபொருள் விலையேற்றம் காரணமாக எமது நாடு மாத்திரமின்றி சகல நாடுகளிலுமே வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. பெற்றோலிய பொருட்களின் விலையேற்றம் நிகழுமானால் அதனால் பொருட்களின் விலையேற்றம் ஏற்படுவது சகஜமே.
இக்கூட்டத்தில் அமைச்சர் மில்ரோய் எஸ். பெர்னாண்டோ, புத்தளம் உதவி பிரதேச செயலாளர், மீள் எழுச்சி திட்டப்பணிப்பாளர் உட்பட பிரதேச மக்களும் கலந்துகொண்டனர்.