நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தையொட்டி ஏற்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கான விசேட கூட்டமொன்று வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் மாநகரசபை கேட்போர் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதற்கு யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் மு.செ. சரவணபவ தலைமை தாங்கினார்.
இக் கூட்டத்தில் யாழ். பிராந்திய மின்சார சபை ஆலய வளாகத்துக்கு மின் வழங்க இணக்கம் தெரிவித்தது. இலங்கைப் போக்குவரத்துச் சபையும் தனியார் பஸ் போக்குவரத்துக் கழகமும் குடாநாடு முழுவதும் இருந்து ஆலயவளாகத்துக்கு விஷேட பஸ் சேவைகளை நடாத்த முடிவு செய்துள்ளனர்.
பொலிஸார் ஆலயவளாகத்துக்கு வெளியே கடமையில் ஈடுபடவும் முறைப்பாடுகளைப் பதிய தற்காலிக பொலிஸ் நிலையம் அமைக்கவும் இணக்கம் தெரிவித்தனர்.
சென். ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் படைப் பிரிவு, செஞ்சிலுவைச் சங்கம், யாழ். மாநகர சபை சுகாதாரப் பிரிவு ஆகியவை கூட்டமாக அடியார்களுக்கு மருத்துவ வசதி வழங்கும்.
மக்கள் நலன் காக்கும் பிரிவு, இளைஞர் மன்றம், அறநிலைப் பாடசாலை மாணவர், சாரணர் இயக்கம் கூட்டாக அடியார்களின் நலன்களைக் கவனிப்பதென முடிவு செய்துள்ளனர்.
நல்லூர் உற்சவம் ஆகஸ்ட் 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.