* துணைவேந்தர் கூறுகிறார்
எமது சமூக வாழ்வோடு அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்திற்கு நீண்ட தொடர்பிருக்கின்றது. இந்த நிறுவனத்தால் தொடங்கப்படுகின்ற ஆற்றல் மேம்பாட்டு நிலையம் அனைவருக்கும் பயனுடையதாக இருக்கவேண்டுமென்று யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் தெரிவித்தார்.
அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தில் அமைக்கப்பட்ட மனித ஆற்றல் மேம்பாட்டு நிலையத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே துணைவேந்தர் இவ்வாறு தெரிவித்தார்.
நிறுவனத் தலைவர் பேராசிரியர் வே.ப. சிவநாதன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் துணைவேந்தர் மேலும் உரையாற்றுகையில்;
சமூகச் செயற்பாடுகள் அனைத்தும் தற்போது அறிவாக வளர்ந்து வருகின்றன. எமது நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலெல்லாம் சமூக வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்குப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அறிவுப் பயிற்சி என்பனவெல்லாம் இப்போது நிஜமானதாக இருக்கின்றன.
யாழ். குடாநாட்டில் பணியாற்றுகின்ற சமூகச் செயற்பாட்டாளர்களுக்கான பயிற்சிகள் இந்த மாவட்டத்திலேயே வழங்கப்படவேண்டும். அப்போதுதான் பிரச்சினைகளைப் பற்றிய உண்மையான விடயங்களைப் பயிற்சியாளர்கள் உணர்வு பூர்வமாகப் பெற்றுக்கொள்ள முடியும். பயிற்சிகளுக்கு சூழல் அமைவு முக்கியமானதாகின்றது.
அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தால் தொடங்கப்பட்டிருக்கின்ற மனித ஆற்றல் மேம்பாட்டு நிலையம் சமூகத்திற்கு வேண்டிய நல்ல வளவாளர்களை உருவாக்க வேண்டும். இங்கே நடைபெறவிருக்கின்ற பயிற்சிப் பட்டறைகளில் மாணவர்களையும் இணைத்துக் கொள்வது நன்மை பயக்கும்.
மனிதர்களுடன் உறவுகளை ஏற்படுத்திக்கொள்வது எவ்வாறென்பது தான் இன்று சமூகத்திலிருக்கின்ற முக்கியமான பிரச்சினையாகும். எமது சமூகத்தை மேம்படுத்துகின்ற சிறப்பான சமூக அணியை உருவாக்க இந்த மனித ஆற்றல் மேம்பாட்டு நிலையம் உதவ வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத் தலைவர் பேராசிரியர் வே.ப.சிவநாதன் தனது தலைமையுரையில்;
அரச சார்பற்ற நிறுவனமாகிய அகதிகள் புனர்வாழ்வு நிறுவனமானது மனித ஆற்றல் மேம்பாட்டு நிலையமென்ற ஒரு அமைப்பை வைத்திருப்பது ஏனைய நிறுவனங்களுக்கும் பயனுடையதாகவிருக்கும்.
எந்தவொரு நிறுவனமும் இந்த அமைப்பினூடாகத் தனித்த ஒரு செயற்றிட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். அதற்கு இந்த அமைப்புத் துணை நிற்கும். அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தின் இந்தச் செயற்பாடு நிறுவனத்திற்குரியதல்ல. இது மக்களுக்கானது. எங்கேயும் எந்தவொரு மேம்பாட்டை அடைவதற்கு எவர் விரும்பினாலும் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தை நாடி வரலாம்.
அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்துடன் கிறிஸ்தவ நிறுவனம், யு.என்.எச்.சி.ஆர். போன்ற நிறுவனங்கள் பங்காளி நிறுவனங்களாக இணைந்து செயற்படுகின்றன. தற்போது ஐ.ஓ.எம். நிறுவனமும் பங்காளராக இணைந்துள்ளது. இடம்பெயர்ந்தோர் மற்றும் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டோர் போன்றோருக்கு அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் சிறப்பாகச் சேவையாற்றி வருகின்றது.
மனித மேம்பாடு என்பது, வைத்தியத்துறை மற்றும் வைத்திய சேவை என்பவற்றுடனும் தொடர்புடையதாக இருக்கின்றது. இதற்கு யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் துணை நிற்கின்றார்கள் என்றும் தெரிவித்தார்.