அம்பாறை மாவட்டத்தில் நுளம்பினால் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்முனை கரையோரப் பிராந்திய மலேரியா, பாலியல் தடுப்பு அதிகாரி டாக்டர் எம்.எம்.மாஹிர் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக மருந்தூட்டப்பட்ட நுளம்பு வலைகளை சர்வதேச பிராந்திய இணைப்பாளர் சாமுவேல் சந்திரசேகரத்தின் மேற்பார்வையில் கிராமம் கிராமமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை பெரியநீலாவணை, கல்முனை, திரவந்தியமேடு,காரைதீவு,திருக்கோவில், பொத்துவில் ஆகிய பிரதேசங்களில் நாலாயிரம் வலைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக சாமுவேல் சந்திரசேகரம் தெரிவித்தார்.
கல்முனை வெஸ்லி உயர்தரப் பாடசாலை,கார்மேல் பாத்திமா கல்லூரி, தேசிய பாடசாலை ஆகியவற்றின் விடுதி மாணவர்களுக்கும் நுளம்பு வலைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்த நுளம்பு வலை விநியோகம் பொதுச்சுகாதார பரிசோதகர்களான யோகானந்தம், எஸ்.கருணாசலம், எஸ்.வேல்முருகு, ஆகியோரால் டாக்டர் என்.ரமேஸின் வழிகாட்டலில் இடம்பெற்றது.
மாவட்டத்தில் நுளம்புகளால் பரப்பப்படும் நோய்களாக மலேரியா, டெங்கு,ஆனைக்கால் போன்ற நோய்கள் இனம் காணப்பட்டுள்ளன. மருந்தூட்டப்பட்டுள்ள நுளம்பு வலைகளை சர்வவோதயம் வழங்கிவருவதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.எம்.நசீர் தெரிவித்தார்.