தெற்காசிய நாடுகளிலுள்ள மண்ணினதும் மக்களினதும் அழிவிற்கும் அநியாயங்களுக்கும் காரணமான அனைத்து நடவடிக்கைகளுக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்படல் வேண்டும். இம்மக்களினது வளமான வாழ்விற்கு சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மக்கள் சார்க் மாநாடு என்று அழைக்கப்படுகின்ற "தெற்காசிய மக்கள் மகாநாடு 2008' கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டு நேற்றுஞாயிற்றுக்கிழமையுடன் மூன்று நாட்களாக இடம்பெற்றது. இம்மகாநாட்டில் சார்க் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் 500 பேரும் இலங்கையைச் சேர்ந்த 500 பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு இராமேஸ்வரத்திலிருந்து வருகை தந்துள்ள மீனவர் சங்கத் தலைவர் தேவதாஸ் இந்திய இலங்கை அப்பாவி மீனவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆரம்பவிழாவில் இலங்கையின் சர்பில் உரையாற்றிய அமைப்புக்குழு உறுப்பினர்களான நிமல்கா பெர்னாண்டோவும் எஸ்.பி. அந்தோனிமுத்துவும் எல்லைகளற்ற ஒரு சார்க் இராச்சியம் உருவாக்கப்படல் வேண்டும் என்றும் இலங்கையர்களாகிய எமக்கு மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம் என்றும் உறுதியெடுத்தனர்.
மூன்று நாள் செயலமர்வுகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பிரகடனப்படுத்தப்பட்டு சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு சமர்ப்பிக்கப்படும். இதேவேளை, தமிழ்நாட்டிலிருந்து வந்துள்ள தமிழ்நாடு, பாண்டிச்சேரி, இராமேஸ்வர மீனவ சம்மேளனத்தின் தலைவர்களுக்கும் இலங்கை அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்குமிடையேயான சந்திப்பில் மீனவ சமுதாயம் இன்று முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இச்சந்திப்பிற்கான ஏற்பாடுகளை ஜனநாயக இடதுசாரி முன்னணித் தலைவர் வாசுதேவ நாணயக்கார, எஸ்.பி. அந்தோனி முத்து, முகமட் மஹ்ரூப் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.