தனது தந்தையால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பன்னிரண்டு வயது மகள் விரக்தியுற்று தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்த துயர சம்பவம் அக்கரைப்பற்றில் இடம்பெற்றுள்ளது.
இச்சிறுமியின் மரண விசாரணை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நகர மரண விசாரணை அதிகாரி எட்வேட் அகங்கம முன்னிலையில் நடைபெற்ற போது இத்தகவல் தெரியவந்தது.
இறந்த சிறுமி தீக்காயங்களுடன் முதலில் அக்கரைப்பற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டு தீவிர சிகிச்சையின் பின்னர் மரணமானார்.
கடல்கோளினால் பாதிக்கப்பட்ட தமது குடும்பத்தில் 16 வயதுடைய மூத்த மகள் மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரையும் தனது கணவன் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார் எனவும் மரண விசாரணையில் சாட்சியம் அளித்த தாயார் கூறினார்.
தனது இளைய மகளையும் தந்தையார் கெடுத்த சம்பவத்தையடுத்து அவர் மண்ணெண்ணெயை தன்மீது ஊற்றி தீமூட்டினார் எனவும் தாயார் தனது சாட்சியத்தில் கூறினார்.
மரண விசாரணை முடிவில் தற்கொலை எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.